இரு மொழிகளில் சட்டக்கல்வி : மருத்துவ படிப்பில் மேலும் ஒரு நுழைவுத்தேர்வு; விவசாயம் பல்துறை கல்வியாக மாறும்


இரு மொழிகளில் சட்டக்கல்வி :  மருத்துவ படிப்பில் மேலும் ஒரு நுழைவுத்தேர்வு; விவசாயம் பல்துறை கல்வியாக மாறும்
x
தினத்தந்தி 17 Jun 2019 9:25 AM GMT (Updated: 17 Jun 2019 9:25 AM GMT)

இந்தியாவில் சட்டக்கல்வி இரு மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை-2019 கூறுகிறது.

இதன் மூலம் எதிர்கால வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் இரு மொழிகள் புழங்கும் இந்திய நீதித்துறையில் சிறப்பாக செயல்பட முடியும். கீழ் கோர்ட்டு உள்ளூர் மொழிகளிலும், உயர் மற்றும் உச்சநீதிமன்றங்கள் ஆங்கில மொழியிலும் இயங்குகின்றன.

சட்டத்துறைக்கு அனைவருக்கும் நீதி வழங்க வேண்டிய சமூக கடமை உள்ளதை புதிய கல்வி கொள்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் பன்மொழி தன்மையை கையாள தேவையான புதுமையாக, இந்த பரிந்துரையை கருத வேண்டும் என்கிறது.

ஆங்கிலத்திலும், சட்டக்கல்லூரி அமைந்துள்ள மாநிலத்தின் மொழியிலும், சட்டக்கல்வி அளிக்கப்படும். பாடநூல்கள் இரு மொழிகளிலும் அளிக்கப்படும். ஆசிரியர்கள் இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் சட்டக்கல்வி, ஆங்கிலத்திலும், தமிழிலும் கற்பிக்கப்படுகிறது. தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில், 1973-74 முதல், தமிழ் வழியிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், சட்டக்கல்வியில் இரு மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மாணவர்கள் இரு மொழிகளில் ஏதாவது ஒன்றில் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று வரைவு அறிக்கை சொல்கிறது. சட்ட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கவும், உள்ளூர் மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். இரு மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இதில் ஈடுபட ஊக்கப்படுத்தப்படுவார்கள்.

சட்டக்கல்வியில் இருமொழி கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்காடுதல் மற்றும் தீர்ப்புகள், இரு மொழிகளில் வெளியாவது சாத்தியமாகும்.

மருத்துவ கல்வி

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில், மருத்துவ கல்வி பற்றி சில சர்ச்சைக்குரிய, முற்றிலும் மாறுபட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும்போது, ஒரு வெளியேறும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது இதில் ஒன்று. நான்காம் ஆண்டு இறுதியில் இந்த தேர்வு நடத்தப்பட வேண்டும். பட்ட மேற்படிப்புகளுக்கு இது நுழைவுத்தேர்வாகவும் செயல்படும்.

எம்.பி.பி.எஸ். படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகளை, மருத்துவத்துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும், அடிப்படை பாடப்பிரிவாக மாற்ற வேண்டும் என்று மற்றொரு புதுமையான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நர்சிங் மற்றும் பல் மருத்துவ பிரிவுகளுக்கும் இது பொருந்தும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, விரும்பிய பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

பல் மருத்துவம் மற்றும் நர்சிங் பிரிவு மாணவர்களும், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு, இடைநுழைவு மூலம் சேரலாம். இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் பி.எஸ்சி நர்சிங் படிப்பு மட்டுமே, செவிலியர்களுக்கான ஒரே தகுதியாக இருக்கும். இந்திய அளவில், செவிலியர்களுக்கு உள்ள கடும் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி (ஜி.என்.எம்.) படிப்புகளை நிறுத்துவது பற்றி, முன்னெச்சரிக்கையுடன் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.



நர்சிங் கல்வியின் தரத்தை உறுதி செய்ய, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, நர்சிங் கல்வி நிறுவனங்களுக்கு தரச்சான்று வழங்கப்படும். இதற்காக நர்சிங் கல்விக்கான தேசிய தரச்சான்று நிறுவனம் அமைக்கப்படும்.

நர்சிங் பயிற்சியாளர்களுக்கான படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில், ஒரு சில சிகிச்சைகளை இவர்கள் செய்ய முடியும்.

நர்சிங் கல்வியில் தொடர்ச்சி மற்றும் லைசென்ஸ்களை புதுப்பிக்க தேவையான விதிமுறைகளை இந்திய நர்சிங் கவுன்சில் இறுதி செய்யும். இது அனைத்து செவிலியர்களுக்கும், நர்சிங் கல்வித்துறையின் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். இந்திய செவிலியர் பதிவகம் ஒன்று உருவாக்கப்படும்.

அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகளை உறுதி செய்ய, முக்கியமாக கிராமப்புற பகுதிகளில் இதை உறுதி செய்ய, ஒரு சீரான சுழற்சிமுறை மருத்துவ பயிற்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வரைவு அறிக்கை சொல்கிறது. இப்போது நடைமுறையில் உள்ள பயிற்சி முறையில் கடுமையான குறைபாடுகள் உள்ளன.

600-க்கும் மேற்பட்ட மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவ கல்வி அளிக்கும் மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டும். இவை தரச்சான்று பெற வேண்டும். இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு மருத்துவ கல்வி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மருத்துவ முதுகலை கல்வியில் உள்ள இடங்களை அதிகரிப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் இருக்கும் இடங்களில் பாதி அளவு தான் முதுகலை படிப்பில் உள்ளது.

மாற்று மருத்துவத்துறைகளாக ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி (ஆயுஷ்) ஆகியவை ஒழுங்குபடுத்தப்படும்.

விவசாயம்

விவசாயத்துறை தொழில்முறை நிபுணர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக வரைவு அறிக்கை கூறுகிறது. முக்கியமாக விவசாயம் சார்ந்த தொழில்துறையில், தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 67 விவசாய பல்கலைக்கழகங்கள் உள்ளன. மொத்தம் உள்ள பல்கலைக்கழகங்களில் இது 9 சதவீதம் ஆகும். ஆனால் மொத்த மாணவர்கள் சேர்க்கையில், இவற்றில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே உள்ளனர்.

விவசாயக் கல்வியை பல்துறை கல்வியாக மாற்ற, அனைத்து வகையான விவசாய பல்கலைக்கழகங்களை ஒன்றுபடுத்த பரிந்துரை செய்கிறது. விவசாயம், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், வேளாண் வனவியல், மீன் வளர்ப்பு மற்றும் அனைத்து வகை உணவு உற்பத்தி முறைகள் ஆகியவற்றுக்கான பல்கலைக்கழகங்களை ஒன்றுபடுத்த வேண்டும். நான்கு ஆண்டு இளங்கலை படிப்பில், அடிப்படை அறிவியல் பிரிவுகள், மனிதவளத்துறை, பொருளியல், விவசாய தொழில்துறை, கிராமப்புற சமூகவியல், சந்தைபடுத்துதல் மற்றும் அறநெறிமுறைகள் போன்ற பாடங்களை சேர்க்க பரிந்துரை செய்கிறது.

அனைத்து விவசாய பல்கலைக்கழகங்களும் உள்ளூரில் இருக்கும் விவசாய சங்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பூச்சிகளினால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்கொள்ள உதவ வேண்டும். உள்ளூர் நிலவரங்கள் பற்றிய அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியவை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும்.

விவசாய தொழில்நுட்ப பூங்காக்களை நிறுவ, விவசாய பல்கலைக்கழகங்கள் உதவ வேண்டும். இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும், பரவலாக்குவதற்கும் ஊக்கம் கொடுக்க முடியும்.

தொழில் துறை மீது கவனம் குவிக்கும் பொறியியல் துறை

பேராசிரியர் கே.கஸ்தூரிரங்கன் குழு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையில், பொறியியல், கட்டிடக்கலை, நகர்ப்புற திட்டமிடல், மேலாண்மை, சமையல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளின் பாடத்திட்டத்தை சீரமைத்து, மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிகழ்காலம், எதிர்காலத்தில் உருவாகும் சவால்களை எதிர் கொள்ள முடியும்.

தொழில்நுட்ப கல்லூரிகளில், எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவுகள் பற்றிய ஆய்வு போன்ற பாடத்திட்டங்களை தொடங்க ஊக்கப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக ஒரு தரச்சான்று பெற்ற, அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரி இருக்கும். இவற்றின் மூலம் கிராமப்புற இளைஞர்கள், தரமான தொழில்நுட்ப கல்வி பெற முடியும். தொழில் துறையுடன் அதிக அளவில் இணைந்து செயல்படும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும். தொழில் துறையில் பயிற்சி பெறவும் இது உதவும். ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி அனுபவமும் இருக்க வேண்டும். வெறும் பாடத்திட்ட அறிவு மட்டும் இருந்தால் போதாது.

கல்லூரிகளில், இடைநிலை சேருதலை சாத்தியப்படுத்த, சிறப்பு வகுப்புகள் நடத்த ஊக்கப்படுத்தப்படும்.

தொழில்முறை கல்லூரிகளில், 50 சதவீத மாணவர்களுக்கு ஏதோ ஒரு வகையான கல்வி உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 20 சதவீத மாணவர்களுக்கு முழுமையான கல்வி உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும். தொழில்முறை கல்வித்துறையில் உள்ள 17 வகையான தொழில்முறை கல்வி கவுன்சில்கள், தொழில்முறை கல்விக்கான தர நிர்ணய வாரியங்களாக மாற்றப்படும். இவை பாடத்திட்டங்களை நிர்ணயிக்காது. மாற்றாக, தொழில்முறை கல்விக்கான தரத்தை மட்டும் நிர்ணயிக்கும். 

Next Story