சிறப்புக் கட்டுரைகள்

புதிய எமன்கள்... நவீன கற்பு...! + "||" + New Yaman... Modern virginity ...!

புதிய எமன்கள்... நவீன கற்பு...!

புதிய எமன்கள்... நவீன கற்பு...!
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் மனைவியோ, கணவனோ யார் ஈடுபட்டாலும் அது விபரீதம். 136 ஆண்டுகால சட்டப்பிரிவான 497-ஐ உச்சநீதிமன்றம் நீக்கிய பின்பும் சமூகத்தின் பார்வையில் கள்ளத்தொடர்பு என்பது அவமானகரமானது என்பதே எதார்த்தம்.
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை மரத்தில் கட்டி வைத்து ஊர்ப்பஞ்சாயத்தினர் அடித்தனர்.

“நண்பனுடன் தன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவன், தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் சிலிண்டரால் அடித்துக் கொன்றான்”

“கள்ளத்தொடர்பு பற்றிய வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை”

இவை போன்ற செய்திகள் ஊடகங்களில் வழமையானவை. இவற்றையும் விஞ்சிய அதிர்ச்சி நிகழ்வு, கள்ளக்காதலனுக்காக தான் பெற்ற குழந்தைகளைத் தன் கையாலேயே கொலை செய்த குன்றத்தூர் அபிராமி செய்தி. கள்ளக்காதலுக்காக தான் பெற்ற குழந்தையை தாயே கொல்லும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதை சமீபத்திய பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

இத்தகைய நிகழ்வுகளில் விவாகரத்தான பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் என முன் வரும் இளைஞர்களால் அவளுடைய முதல் மணத்தின் விளைவான குழந்தையைக் கொல்லச் சொல்லும் நிகழ்வுகளும் கவனத்துக்கு வந்துள்ளன.

தாய்மையை மிக உயர்வாக போற்றும் தமிழ் கலாசார சூழலில் அபிராமியைப் போன்றவர்கள் உருவாக யார் அல்லது எது காரணம்?

ஆண், பெண் இரு பாலருமே தான் காரணம். அனுதினமும் நம் நேரத்தை அதிக அளவில் விழுங்கும் இன்றைய பொழுது போக்கு சாதனங்களும் காரணம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் திரைப்படங்கள் மட்டுமே பெரும்பாலும் மக்களின் பிரதான பொழுதுபோக்காக இருந்தது. இன்றைக்கு 200-க்கும் மேற்பட்ட டி.வி. சேனல்கள், எண்ணிலடங்கா யூ டியூப் சேனல்கள், பேஸ்புக், வாட்ஸ் அப், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் என பொழுதுபோக்குகளின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.

அந்த பொழுது போக்குகள் பண்டைய காலத்தைப் போன்று அறம் போதிப்பவையாக இன்றி வெறும் கேளிக்கையாகவே அமைந்திருப்பது துரதிர்ஷ்டம். குடும்ப உறவுகளின் அடித்தளமான அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றுக்கு பொருந்தாத சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை, காமவெறி, பிறர் துணை நாடல் போன்ற எதிர்மறை குணங்களின் குவியலாகவே இன்றைய பொழுதுபோக்கு ஊடகங்கள் பெரும்பாலும் விளங்குகின்றன.

அக்கால பெண் வீட்டை மட்டும் நிர்வகிப்பவளாக இருந்தாள். இன்றைய பெண், வீட்டை நிர்வகிப்பதுடன் கூட வேலைக்கும் போய் சம்பாதித்து குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துபவளாக திகழ்கிறாள். வேலைக்கு போகும் ஆண் எத்தனை விதமான இன்னல்களை எதிர்கொள்கிறானோ அதே போன்ற இன்னல்களை பெண்ணும் எதிர்கொள்கிறாள்.

வீட்டு நிர்வாகம், வேலைப்பளு என்கிற இரட்டைக் குதிரை சவாரி செய்யும் பெண்ணின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் ஆண்கள் குடும்பங்கள் மிகவும் குறைவே.

நாள் ஒன்றுக்கு ஓர் ஆண் 600, 900 வார்த்தைகளை மட்டுமே பேசுவதாகவும், ஒரு பெண் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளைப் பேசுவதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகம் பேசுவதையும், தான் பேசுவதைப் பிறர் கேட்பதையும் விரும்புவது பெண்ணின் இயல்பு என்கின்றனர் உளவியலாளர்கள்.

எத்தனை ஆண்கள் தம் மனைவியரிடம் மனம் விட்டு பேசுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் மனைவி பேசுவதைக் காது கொடுத்து கேட்கும் பொறுமை எத்தனை ஆண்களிடம் இருக்கிறது? மனம் விட்டு பேசினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று மனநல வல்லுநர்கள் சொல்கிறார்கள். பெண் தன் பிரச்சினைகளைப் பேசுவதற்கான இயல் வெளியை எத்தனை குடும்பங்கள் வழங்குகின்றன?

“கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்பது தமிழ் மூதுரை. “உனக்கு உண்மையானவனாக (உன்னுடன் வாழும் வரை) இருப்பேன்” என்ற வாக்குறுதியை தன் வாழ்க்கை துணையிடம் கொடுக்கும் ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும்... அந்த இல்வாழ்வு நீடிக்கும் வரை வாக்குறுதியைக் கடைப்பிடிப்பது கடமை. தன் வாழ்க்கைத் துணையின் போக்கு பிடிக்காமற்போனால், அந்த துணையைச் சட்ட பூர்வமாக பிரிந்த பின் தனது விருப்பப்படி வேறொரு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து வாழ்தலே நவீன அறம்.

எவ்வளவு காலம் ஒரே துணையுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதோ, எத்தனை முறை ஜோடியை மாற்றினார்கள் என்ற எண்ணிக்கையோ கற்பின் பாற்பட்டதல்ல. அது அவரவர் மனப்பக்குவம் அல்லது பக்குவமின்மையின்; பாற்பட்டதே.

பெரியார் சொன்னது போல திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் விதிகளை சம்பந்தப்பட்ட இருவரும் அல்லது இரு குடும்பத்தினரும் சட்டவிதிகளுக்கேற்ப அமைத்துக்கொண்டு அதன்படி இணைந்து வாழ்தலே முறை. மு.வ. தனது நாவலில் நாற்பதாண்டுகளுக்கு முன் சொன்ன நவீன கால கற்பின் விளக்கமான எந்த வாழ்க்கை துணையுடன் ஒரே கூரையின் கீழ் கணவனாக, மனைவியாக வாழ்கிறார்களோ அந்த வாழ்க்கைத் துணையைத் தவிர வேறொரு பெண்ணுடனோ, ஆணுடனோ பாலியல் உறவு இன்றி வாழும் நேர்மைக்கு பெயர்தான் கற்பு. அது ஆறு மாதமே ஆயினும் சரி, அன்றி ஆயுள் முழுதும் ஆயினும் சரி என்பதையாவது இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் கருதிப்பார்ப்பது சிறந்தது.

சினிமாக்களில் ரசிகர் பட்டாளங்களை கொண்ட ஹீரோ கமலாவுக்கு தெரியாமல் விமலாவுடன் கொஞ்சிக் குலவுவது நகைச்சுவையாக மக்களால் பார்க்கப்படுகிறது.

இரண்டு மனைவிக்கார ஹீரோ என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எப்போதும் நகைச்சுவைக்கான களமாகவே இருந்து வந்திருக்கிறது.

கற்பனையாக யோசித்து பார்த்தால் கூட இரண்டு கணவர்க்காரி என்று ஏதாவது ஒரு பெண் கதாபாத்திரம் ஹீரோயினாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறதா என்று யோசித்து பார்த்தால், இதுவரை இல்லை. தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட திரவுபதி இதற்கு விதிவிலக்கு. மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் ஹீரோவாகவும், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி வில்லியாகவும் மட்டுமே அறியப்படுவது வாடிக்கை.

- திலகவதி, ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்