தயக்கத்தை போக்கும் தாரகை


தயக்கத்தை போக்கும் தாரகை
x
தினத்தந்தி 16 Jun 2019 9:47 AM GMT (Updated: 16 Jun 2019 9:47 AM GMT)

இந்தியாவில் 15 முதல் 24 வயதை கடந்த 9.3 கோடி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதற்குரிய சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ந்தியாவில் 15 முதல் 24 வயதை கடந்த 9.3 கோடி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதற்குரிய சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 49 சதவீதம் பேர் பருத்தி துணிகளை பயன் படுத்துகிறார்கள். 38 சதவீதம் பேர் கடைகளில் விற்பனை செய்யப்படும் நாப்கின்களை பயன் படுத்துகிறார்கள். 21 சதவீதம் பேர் இந்த இரண்டையும் உபயோகிக்கிறார்கள். ஒரு சதவீதம் பேர் எதுவும் பயன்படுத்துவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

24 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் மாதவிடாய் சுழற்சி பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை நிலவுவதற்கு குடும்பத்தினர்தான் காரணம் என்கிறார், ஷிகோ ஜெய்தி. 16 வயதாகும் இவர் உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்திலுள்ள குவார்பூர் பாகல் கிராமத்தை சேர்ந்தவர். 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த பெண்களிடம் மாதவிடாய் சுழற்சி பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை நிலவுகிறது. பள்ளி படிப்பை தொடரும் மாணவிகளும் அதுபற்றிய புரிதல் இல்லாமலேயே இருக் கிறார்கள். மாதவிடாய் பற்றி மற்றவர்களிடம் பேசுவது தவறானது என்ற நிலை அங்கு நீடிப்பதே அதற்கு காரணம்.

இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று மாதவிடாய் கால பராமரிப்பு பற்றி விளக்கம் அளித்து வருகிறார், ஷிகோ. தனது மகள் மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசுவதில் அவரது தாயாருக்கு உடன்பாடு இல்லை. எனினும் ஷிகோவின் தந்தை உறுதுணையாக இருந்து வருகிறார். மகளுடன் சென்று தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

‘‘மாதவிடாய் காலத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும், எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி பெண்களுக்கு யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை. அது பற்றி பேசுவதை அருவருக்கத்தக்க விஷயமாக கருதுகிறார்கள். இதுபற்றி எனது பள்ளி ஆசிரியைகளிடம் பேசினேன். அவர்கள் கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி கிராம மக்களிடம் பேசுவதற்கு முடிவு செய்தேன். அதுபற்றி முதலில் என் அப்பா, அம்மாவிடம் கலந்துரையாடினேன். என் அம்மா கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

தந்தையோ எனக்கு முழுஆதரவு கொடுத்ததோடு ஒவ்வொரு வீட்டிற்கும் என்னுடன் வந்து தைரியமாக பேசுவதற்கு ஊக்கமளித்தார். ஆரம்பத்தில் நான் கிராம பெண்களிடம் பேசியபோது அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. என்னை ஏளனமாக பார்த்தார்கள். பெரும்பாலான பெண்கள் மாத விடாயின்போது விலை குறைந்த தரமற்ற துணிகளை பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை பற்றி விளக்கி புரிய வைத்தேன். நாப்கினை பயன்படுத்துவதன் அவசியத்தையும் புரியவைத்தேன்’’ என்கிறார்.

ஷிகோவின் தொடர் முயற்சியால் பல மாதங்களுக்கு பிறகு பெண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இப்போது அவருடன் இணைந்து ஏராளமான பெண்கள், மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். வீடியோ வடிவிலும் விளக்கம் அளித்து புரிய வைக்கிறார்கள். ஷிகோ, மாதவிடாய் பற்றி பாடத்திட்டத்தில் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் சொல்கிறார். படித்துமுடித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ, வக்கீலாகவோ சமூக சேவையில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அதற்கு முன்பாக தனது கிராம பெண்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Next Story