தினம் ஒரு தகவல் : எண்ணற்ற நட்சத்திரங்கள் விண்வெளியில் இருந்தும் இருள் ஏன்?


தினம் ஒரு தகவல்  : எண்ணற்ற நட்சத்திரங்கள் விண்வெளியில் இருந்தும் இருள் ஏன்?
x
தினத்தந்தி 20 Jun 2019 9:31 AM GMT (Updated: 20 Jun 2019 9:31 AM GMT)

‘எண்ணற்ற நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கும் போது, விண்வெளி வெளிச்சமாகத் தானே இருக்க வேண்டும்?‘ இந்த கேள்விக்கு பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

20-ம் நூற்றாண்டை நாம் எட்டும் வரை, ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த பொதுவான கருத்து, நம் அண்டம் அளவில்லாதது. முடிவில்லாமல் நீள்கிறது. இது சாத்தியம் என்றால், வானத்தில் நாம் திரும்பும் இடமெல்லாம் நட்சத்திரங்கள் ஜொலிக்க வேண்டும். அப்படி இருக்கும் என்றால் வானம் எவ்வளவு வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்? 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள், நட்சத்திரங்களின் இடையே தூசியினால் ஆன மேகங்கள் உலவுவதால் நட்சத்திரங்களின் வெளிச்சத்தை அவை உள்வாங்கிக் கொள்வதாகக் கருதினர். அதற்கு பின்னர் வந்தவர்கள், அப்படி அந்த மேகங்கள் நட்சத்திர வெளிச்சத்தை தடுத்தால், அந்த நட்சத்திரங்களை விட இந்த மேகங்கள் அதிகம் ஒளிபெறும் என்றும், இதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கு ஒரு சாத்தியமான பதில் என்னவென்றால், நம் அண்டம் விரிவடைந்து கொண்டே இருந்தாலும், அதற்கு எல்லைகள் உண்டு. அதாவது ஒரு கட்டத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் முடிவுற்று வெறும் கரும்போர்வை மட்டுமே இருக்கும் என்று எடுத்துக் கொண்டால், இந்த எல்லைகள் கொண்ட பேரண்டத்தை நிரப்பும் அளவிற்கு நம்மிடம் நட்சத்திரங்கள் இல்லை. இதனால்தான் நாம் பார்க்கும் பல இடங்களில் நட்சத்திரங்கள் இல்லாமல் இருக்கின்றன. எல்லா இடத்திலும் ஒளி பரவாமல் இருட்டாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் ஒரு சாரர் நினைத்திருந்தனர். ஆனால், இந்தக் கோட்பாடு, விடை தெரியாத கேள்விக்கு ஏதோ ஒரு பதில் கூறுவோம் என்பது போல தான், ஆதாரம் ஏதும் இல்லை என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

பல கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளி நம்மை அடைய எவ்வளவு நேரம் ஆகும்? இதன்படி, நாம் இன்று பார்க்கும் நட்சத்திரத்தின் ஒளி எப்போதே அதிலிருந்து கிளம்பிய ஒளியாக இருக்கும். நாம் பார்க்கும் நட்சத்திரம் இல்லா வானில் கூட நட்சத்திரங்கள் இருக்கலாம், அதன் ஒளி நம்மை இன்னமும் வந்து அடையவில்லை என்பதே உண்மை. இது மட்டுமன்றி, நம் பேரண்டம் உருவாகி 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. ஒரு சில நட்சத்திரங்கள் தங்கள் ஆயுட்காலம் முடிந்து ஒளியிழந்து போயிருக்கலாம். இதனால் கூட நமக்கு பல நட்சத்திரங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Next Story