ஜொலிக்கும் ‘சோலார்’ கிராமம்


ஜொலிக்கும் ‘சோலார்’ கிராமம்
x
தினத்தந்தி 16 Jun 2019 10:07 AM GMT (Updated: 16 Jun 2019 10:07 AM GMT)

நாட்டின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 80 சதவீத குடும்பங்கள் சமையலுக்கு மரத்துண்டுகள், வீணாகும் விவசாய கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

நாட்டின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 80 சதவீத குடும்பங்கள் சமையலுக்கு மரத்துண்டுகள், வீணாகும் விவசாய கழிவுகள், குப்பைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். மலைப்பகுதியில் வசிப்பவர்கள் அங்கு இருக்கும் மரங்களை வெட்டி விறகாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேவேளையில் விறகுகளை கொண்டு சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து சுவாச கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.

விறகு மூலம் சமைக்கும் பெண்களில் பெரும்பாலானோர் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதனை தவிர்க்க சமையல் எரிவாயு சிலிண்டர் பரவலாக உபயோகத்தில் இருக்கிறது. ஆனால் ஏழ்மை பின்னணியை கொண்ட மலை கிராமங்களில் சிலிண்டர் பயன்பாடு குறைவாகவே இருக்கிறது.

இந்தநிலையில் சோலார் கட்டமைப்பை பயன்படுத்தி மின்சாரம் மூலம் இயங்கும் இண்டக்‌ஷன் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும் இந்தியாவின் முதல் கிராமம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது, பஞ்சா கிராமம். மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் உள்ள 74 வீடுகளிலும் சோலாரை பயன்படுத்தி நவீன முறையில் இண்டக்‌ஷன் ஸ்டவ் மூலம் சமைத்து சாப்பிடுகிறார்கள். வீட்டின் மின் தேவைகளையும் சோலார் மூலம் இலவசமாகவே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

சோலார் மூலம் சமையல் எரிபொருளும், மின்சாரமும் இலவசமாகவே கிடைப்பதால் இதுநாள் வரை காடுகளுக்கு சென்று மரங்களை வெட்டி விறகாக்கிய வழக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. கிராம மக்கள் மத்தியில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியவர், மோகன் நாகர். சமூக சேவகரான இவர் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறார்.

மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள் சோலார் மூலம் இயங்கும் இண்டக்‌ஷன் ஸ்டவ் அடுப்பை கண்டுபிடித்ததை அறிந்தவர், அதனை தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்களின் துணையோடு முழு அளவில் கிராம மக்கள் மூலம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டார்.

‘‘கிராம மக்கள் நீண்டகாலமாக பின்பற்றிவரும் பழக்கவழக்கங்களை மாற்றுவது கடினமான காரியம். அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் படிப்படியாக அவர்கள் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். ஆரம்பத்தில் சோலார் ஸ்டவ்வை பயன்படுத்துவதில் அவர்களிடம் தயக்கம் இருந்தது. தொடர்ந்து பயிற்சி கொடுத்து சமையலுக்கு பழக்கப்படுத்த வைத்துவிட்டோம். மழைக்காலங்களில் சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும்போது மட்டும் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கும்’’ என்கிறார்.

இதுகுறித்து பெண்மணி ஒருவர் கூறுகையில், ‘‘நான் குழந்தை பருவம் முதலே விறகு அடுப்பில் சமைத்த உணவைதான் சாப்பிட்டு வந்தேன். தினமும் மூன்று வேளையும் சமைக்க காட்டுக்குள் நடந்து சென்று 20 கிலோ விறகுகளை எடுத்து வருவேன். இப்போது அந்த சிரமம் இல்லை’’ என்றார்.

Next Story