தினம் ஒரு தகவல் : பேய் பயத்தை போக்க முடியுமா?


தினம் ஒரு தகவல் :  பேய் பயத்தை போக்க முடியுமா?
x
தினத்தந்தி 19 Jun 2019 8:11 AM GMT (Updated: 19 Jun 2019 8:11 AM GMT)

பேய்கள் பற்றி ஏராளமான கதைகள் இருக்கின்றன. சினிமாவில் வேறு அவ்வப்போது பேய்க்கதைகள் வந்து சும்மா இருப்பவர்களையும் பேய் பயம்கொள்ள வைப்பார்கள்.

இதனால் உலகம் முழுவதுமே பேய்கள் பற்றிய பலவிதமான கட்டுக்கதைகள் நிலவுகின்றன. இப்படி பேய்களை பற்றி பயம் கொள்பவர்களை மருத்துவ உலகம் தனியாக பிரிக்கிறது. அவர்களை பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும் இருக்கிறது. பேய்கள் பற்றிய ஆழமான பயம் கொண்டிருப்பவா் பாஸ்மோபோபியாவால் பாதிக்கப்படுகிறார். கிரேக்க மொழியில் ‘பாஸ்மோ’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தம். திகில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது கனவுகள், இறந்து போனவர்கள் பற்றிய எண்ணம் போன்றவற்றால் ஒருவரின் மனம் பாதிப்படையலாம். மூளையில் சுரக்கும் அமைக்டலா எனும் ரசாயனமும் இவ்வித பயம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். பேய் பயமும் இருட்டை பற்றிய பயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

குழந்தைகள் பொதுவாக பேய் என்றால் பயப்படுவார்கள். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரியவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். உடல் மற்றும் மனநல அறிகுறிகளை வைத்து பாதிப்பை கண்டறியலாம். பயத்தின் காரணமாக குழந்தைகள் படுக்கையை நனைத்து விடுவார்கள். திடீரென இரவில் விழித்தல், அதிகமான வியர்வை, மயக்கம், எரிச்சல், கோபம் போன்ற அறிகுறிகள் தென்படும். தூக்கமின்மை, மனஅழுத்தம், பணி அல்லது பள்ளியில் கவனம் செலுத்த முடியாத நிலை, மனச்சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி எடுத்தல், தலைச்சுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவையும் இருக்கும். இதற்கும் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. அதனை முறைப்படி எடுத்துக்கொண்டாலே இந்த பயத்திலிருந்து நீங்கலாம். ஆனால், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிகிச்சை பெறுவதையே தவிர்ப்பார்கள். தங்களின் பயத்தை ஒப்புக்கொள்ளவும் மறுப்பார்கள்.

இவர்களின் பயத்தைப் போக்க பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சி அவசியம். குழந்தைகளின் பயத்தைப் போக்க பெற்றோர் வீரதீர சம்பவங்கள், தைரியமான கதைகள் போன்றவற்றை சொல்லி கொடுக்க வேண்டும். பெரியவர்கள் தங்கள் பயத்தை புரிந்து கொண்டு, சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும். இப்படி செய்தால் பேய் பயத்தைப் போக்கலாம். 

Next Story