கலை உலக கம்பன்...!


கலை உலக கம்பன்...!
x
தினத்தந்தி 24 Jun 2019 6:54 AM GMT (Updated: 24 Jun 2019 6:54 AM GMT)

இன்று (ஜூன் 24-ந் தேதி) கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்.

கல்வியிற் சிறந்தவன் கம்பன். திரைப்படக் கவிதையிற் சிறந்தவன் கண்ணதாசன். ஆர்மோனிய பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு கவிஞருக்கு உண்டென்றால் அது கண்ணதாசனுக்குத்தான் உண்டு. கவிஞர் வாலி ஒருமுறை சொன்னதை போல மதுரையில் இருந்த மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமையும் அவருக்குத்தான் உண்டு. காகிதப் பூக்களுக்கு நடுவே காட்டு ரோஜாவாக பரிமளித்தவர். கதம்பங்களுக்கிடையே மல்லிகையாக மணம் பரப்பியவர்.

இலக்கிய புலவர்கள் இலக்கியங்களில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துகளைக் கூட திரைப்பட பாடல்களில் தீட்டியவர் கண்ணதாசன். தத்துவப்பாடல், நகைச்சுவைப் பாடல், காதல் பாடல், பகுத்தறிவு பாடல், பக்திப்பாடல், சமுதாயச் சிந்தனையோடு புரட்சிக் கனல் தெறிக்கும் பாடல் என எல்லா வகையான பாடல்கள் எழுதுவதிலும் திறமை மிக்கவராக இருந்த ஒரே கவிஞர் கண்ணதாசன்தான்.

எத்தனையோ பேர் இதுவரை திரைப்பாடல்கள் எழுதி இருந்தும் எல்லோரும் கண்ணதாசன் பெயரை மட்டும் நினைவு வைத்திருப்பதற்கு காரணம் என்ன?

ஏனைய கவிஞர்களெல்லாம் திரைப்பாடலோடு நின்றுவிட்டார்கள். கண்ணதாசன் ஒருவர்தான் திரைப்பாடலோடு கவிதை, கட்டுரை, புதினம், பத்திரிகை, அரசியல், ஆன்மிகம், மேடைச் சொற்பொழிவு என்று பல துறைகளிலும் காலூன்றி வியாபித்திருந்தார். இதனால் தான் கண்ணதாசன் பெயர் மேலோங்கி நிற்கிறது.

ஆனாலும் இலக்கியத்துறையில் இவர் காலூன்றி நின்றதைவிட திரைத்துறையில்தான் அழுத்தமாக காலூன்றி நிற்கிறார். கவிதையில் தன்னை வெளிப்படுத்துவதை காட்டிலும் திரைப்பாட்டில்தான் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி காட்டுகிறார்.

கடவுள் அவதாரத்தில் கண்ணன் அவதாரம் ஒன்றே முழுமை பெற்ற அவதாரம் என்று கூறுவதை போல கண்ணதாசன் முழுமையாக தன்னை வெளிப்படுத்தி விஸ்வரூபம் எடுத்து நிற்பது திரைப்பாட்டில் தான்.

இவரது பாடல்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் நம்பிக்கை தருகின்ற பாடல்களாகும். நாளை என்னாகும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கெல்லாம் ஆறுதல் தரும் வரிகள் அவர் பாடலில் எங்காவது ஓரிடத்தில் இருக்கும். ‘பாவ மன்னிப்பு’ என்ற படத்தில் “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்” என்ற பாடலில் வரும்.

“காலம் ஒருநாள் மாறும் என்
கவலைகள் யாவும் தீரும்”

என்ற வரிதான் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. சுமைதாங்கி படத்தில் இடம் பெற்ற,

“மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா”

என்ற பாடல்தான் காவியக் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, சென்னையிலே தங்கச் செய்து திரையுலகில் நுழைய வைத்தது. அமங்கலமான காட்சிக்குரிய பாடல்களைக் கூட மங்கலச் சொற்களில் எழுதுபவர் கண்ணதாசன். அறச்சொல் அவர் பாடலில் வராது.

எம்.ஜி.ஆர். படத்தில் நான் எழுதிய பாடலொன்றில் அறச்சொல் வந்துவிட்டது. உடனே எம்.ஜி.ஆர். ‘இதைப் போல் சொற்கள் பாடலில் வரக்கூடாது. கண்ணதாசன் இதில் கவனமாக இருப்பார். சோகப்பாடலில் கூட அறச்சொல் விழாமல் எழுதுவார். அப்படித்தான் நீயும் எழுதவேண்டும். பட்டுக்கோட்டை பாடலில் அறவார்த்தை வந்துவிடும். அதுபோல் எழுதக் கூடாது’ என்று சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பாடலையும் சொன்னார். அதன் பிறகு நான் எழுதிய பாடல்தான் “அன்புக்கு நானடிமை தமிழ்ப் பண்புக்கு நானடிமை” என்ற பாடல்.

கண்ணதாசனுக்கு இணையாக மெட்டுக்குப் பாட்டெழுதக் கூடியவர்கள் இந்திய திரையுலகில் யாருமில்லை என்று சொல்லத்தக்க வகையில் எழுதினார். மருதகாசி நுழைந்த காலத்தில்தான் இவரும் திரையுலகில் நுழைந்தார். மருதகாசிக்கு கிடைத்த அளவு இவருக்கு பாட்டெழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுரை வீரன், மன்னாதி மன்னன், நானே ராஜா ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனத்தை கண்ணதாசன் எழுதினார். ஆனால் அதில் நிறையப் பாடல்களை உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கே.பி.காமாட்சி சுந்தரம் போன்றவர்கள்தான் எழுதினார்கள். கண்ணதாசன் ஒன்றிரண்டு பாடல்களே எழுதினார்.

இவருக்கு பின்னால் வந்தவர்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அவர்கூட ஒரு படத்தின் மொத்த பாடல்களையும் எழுதக்கூடிய வாய்ப்பை பெற்றார். இவருக்கு அந்த வாய்ப்பை யாரும் தரவில்லை. எல்லாத் திறமை இருந்தும்கூட ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதக்கூடிய வாய்ப்பை யாரும் தரவில்லையே என்று ஆதங்கப்பட்டு எல்லாப் பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மாலையிட்ட மங்கை படத்தை தயாரித்தார். ஆசை தீர அதில் பதினெட்டு பாடல்களை எழுதினேன் என்று அவரே ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார்.

கவிதையில் மட்டுமல்ல, உரைநடையிலும் புதிய நடையைக் காட்டியவர் கண்ணதாசன். இவரது உரைநடை சிறுசிறு வாக்கியங்களாக இருக்கும். அதையே சீர் பிரித்து எழுதினால் அகவற்பா போலே திகழும். இவரது வனவாசமே அதற்கு எடுத்துக்காட்டு. வனவாசத்திற்கீடான உரைநடை இலக்கியம், உலக இலக்கியங்கள் எதிலும் இல்லையென்று கூட கூறலாம்.

கவிஞர்களைப் பாராட்டும் பண்பு கண்ணதாசனிடம் அதிகம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த மீனவ நண்பன் படத்தில் நான் எழுதிய “தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” என்ற பாடலை வாகினி ஸ்டூடியோவில் என்னைப் பார்த்தபோது பாராட்டி பேசினார்.

‘கிழக்கே போகும் ரெயில்’ என்ற படத்தில் நான் எழுதிய “மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ” என்ற பாடலை கண்ணதாசன் எழுதியதாக நினைத்துக்கொண்டு இதைப்போல் ஒரு பாடலை நீங்கள் எங்களுக்கு எழுத வேண்டும் என்று ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா கண்ணதாசனிடம் கேட்டபோது, “அது நான் எழுதிய தல்ல, முத்துலிங்கம் எழுதிய பாடல். சந்தங்களெல்லாம் நன்றாக எழுதுவார். அவரை வைத்தே நீங்கள் பாடல் எழுதலாம்” என்று சொன்னவர் கண்ணதாசன். டி.ஆர்.ராமண்ணா சொல்லித்தான் இந்த விவரம் எனக்கு தெரியும்.

எல்லாத்துறையிலும் வெற்றி பெற்ற கண்ணதாசன் தோற்ற இடம் அரசியல்தான். நெப்போலியனுக்கு வாட்டர்லூ போல கண்ணதாசனுக்கு அரசியல்தான் வாட்டர்லூவாக அமைந்தது. அரசியல்வாதிகளுக்கு தேவையான பக்குவம், நிதானம், பொறுமை கண்ணதாசனிடம் இருந்ததில்லை.

முதல்நாள் ஒருவரை தூக்கோ தூக்கென்று தூக்கிப்பாடுவார். மறுநாள் தாக்கோ தாக்கென்று தாக்கிப்பாடுவார். நேற்று போற்றினோமே இன்று தூற்றுகிறோமே, மக்கள் என்ன நினைப்பார்கள்? அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்.

இந்த முரண்பாடுதான் இலக்கியத்தில் அவருக்கு வெற்றியைத் தந்தது. இந்த முரண்பாடுதான் அரசியலில் அவருக்கு தோல்வியைத் தந்தது. கண்ணதாசன் முரண்பாடுகளின் மொத்த உருவம். அவரை ரசிக்கலாம். பின்பற்ற முடியாது. மனக் கட்டுப்பாடு மருந்துக்கும் இல்லாதவர். மோகப் பாறையிலே மோதி மோதி தேகப்படகைச் சிதைத்து கொண்டவர். ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு கண்ணதாசன்தான். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டும் கண்ணதாசன்தான். கோபம் வந்தால் சீறிவிழமாட்டார். குழந்தையைப் போலே குபுக்கென்று அழுதுவிடுவார். இவரது பாடல் இல்லையென்றால் திரை இசை மங்கை திலகம் இழந்த விதவையாக வேறுபட்டிருப்பாள்.

கண்ணதாசனின் பேனாவின் தாக்குதலுக்கு இலக்காகாத தலைவர்கள் யாரும் இல்லை. அண்ணா, பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர்., சிலம்புச் செல்வர், பாரதிதாசன் என்று பட்டியல் நீளும். ஆனால் இவரை யாரும் கோபித்துக்கொண்டதில்லை. இவர் தமிழை ரசித்தார்கள். இவர் தமிழுக்காக பொறுத்துக்கொண்டார்கள்.

இவர் போற்றப்படத்தக்க கவிஞர் என்பதால்தான் தன்னைத் திட்டியபோதும் அதைப் பொருட்படுத்தாமல் கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். கண்ணதாசனுக்கு பிறகு புலமைப்பித்தனை அரசவைக் கவிஞராக்கினார். அவர் பதவிக்காலம் முடிந்ததும் என்னை அரசவைக் கவிஞர் ஆக்கினார். காங்கிரஸ் ஆட்சியில் அரசவைக் கவிஞராக இருந்தவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. ஆக, சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் அரசவைக் கவிஞர்களாக இருந்த பெருமை எங்கள் நால்வரை மட்டுமே சாரும். நானும், கண்ணதாசனும் சேர்ந்து பல படங்களில் பாடல் எழுதியிருக்கிறோம். சினிமாவுக்கு நான் வருவதற்கு முன்பு கண்ணதாசனும், நானும் சில கவியரங்குகளில் பங்கு பெற்றிருக்கிறோம். கலைஞர் கருணாநிதி பற்றிய கவியரங்கம் ஒன்றை சேலத்தில் கண்ணதாசன் நடத்தினார். அதில் நான் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று விடாப்பிடியாக அழைத்துச் சென்றார்.

“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை”

என்று பாடினார் கண்ணதாசன்.

அது உண்மைதான். கண்ணதாசனைப் போன்ற கவிஞர்களுக்கு என்றும் மரணமில்லை. தென்றல் இருக்கும் வரை, தேன்தமிழ் இருக்கும் வரை கண்ணதாசன் பெயரும் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாழ்க கண்ணதாசன் திருப்புகழ்.

- கவிஞர் முத்துலிங்கம், திரைப்பட பாடலாசிரியர்.

Next Story