சிறப்புக் கட்டுரைகள்

பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கையில் அதிரடி திட்டங்கள் : பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்த பரிந்துரைகள் + "||" + New Education Policy Action Plans to Increase Student Visit to School

பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கையில் அதிரடி திட்டங்கள் : பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்த பரிந்துரைகள்

பள்ளிக்கு மாணவர்கள் வருகையை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கையில் அதிரடி திட்டங்கள் : பாதுகாப்பான கல்வி சூழலை ஏற்படுத்த பரிந்துரைகள்
2016-17-ல் இந்திய அளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் மிக அதிக அளவில் 22.13 சதவீதமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இது 5.67 சதவீதமாகவும், ஆரம்பப்பள்ளிகளில் 6.35 சதவீதமாகவும் உள்ளது என்று இந்தியா ஸ்டாட் என்ற தகவல் திரட்டு நிறுவனம் தெரிவிக்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் இது 13.9 சதவீதமாக இருந்தாலும் இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரான டாக்டர்.கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2019-ல் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி அதை குறைக்க பல பரிந்துரைகளை செய்துள்ளது.

அருகமை பள்ளிகள் இல்லாத நிலை, பள்ளிகள் மீது நாட்டமின்மை, பாதுகாப்பற்ற சூழல், முக்கியமாக மாணவிகளுக்கு மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றை இடைநிற்றலுக்கான காரணங்களாக இந்த அறிக்கை சொல்கிறது.

2016-17-ல் ஆரம்பக்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிக அளவில் 95.1 சதவீதமாக இருந்தது. 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் இது 90.7 சதவீதமாக குறைந்தது. 9, 10-ம் வகுப்புகளில் 79.3 சதவீதமாகவும், 11, 12-ம் வகுப்புகளில் 51.3 சதவீதமாகவும் உள்ளதாக பு.க.கொ வரைவு அறிக்கை கூறுகிறது.

அஸ்திவாரத்தை பலப்படுத்துதல்

பள்ளிகள் சுவாரசியம் மிகுந்த இடங்களாகவும் கற்றல் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகவும் மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கூறுகிறது.

மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் ஆலோசகர்களும், சிறப்பு பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். தரமான உள்ளூடுகள் கிடைக்காமல் பாடங்களில் பின் தங்குவதால் பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களுக்கு மனோரீதியான ஆதரவையும், ஆலோசனைகளையும், தீர்வுகளையும் அளிப்பார்கள்.

அதிக அளவில் இடைநிற்றல் நடைபெறும் பகுதிகளில் மிகச்சிறந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர்களின் குடும்பத்தினரிடம் சமூக ஊழியர்கள் தொடர்பு கொண்டு கல்வியில் அம்மாணவர்கள் பின் தங்குவதற்கான காரணங்களை கண்டறிவார்கள்.

காலை மற்றும் மதிய உணவு அளிக்கப்படுவதன் மூலம் வருகைப்பதிவை அதிகரிக்க வேண்டும். அதிக வருகைப்பதிவு உடைய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும்.

அணுகக்கூடிய தூரத்தில் பள்ளிகள்

2016-17-ல், 100 ஆரம்பபள்ளிகளுக்கு 50 நடுநிலைப்பள்ளிகளும், 20 உயர்நிலைப்பள்ளிகளும், 9 மேல்நிலைப்பள்ளிகளும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதை சீர்செய்யும் வகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.

ஆரம்பப்பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளிகளையும் தேவைப்படும் பகுதிகளில் ஒருங்கிணைப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு அம்சம்

மாணவிகளின் பாதுகாப்பு ஒரு முக்கிய விஷயமாக உள்ளதால் நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு பொதுப்போக்குவரத்து வாகனங்களில் அனுப்ப குடும்பத்தினர் தயங்குகின்றனர். இதனால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்க செய்வது அதிகரிக்கிறது.

இந்த பிரச்சினையை சரி செய்ய பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், தொலைதூரப் பகுதி மாணவிகளுக்காக பாதுகாப்பான விடுதிகள், சிறப்பு பேருந்துகள், நடந்து செல்ல குழுக்கள், மேல் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்கள், போக்குவரத்து உதவித்தொகை ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான விடுதிகள்

நவோதையா பள்ளிகளில் உள்ளது போல் இலவச தங்கும் விடுதிகளை தேவைப்படும் பகுதிகளில் அரசு உருவாக்க வேண்டும். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களை மேம்படுத்த வேண்டும்.

இதன் மூலம் வெளியே தங்கி படிக்க வசதியில்லாத குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் கல்வி பெற முடியும்.

சுகாதார திட்டங்கள்

சுகாதாரம், துப்புரவு வசதிகள், ஊட்டச்சத்து இல்லாததால் உருவாகும் நோய்களின் காரணமாக இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சமூக சேவகர்கள், ஆலோசகர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மூலம் பெற்றோர்கள், சமுதாய மக்களிடம், உடல் ஆரோக்கியம், சுகாதாரம், துப்புரவு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தப்பட வேண்டும்.

இந்த பள்ளிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிபுரிவார்கள்.

மிக இளம் வயதில் திருமணம், பாலியல் ரீதியான பாகுபாடுகள், தம்பி, தங்கைகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம், வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் போன்ற சமூக, கலாசார காரணங்களும் மாணவிகளின் கல்வியை பாதிக்கின்றன.மறு வாய்ப்பு அளிப்பு திட்டங்கள்

பள்ளியில் இருந்து இடைநின்றவர்கள், பிற்காலத்தில் கல்வியை தொடர விரும்பினால், அவர்களுக்காக ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

இதன் மூலம் படிப்பை நிறுத்திய வகுப்பில் இருந்து மீண்டும் தொடர மறு வாய்ப்பு அளிக்கப்படும். வேலைக்கு செல்ல தொழில்முறை பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளிலும் சேரலாம்.

இடைநின்றவர்களில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத நிலையில் வயது வந்தோருக்கான கல்வியில் சேரலாம்.

தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் திறந்தவெளி தொலைதூரக் கல்வி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இது பயன்படும்.

அடிப்படை கற்றல் படிப்புகளுடன் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இணையான, ஏ, பி, சி என்ற மூன்று நிலை படிப்புகளை இது அளிக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான மேல்நிலை படிப்புகளையும் அளிக்கும். மாநில திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவங்களை துவக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்துதல்

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வியை கொண்டு வருவதன் மூலம் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து சிறார்களும் பள்ளிகளில் சேர்ந்து, 12-ம் வகுப்பு வரை கல்வி கற்க உறுதி செய்யப்படும்.

குருக்குலங்கள், பாடசாலைகள், மதராசாக்கள், வீட்டுக்கல்வி போன்ற பல்வகையான பள்ளிகளை அனுமதிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

மாணவர்களின் மனோரீதியான, உடல்ரீதியான பாதுகாப்பு அம்சங்கள், பாரபட்சமில்லாத சேர்க்கை, லாப நோக்கமற்ற கல்வி முறை, குறைந்தபட்ச கல்வித்தரம் ஆகியவற்றை ஒழுங்கு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும்.