பரிணாம வளர்ச்சியில் பறவைகள் தோன்றியது எப்படி?


பரிணாம வளர்ச்சியில் பறவைகள் தோன்றியது எப்படி?
x
தினத்தந்தி 17 Jun 2019 11:29 AM GMT (Updated: 17 Jun 2019 11:29 AM GMT)

பரிணாமம் என்பது ‘ஒரு வழிப் பாதை’ என்றே தொடக்ககால விஞ்ஞானிகள் கருதினர். அதாவது, பரிணாமத்தில் ஒரு பிரதான உயிரில் இருந்து மற்றொரு பிரதான உயிர் தோன்றியது என்றும், அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் தோன்றியது என்றும் கருதப்பட்டது.

முதலில் ஒரு செல் உயிரியான பாக்டீரியாவில் இருந்து அமீபா, பின்னர் அமீபாவில் இருந்து பல செல் உயிரிகள், பின்னர் தாவரங்கள், பின்னர் அவற்றைத் தொடர்ந்து விலங்குகள் என்று ஒரே நேர்கோடாக உயிர்கள் தோன்றியதாகவே தொடக்கத்தில் கருதப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு பரிணாம மரம் உருவாக்கப்பட்டது.

ஆனால், தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்படும் புதைபடிமங்கள் மற்றும் அவற்றின் மீதான நவீன பரிணாம ஆய்வு களின் காரணமாக, அந்த பரிணாம மரம் கிளைக்கும் விதம் தொடர்ந்து மாற்றத்துக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் பரிணாம வளர்ச்சி என்பது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு கிளைத்த ஒரு மரம் என்பது நவீன கால ஆய்வுகள் மூலம் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பறவைகள் மற்றும் ஆர்கியாப்டேரிக்ஸ் (Archaeopteryx) எனும் ஒரு டைனோசர்-பறவை இரண்டுக்கும் இடையிலான விலங்குகளில் மட்டுமே இருந்ததாக கருதப்பட்டு வந்த சிறகுகள், பறவைகள் தோன்றுவதற்கு சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன என்றும், டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே கூட தோன்றியிருக்கலாம் என்றும் ஒரு சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மைக் பென்ட்டன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட புதைபடிம ஆய்வில் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீரோசார்ஸ் (Pterosaurs) எனும் ஒரு வகை ஊர்வன விலங்குகளின் புதைபடிம ஆய்வில், அவற்றின் உடலில் சிறகுகள் இருந்தது கண்டறியப்பட்டது. டைனோசர் களின் நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் டீரோசர்களின் சிறகுகள் அச்சு அசலாக டைனோசர்களின் சிறகுகள் போலவே இருந்ததும், அதன் காரணமாக சிறகுகள் தோன்றிய காலம் தற்போது குறைந்தது சுமார் 25 கோடி ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

தொடக்ககால ட்ரையாசிக் உலகமானது (Triassic world) மிக மிக மோசமான ஒரு பேரழிவில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்த காலத்தில் சிறகுகள் தோன்றியிருக்க வேண்டும் என இந்த ஆய்வுத்தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் விஞ்ஞானி பென்ட்டன். முக்கியமாக, இந்த ஆய்வு மூலமாக, உலகின் முதல் பறவையாக கருதப்படும் ஆர்கியாப்டேரிக்ஸ் (Archaeopteryx) தோன்றுவதற்கு முன்பே சிறகுகள் தோன்றியிருக்க வேண்டும் என்றும், டைனோசர்களின் மூதாதையர்களான ஆர்கொசார்களுக்கும் (archosaurs) பாலூட்டிகளின் மூதாதையர்களுக்கு மிகப்பெரும் போர் நடந்த காலத்தில்தான் சிறகுகள் தோன்றியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இவ்விரு விலங்கினங்களுக்கும் இடையிலான போட்டியில் ஆர்கொசார்களுக்கு உடல் வெப்பத்தை அதிகப்படுத்தி உதவவே சிறகுகள் தோன்றி யிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதன்பிறகு சிறகுகள் பறக்க பயன்படத் தொடங்கியிருக்கக் கூடும் என் கிறார் விஞ்ஞானி பென்ட்டன்.

முக்கியமாக, கடந்த 1994-ம் ஆண்டு சீனாவில் சிறகுகள் உடைய ஆயிரக்கணக்கான டைனோசர் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் புதைபடிம ஆய்வாளர்கள் சிறகுகள் தோன்றிய காலம் டைனோசர்களுக்கு முந்தைய காலமாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவில் கண்டறியப்பட்ட குளிண்டாட்ரோமியஸ் (Kulindadromeus) டைனோசர் புதைபடிமத்தின் உடல் முழுக்க இருந்த சிறகுகள், டைனோசர்கள் தோன்றும் முன்னரே சிறகுகள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை அழுத்தமாக முன்வைத்தது. ஏனெனில், குளிண்டாட்ரோமியஸ் இன டைனோசர்கள், பரிணாமத்தில் பறவைகள் தோன்றுவதற்கு மிக மிக நீண்ட காலத்துக்கு முன்பு தோன்றியவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மரபியல் ஆய்வில், ஊர்வன விலங்குகளின் செதில்கள், பறவைகளின் சிறகுகள் மற்றும் பாலூட்டிகளின் ரோமங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியானது அனைத்தும் ஒரு மரபியல் கட்டுப்பாட்டு அமைப்பினால் தூண்டப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

அதாவது, செதில்கள், சிறகுகள் மற்றும் பாலூட்டி ரோமங்கள் ஆகிய அனைத்து பாகங்களின் வேரானது சுமார் 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூதாதையர் உயிரினத்தில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சிறகுகள் டைனோசர்களின் அடிப்படை பண்புகளில் ஒன்றாகவே இருந்திருக்கும் என்றும், பின்னர் டைனோசர்கள் அளவில் பெரிதாக சிறகுகளின் வளர்ச்சி தடைபட்டு இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இது எல்லாம் ஒருபுறமிருக்க, பறவைகள் வெற்றிகரமாக வாழ சிறகுகள் அவற்றுக்கு மிக மிக முக்கியமான ஒரு பாகமாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார் ஆய்வாளர் பென்ட்டன். மேலும், இந்த ஆய்வு மூலமாக, பறவைகள் ஊர்வன விலங்குகளில் இருந்து உடனே தோன்றவில்லை என்றும், மாறாக சுமார் 10 கோடி ஆண்டு காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட குணாதிசயங்களை உருவாக்கிக்கொண்ட பின்னரே பறவைகள் தோன்றின என்றும் கூறு கிறார் விஞ்ஞானி பென்ட்டன்.

Next Story