அழகுக்கு ஆயிரம் கண்கள்


அழகுக்கு ஆயிரம் கண்கள்
x
தினத்தந்தி 16 Jun 2019 9:43 AM GMT (Updated: 16 Jun 2019 9:43 AM GMT)

கோவையை சேர்ந்த பல் மருத்துவர் காயத்ரி பிலிப்பைன்ஸ் சிபு சிட்டியில் நடந்த ‘மிஸஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே போட்டியாளர்.

கோவையை சேர்ந்த பல் மருத்துவர் காயத்ரி பிலிப்பைன்ஸ் சிபு சிட்டியில் நடந்த ‘மிஸஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே போட்டியாளர். இவர் ‘மிஸஸ் ஈஸ்ட் ஏசியா’ மற்றும் ‘மிஸஸ் ஹானஸ்டி’ ஆகிய இரு பட்டங்களை வென்றுள்ளார். இந்த அழகிப் போட்டியில் இவர் தனது தனித்திறமைகளை நிரூபித்ததோடு, சமூக சேவையிலும் தனது ஈடுபாட்டைக்காட்டியுள்ளார். அதுவும் இவர் பட்டங்கள் பெற காரணமாக இருந்திருக்கிறது. இவருக்கு 32 வயது.

‘‘மிஸஸ் கோவை, மிஸஸ் இந்தியா பட்டங்களை வென்றதன் மூலம் இந்தியா சார்பில் மிஸஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிபு சிட்டியில் இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 100 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டோம். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற சுஷ்மிதாசென் பங்கேற்ற மேடையில், 9 சுற்றுகளாக இந்த போட்டி நடந்தது. நான் எனது கணவரோடு அங்கு சென்று பத்து நாட்கள் தங்கியிருந்து போட்டியில் பங்கேற்றேன். அந்த அனுபவங்கள் மிக அற்புதமாக அமைந்திருந்தன’’ என்கிறார், டாக்டர் காயத்ரி. அதில் இவர் தனது நாட்டியத்திறமையையும் அரங்கேற்றி பாராட்டு பெற்றிருக்கிறார்.

‘‘போட்டியில் கேள்விப்பதில் சுற்று குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்தியா பற்றியும், நமது பிரதமர் நரேந்திர மோடி பற்றியும், உலக அளவிலான பொது அறிவு கேள்விகளையும் கேட்டார்கள். எனக்கு பொது அறிவில் ஆர்வம் அதிகம் என்பதால், சிறப்பாக பதில்அளித்தேன். நீச்சல் உடையில் தோன்றச் செய்து உடல் கட்டுக்கோப்பையும் மதிப்பிட்டனர். எல்லாவற்றிலும் நான் முன்னணியில் இருந்தேன்.

முடிவில் சமூக சேவையில் எங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை அறிந்துகொள்வதற்காக அந்த நாட்டில் உள்ள ஆதரவற்றோர் மையத்திற்கு எங்களை அழைத்துச்சென்று, அவர் களுக்கு சேவையாற்றும்படி கூறினார்கள். நானும் அதில் முழுமனதோடு ஈடுபட்டேன். அதன் பின்புதான் என்னை தேர்வு செய்தார்கள்’’ என்றார்.

‘திருமணமான பெண்களுக்கு அழகிப்போட்டி ஏன் அவசியம் என்று கருதுகிறீர்கள்?’ என்ற கேள்வியை டாக்டர் காயத்ரி முன்வைத்தபோது..

‘‘அழகிப்போட்டி என்பது வெறும் புற அழகை மட்டும் காட்டுவதுஅல்ல. ஒட்டுமொத்த அழகின் தரத்தை உணர்ந்துகொள்ளவைப்பது. அழகு என்பது உடலில் இருக்கும் உறுதி, மனதில் இருக்கும் ஆற்றல், பொது அறிவுத்திறனில் இருக்கும் மேலாண்மை போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. அதை தவிர சமூக சேவையில் இருக்கும் அக்கறையையும், தனித்திறமைகளையும் அளவிடுகிறார்கள். அதனால் இதுவும் புதுமைப் பெண்களுக்குரிய புரட்சிப்பாதைதான்’’

இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது?

‘‘நான் பரதம் கற்று தேர்ச்சிபெற்றிருக்கிறேன். அதோடு வீணையும், கர்நாடக இசையும் கற்று நிகழ்ச்சிகள் நடத்திவருகிறேன். விளையாட்டுத்துறையிலும் எனக்கு ஆர்வம் உண்டு. கல்லூரி பருவத்தில் நீச்சல் பயிற்சி பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளேன். படிப்பிலும் சிறந்த மாணவியாக விளங்கினேன். பல்மருத்துவபடிப்பில் நான் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன். பலதுறைகளில் நான் என் திறமையை வெளிப்படுத்திவந்ததால், அழகுப் போட்டியிலும் என் திறமையை வெளிப்படுத்தும் எண்ணம் உருவானது. அதுவும் சிறந்த களம் என்பதால், இதிலும் நான் பிரகாசிக்கிறேன்’’

இளம் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனை என்ன?

‘‘பெண்களுக்கு கல்வி அவசியம். ஆனால் அதுமட்டுமே போதாது. பெண்கள் தொழிற்கல்வி பயின்றால்தான் சுயமாக வாழமுடியும். சாதிக்கவும் முடியும். பெண்ணாக பிறந்து விட்டால் பெற்றோருக்கு கஷ்டம், சமூகத்துக்கு பயந்துதான் வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். அவைகளை எல்லாம் நமது செயல்கள் மூலம் எதிர்கொண்டு மாற்றிக்காட்டவேண்டும். படிக்கிற பெண்கள், சினிமா, சீரியல், சமூக வலைத்தளங்கள் என்கிற பொழுதுபோக்கு மாய வலைகளில் இருந்துவிடுபட வேண்டும்.

குடும்பத்தலைவி என்பது நமக்கு வருகின்ற பொறுப்பு என்றாலும், தலைமை பண்பு என்பதுதான் நம்மை சாதனை பெண்களாக ஒளிரவைக்கும். இதற்கான ஆக்கபூர்வமான செயல்களை பெற்றோர்கள் செய்யவேண்டும். சிறுவயதில் இருந்தே பெண் குழந்தைகளை பன்முகத்திறமை கொண்டவர்களாக வளர்க்கவேண்டும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அவசியம்தான். ஆனால் அதனையே அவர்களது முன்னேற்றத்துக்கான தடையாக மாற்றிவிடக்கூடாது’’

பெண்களுக்கு சிவப்பழகு முக்கியமா?

‘‘காதலுக்கு ஜாதி, மதம் இல்லை என்பதுபோல், சாதிக்கும் பெண்களுக்கு நிறம் அவசியமானது அல்ல. தனக்கு அழகு இல்லையே என்று எந்தப்பெண்ணும் நினைக்ககூடாது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். நான் பன்முக திறமைகளை பெற்றிருந்தாலும், எனது நிறம் மாநிறம்தான். இந்த நிறத்தைக்கொண்டு அழகிப்போட்டியில் ஜொலிக்க முடியுமா? என்பது எனக்குள் இருந்த கேள்வி. ஆனால் அந்த கேள்விக்கு சரியான பதில் பெறவேண்டு மானால் களத்தில் இறங்கவேண்டும். முயற்சிக்க வேண்டும். கடினமாக உழைத்து நிறம் என்கிற திரையை விலக்கி புதிய இலக்கணம் படைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் சாதித்தும்காட்டி உள்ளேன். மாநிற பெண்களாக இருந்தாலும், கறுப்பு நிற பெண்களாக இருந்தாலும் மனம்தளராமல் நினைத்த துறைகளில் சாதிக்கலாம். தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதானே ஒழிய, முடிவுக்கான முன்னுரை அல்ல. நான் மாநிறமாக இருந்தும் அழகுப்பட்டங்களை வென்றுள்ளேன். இதன் மூலம் டார்க் இஸ் பியூட்டிபுல் என்கிற பிரசாரத்தையும் தொடங்கி உள்ளேன்.

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகள் சிவப்பாக இல்லை என்றால் அவர்களை அந்த நிறத்தை சொல்லி திட்டுவதை பெற்றோர் தவிர்க்கவேண்டும். கறுப்பு என்றாலும் அவர்களை கட்டழகி என்று சொல்லிப்பழகுங்கள். பெண்களின் அழகு ஆரோக்கியத்திலும் வெளிப்பட வேண்டும். அதனால் சிறுவயதில் இருந்தே அவர்களிடம் சரியான உணவுப்பழக்க வழக்கத்தை உருவாக்கவேண்டும். அதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி என்பது எல்லா பெண்களுக்கும் அவசியம்’’

உங்கள் சமூக செயல்பாடுகள் பற்றி..?

‘‘எனது தாயார்தான் எனது வழிகாட்டி. அவர் கடந்த ஆண்டு மார்பக புற்றுநோயால் இறந்தார். அவர் மீது முழு அன்பு செலுத்தி பராமரித்தேன். அதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன். குடும்பத்தில் உள்ள நோயாளிகளுக்கு நாம் கொடுக்கும் அன்புதான் அவர்களை கூடுதலாக சில காலம் வாழவைக்கும். நான், இந்தியா டேர்ன் பிங்க் அமைப்பின் தூதுவராக இருந்து வருகின்றேன். அதன் மூலம் இந்தியா முழுவதும் சென்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற் படுத்துகிறேன்.

இந்த பிரசாரத்தில் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான சுய பரிசோதனை செய்வது, மெமோகிராம் பரிசோதனை செய்வதன் அவசியங்களை எடுத்து கூறி வருகின்றேன். இந்த பரிசோதனைகளில் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால், அவர்கள் புற்றுநோய் அபாயத்தில் இருந்து மீண்டு புதுவாழ்க்கை வாழ முடியும். இதுதவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, பள்ளி, கல்லூரிகளில் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றேன்’’ என்கிறார்.

இவரது தந்தை பெயர் நடராஜன். கணவர் ராம்குமார் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

Next Story