பயன் தரும் நிலவுப் பயணம்...!


பயன் தரும் நிலவுப் பயணம்...!
x
தினத்தந்தி 20 Jun 2019 7:53 AM GMT (Updated: 20 Jun 2019 7:53 AM GMT)

அண்மைக்காலங்களில் விண்வெளியை நோக்கி வெவ்வேறு நாடுகளில் இருந்து விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் சென்றுகொண்டு இருக்கின்றன.

எல்லோருடைய கண்களும் இப்போது நிலவை குறிவைத்துள்ளது. “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் நிலவுக்கு உல்லாச பயணம் அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளது. அதுபோல் வேறு நாடுகளில் உள்ள எண்ணற்ற தனியார் நிறுவனங்களும் நிலவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளன.

இஸ்ரேல் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் “பேர்ஷட்” என்ற ஒரு விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. கடந்த ஏப்ரல் 12-ந் தேதி அது நிலவில் மெதுவாக தரை இறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறினால் அதனுடைய வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. முடிவில் அது நிலவில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.

இந்தியா இந்த ஆண்டு தனது 2-வது விண்கலத்தை நிலவை நோக்கி செலுத்த திட்டமிட்டுள்ளது. தனது முதல் விண்கலமாகிய சந்திரயான்-1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்து இந்தியா உலகிற்கே முதன்முறையாக அறிவித்தது. இந்த இரண்டாவது பயணத்தில் நிலவிற்கு மெதுவாக சென்று இறங்கி, ரோவர் எனப்படும் உலாவரும் கலத்தை வெளிக்கொண்டு வந்து நிலவில் இறங்கும் இடத்தை சுற்றி ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளது.

சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே நாம் காண்கிறோம். சீனாவின் விண்கலம் நிலவின் அடுத்த பகுதியான மறைவு பக்கத்தில் இறங்கியது. அவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான நிலவிற்கு பயணம் சென்று வரும் திட்டத்தை வெளியிட்டுள்ளனர். அதில் நிலவில் இருந்து பூமிக்கு கற்களை எடுத்து வருவது, மேலும் நிலவில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது, நிலவில் சுரங்கம் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளனர்.

நிலவிற்கு சென்று வந்துள்ள வெவ்வேறு நாட்டுக் கலங்களை பற்றிப் பார்க்கலாம்:-

இந்த நிலவுப் பயணம் முதன் முதலில் ரஷியாவின் ‘லூனா2’ என்ற கலம், நிலவில் 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி இறங்கியதில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன்பு கலிலியோ என்ற விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட ‘டெலஸ்கோப்’ மூலமே விண்வெளியை ஆராய்ந்தனர். அப்போது அவர்கள் நிலவில் உள்ள பள்ளங்களையும், மலைகளையும் கண்டறிந்தனர்.

அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் 1969-ம் ஆண்டு நிலவில் மெதுவாக இறங்கியது. வீரர்கள் நிலவில் அடியெடுத்து வைத்தனர். இதுவரை நிலவில் விண்வெளி வீரர்களை அமெரிக்கா மட்டுமே 6 முறை தரையிறக்கியுள்ளது. மேலும் அமெரிக்கா 382 கிலோ கற்களை நிலவிலிருந்து கொண்டு வந்துள்ளது.

ரஷியா விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தில் தோல்வியை தழுவியது என்று கூறலாம். ஆனால் மூன்று முறை ஆள் இல்லா விண்கலம் மூலம் நிலவில் கற்களை எடுத்து திரும்பி வந்துள்ளனர். 1993-ல் ரஷியா மூன்று சிறிய 200 மில்லி கிராம் எடையுள்ள கற்களை 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 டாலருக்கு விற்றது. இந்த கற்களின் வயதை கதிரியக்க வயது கண்டறியும் முறையின் மூலம் கண்டறிந்தனர். அதன்படி இந்த கற்களின் காலம் சுமார் 3.16 பில்லியன் ஆண்டு முதல் 4.44 பில்லியன் ஆண்டு வரையிலானது என்று அறிக்கை கூறுகிறது. பூமியில் உள்ள கற்கள் 3.8 முதல் 4.28 பில்லியன் ஆண்டுகள் வரை உள்ளன.

மேலும் நிலவில் பல அரிய உலோகங்கள் இருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். நிலவில் இருந்து கொண்டு வந்த கற்களில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிக்கான், டைட்டானியம் போன்ற உலோகங்கள் உள்ளன. மேலும் பிளாட்டினம், ஹீலியம் 3 என்ற தனிமமும் அதிக அளவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹீலியம் 3-ஐ நாம் அணுக்கரு இணைப்பு முறையில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதனால் வெளிப்படும் கதிர் இயக்கம் அணுக்கரு பிளப்பினால் வெளிப்படும் கதிர்வீச்சை விட மிகவும் குறைவு. எனவே பாதுகாப்பான முறையில் அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஆகவே நிறைய நாடுகள் ஹீலியம் 3-ஐ எடுத்துக்கொண்டு வர முடிவு எடுத்துள்ளன.

இத்தனை அரிய உலோகங்கள், கனிமங்கள் உள்ள இடத்தை சும்மா விடுவார்களா? எனவே நிலவை பற்றி அறிய போட்டி நாளுக்கு நாள் கூடுகிறது. இந்தியாவும் 2-வது முறையாக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை செலுத்தி நிலவில் இறக்க தயாராகிவிட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன், சந்திரயான்-2 அடுத்த(ஜூலை) மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டு செப்டம்பரில் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் என தெரிவித்துள்ளார். சந்திரயான் 2-ஐ விண்வெளியில் ஏவுவதற்கு ஜி.எஸ்.எல்.வி. எம்.கே-3 என்ற ராக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். சந்திரயான்-2-வில் மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன.

அவை யாதெனில் ‘ஆரிபிட்டர்’ எனப்படும் வெளியே சுற்றிவரும் கலம், ‘லேன்டர்’ என்று அழைக்கப்படும் தரையிறங்கு கலம் மற்றும் ‘ரோவர்’ எனப்படும் தரையில் உலாவரும் கலம் என்பன ஆகும். ஆரிபிட்டர் நிலவை சுற்றுவட்ட பாதையில் சுற்றிவரும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் நேரத்தில் லேன்டர் தனியாகப் பிரிந்து நிலவை நோக்கி பயணிக்கும். அதன் வேகத்தை குறைப்பதற்கு திரவ என்ஜினை இயக்குவார்கள். இதனால் வேகம் மிகக்குறைந்து கொண்டே வரும். நிலவில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் வரும்போது அதன் வேகம் முற்றிலும் இல்லாது போய்விடும். அந்த நேரத்தில் துல்லியமாக நாம் இந்த திரவ என்ஜினை நிறுத்த வேண்டும். இவ்வாறு திறனை நாம் குறைத்து கொண்டுவர வசதியாக இந்தியாவில் முதல் முறையாக திரவ என்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலவை நெருங்கும்போது அதிலுள்ள கேமரா நிலவை படம் எடுத்து கணினிக்கு அனுப்பும். அங்கு ஏற்கனவே இறங்க வேண்டிய இடத்தின் படம் உள்ளது. அதனால் அதை நோக்கி செல்ல கணினி உத்தரவு கொடுக்கும். இரண்டு மீட்டர் உயரத்தில் இருந்து நிலவின் ஈர்ப்பு விசையால் இறங்கு கலம் மெதுவாக நிலவில் வந்து இறங்கும். அதன் நான்கு கால்களும் நிலவில் பதியும். சிறிது நேரம் கழிந்தவுடன் நிலவில் உள்ள தூசி பறப்பது குறையும் போது ரோவர் என்னும் உலாவரும் கலம் வெளியே வரும்.

இந்த இரு கலங்களுக்கும் தனித்தனியே சூரியத்தகடுகள் இருப்பதால் அவை தங்களுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும். சந்திரயான்-2-ல் மொத்தம் 13 கருவிகள் உள்ளன. அதில் 3 கருவிகள் ரோவரில் இருக்கிறது. மற்றவை ஆரிபிட்டரிலும், லேன்டரிலும் உள்ளன.

நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை இறக்கவில்லை. இங்கு நிறைய கற்குவியலும், ஆழ்ந்த பள்ளங்களும் உள்ளன. இந்த இடத்தில் உள்ள சரிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே இருந்தால் தரை இறங்கும்போது கலம் சரிந்து விழ வாய்ப்பு உள்ளது. அது போல் ரோவர் வெளியே வந்து நன்றாக நிலைத்து நிற்பது கடினமாக இருக்கும். மேலும் பெரிய பள்ளத்தில் சூரிய ஒளி நிறைய நேரம் கிடைக்காது. அதுபோல் ரேடியோ தொடர்பு செய்ய செயற்கைக்கோள் பார்வை படாது. இருந்தாலும் தென்துருவம் ஒரு அறிவியல் பார்வையில் முக்கியமான இடமாக உள்ளது. அங்குள்ள கனிமங்களையும், உலோகங்களையும் எல்லா நாடுகளும் விரும்புகின்றன. சீனா இன்னும் பத்து ஆண்டுகளில் ஒரு ஆராய்ச்சி கூடத்தை அங்கு நிறுவ உள்ளது. அமெரிக்கா இன்னும் நான்கு ஆண்டுகளில் தென்துருவத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ஆயத்தமாகிறது.

இந்த தென் துருவத்தில் நமது விண்கலம் மெதுவாக இறங்கினால் அங்கு கால்பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும். இந்தியா இந்த பயணத்தில் வெற்றி பெற அனைவரும் வாழ்த்துக்களை கூறுவோம்.

- டி.கார்த்திகேசன், இயக்குனர் (பணி நிறைவு), இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், மகேந்திரகிரி.

Next Story