வெப்பத்தில் இருந்து காக்கும் ‘வெள்ளைக் கூரைகள்’?


வெப்பத்தில் இருந்து காக்கும் ‘வெள்ளைக் கூரைகள்’?
x
தினத்தந்தி 15 Jun 2019 10:36 AM GMT (Updated: 15 Jun 2019 10:36 AM GMT)

கோடையின் உச்சம் கடந்துபோய்விட்டாலும், இன்னும் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கிறது.

வெப்பத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அவற்றின் ஒன்றுதான், கட்டிடத்தின் மேற்கூரைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பது.

இதனால் வெப்பம் குறையுமா? அப்படியானால், எவ்வளவு குறையும்?

ஒரு கட்டிடத்தின் கூரைக்கு வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசுவது, சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து, அந்தக் கட்டிடத்துக்குள் ஊடுருவும் வெப்பத்தைக் குறைப்பதாக நீண்டகாலமாக அறியப்படுகிறது.

இதன்மூலம், கட்டிடத்துக்குள் ஊடுருவும் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கப்படலாம் என்றும், இதனால், கட்டிடத்தின் உள்ளே உள்ள வெப்பம் 7 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம் என்றும் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறினார்.

எந்த ஆய்வின் அடிப்படையில் இத்தகவலை அவர் தெரிவித்தார்?

கோடைகால வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் இந்தியாவின் ஆமதாபாத் நகரில் நடத்திய முன்னோடி செயல்திட்டம் பற்றி பான் கி மூன் குறிப்பிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு, வெள்ளைச் சுண்ணாம்பு மற்றும் ஒளியைப் பிரதிபலிக்கும் சிறப்பான மேல்பூச்சுக் கொண்டு ஆமதாபாத் நகரின் 3 ஆயிரம் கட்டிடங்களின் கூரைகளில் பெயிண்ட் அடிக்கப்பட்டது.

‘குளிர்ச்சி தரும் கூரை’ என்று அறியப்பட்ட இந்தத் திட்டம், சூரிய ஒளியின் வெப்பம் கட்டிடத்திற்குள் கிரகிக்கப்படுவதை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம், கட்டிடத்துக்குள் மிகக் குறைவான வெப்பமே ஊடுருவும் என்று நம்பப்பட்டது.

இத்தகைய குளிர்ச்சி தரும் கூரைகள், ஒரு கட்டிடத்துக்குள் இயல்பாக ஊடுருவிச் செல்லும் வெப்பத்தைச் சற்றுக் குறைக்கின்றன. இதனால் அந்தக் கட்டிடம் சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட இந்தச் செயல்திட்டத்தின் ஆவணமானது, சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கூரையின் மேல்பூச்சு, 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் குறைக்க உதவலாம் என்றும், கட்டிடத்தின் உள்ளே வெப்பத்தை 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கலாம் என்றும் தெரிவித்தது.

ஆனால், குறிப்பிட்ட தகவல் இந்தத் திட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட முடிவுஅல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியக் கூரைகளோடு ஒப்பிடுகையில், அமைக்கப்பட்டுள்ளதைப் பொறுத்து குளிர்ச்சிதரும் கூரைகள் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் தட்பவெப்ப நிலையை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கலாம் என, ஆமதாபாத் செயல்திட்டத்தை மேற்பார்வை செய்த, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய மூலவள பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த அஞ்சலி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.

பான் கி மூன் தெரிவித்ததைவிட இந்தப் புள்ளிவிவரம் சற்றுக் குறைவாக இருந்தாலும், கணிசமான அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஐதராபாத்தில் நடைபெற்ற இன்னொரு முன்னோடி செயல்திட்டத்தின் மூலம், குளிர்ச்சி தரும் கூரை மேல்பூச்சை பயன்படுத்துவது, கட்டிடத்துக்குள் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைப்பது தெரியவந்தது.

கட்டிடத்தின் உள்ளே 30 டிகிரி வரை வெப்பம் குறைவதாக பான் கி மூன் தெரிவித்ததற்கு, குஜராத் முன்னோடி செயல்திட்டத்தில் எந்த விடையும் கிடைக்கவில்லை.

ஆனால், அமெரிக்கா கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட பெர்கிலே ஆய்வகத்தின் ஆய்வு கண்டுபிடிப்புகளைக் கொண்டு, சில வழிகாட்டுதல்களை நாம் பெறலாம்.

இந்த ஆய்வு, கோடைகால மதிய வேளையில், 80 சதவீத சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் சுத்தமான வெள்ளை நிறக் கூரை, சுமார் 32 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கிறது என்று கண்டுபிடித்தது.

Next Story