சிறப்புக் கட்டுரைகள்

உஷாரய்யா உஷாரு + "||" + Usharya Usharu

உஷாரய்யா உஷாரு

உஷாரய்யா உஷாரு
அவனுக்கு நாற்பது வயது. 17 வயதில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் ஆரம்பித்த ‘பழக்கம்’, அப்படியே கூடவே ஒட்டிக்கொண்டது.
வனுக்கு நாற்பது வயது. 17 வயதில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் ஆரம்பித்த ‘பழக்கம்’, அப்படியே கூடவே ஒட்டிக்கொண்டது. நண்பர்களும் அதற்கு ஏற்றாற்போல் அமைந்துவிட பழக்கம், வழக்கமாகி முதலில் பள்ளி வாழ்க்கையை சீரழித்தது. ‘பிளஸ்-டூ’வில் தோல்வி அடைந்தான்.

பரீட்சையில் தோற்றதைவிட, ‘மகன் இந்த வயதிலே குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டானே!’ என்ற கவலையே அவனது தந்தையை கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.

‘உங்கள் மகன் குடித்துவிட்டு அங்கே சுற்றுகிறான்.. இங்கே சுற்றுகிறான்..’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்கமுடியாமல் பெருங்கவலை கொண்ட தாயார், ‘நீ இங்கே இருந்தால் திருந்துறது கஷ்டம். அதனால எங்க கண்ணுக்கு காணாத தூரத்தில் எங்கேயாவது போய் திருந்தி பொழைச்சுக்கோ..’ என்று கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து, மகனை அனுப்பிவைத்தார்.

‘மகன் குடிப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, உழைத்து பெரிய மனிதனாகி என்றாவது ஒருநாள் தலைநிமிர்ந்து தன் முன்னால் வந்து நிற்பான்’ என்ற கனவோடு, தாயார் காத்திருந்தார்.

இதோ 23 வருடங்கள் கடந்துபோய்விட்டன. அவன், தாயாரை தொடர்புகொள்ளவேயில்லை. ஆனால் தனது மகனை பற்றிய கனவு மட்டும் அந்த தாயாரின் நினைவில் கலையாமல் இருந்துகொண்டிருந்தது.

அவன் பிரபலமான சந்தை அமைந்திருக்கும் பகுதி ஒன்றில், சுமட்டுத் தொழிலாளியாக வேலைபார்த்தான். ஓரளவு பணம் சேர்ந்திருந்தது. அவனது இத்தனை வருட வாழ்க்கையில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியது ஒன்றுதான். அது அவன் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டதுதான். குடிப்பழக்கத்தால் அவனது தாம்பத்ய வாழ்க்கையும் தோல்வியில்தான் முடிந்தது.

முதல் மனைவி, அவனது குடிப்பழக்கத்தை சகித்துக்கொள்ள முடியாமல் ‘தனக்கு சாப்பாடுகூட போடாமல், தினமும் குடித்துவிட்டு வந்து அவன் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்கிறான்’ என்ற குமுறலோடு விலகிச் சென்றுவிட்டாள். சில வருடங்கள் கழித்து, இரண்டாவதாக ஒருத்தி வந்து ஒட்டிக்கொண்டபோது, குடி நோயால் அவன் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அவனை பராமரித்தபடி, அவனிடம் இருந்த பணத்தை அவள் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

நாளுக்கு நாள் தனது உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான். அதனால் தான் சேமித்துவைத்திருந்த பணத்தை எல்லாம் அவளிடம் கொடுத்து ‘என்னை ஏதாவது ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சேர்த்து தரமான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்’ என்றான். பணத்தை வாங்கிக்கொண்ட அவள் அரசு மருத்துவமனை ஒன்றில்கொண்டுபோய் அவனை சேர்த்தாள்.

வாரங்கள் பல கடந்தும் அவன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக பாதிப்புதான் அதிகமாகிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், அவன் அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருந்த அவனது மனைவியை திடீரென்று நாலைந்து நாட்களாக காணவில்லை.

மருத்துவமனை ஊழியர்கள் அவளது செல்போனுக்கு அழைத்தார்கள். அவள் எடுத்து பேசவில்லை. நாலைந்து நாட்களாக தொடர்ந்து அழைத்த பின்பு, அந்த ஊழியரின் எண்ணில் தொடர்புகொண்ட அவள் ‘அவர் இனி உயிர் பிழைப்பது கடினம். அவரை நம்பி நான் வாழ முடியாது. நான் அவரை ஒரு மாதத்துக்கும் மேலாக அருகில் இருந்து கவனித்தேன். அப்போது அவரது பெட்டுக்கு அருகில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அந்த இளைஞர் டிஸ்சார்ஜ் ஆனதும் அவரோடு நானும் கிளம்பிவந்துட்டேன். நாங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனிமேல் என்னை தொந்தரவு பண்ணாதீங்க..’ என்று கூறி, அவரது தாயாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொள்ளும்படி கூறியிருக்கிறாள்.

கையில் சல்லிக்காசுகூட இ்ல்லாமல் படுத்தபடுக்கை யாக கிடக்கும் மகனை, 23 வருடங்கள் கழித்து மருத்துவமனையில் பார்த்த தாயார், அழுது அரற்றிக்கொண்டு அருகில் இருந்து கவனிக்கிறார். அவன் மனதொடிந்துபோய் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்!

மது எவ்வளவு கொடியது பாருங்கள்!!

- உஷாரு வரும்.

தொடர்புடைய செய்திகள்

1. உஷாரய்யா உஷாரு..
அவர் உயர்பதவி வகிப்பவர். சமூக செல்வாக்கும் கொண்டவர். அவரது நடை, உடை எல்லாமுமே மற்றவர்களை வசீகரிக்கும் விதத்தில் இருக்கும். பேச்சில் வல்லமை கொண்டவர். பேசிப் பேசியே தான் நினைப்பதை சாதிக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
2. உஷாரய்யா உஷாரு..
அவள் பெற்றோருக்கு ஒரே மகள். சிறுமியாக இருந்தபோதே தந்தை குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்துவந்தாள். படித்துவிட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக் கிறாள்.
3. உஷாரய்யா உஷாரு
அவள் நடுத்தர வருவாய் குடும்பத்தில் பிறந்தவள். சிறுவயதில் இருந்தே நடனத்தில் அதிக ஈர்ப்பு இருந்தது. தாயார், அவளது நடன ஆர்வத்தை புரிந்துகொண்டு நடன பயிற்சி வகுப்புக்கு அனுப்பிவைத்தார்.
4. உஷாரய்யா உஷாரு
அவள் வயது 24. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள்.
5. உஷாரய்யா உஷாரு
அவர்கள் இல்லற வாழ்க்கை மிக அமைதியாக சென்றுகொண்டிருந்தது. திருமணமாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அதை அவர்கள் ஒரு குறையாக கருதவில்லை.