பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருளாகும் பருத்தி


பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருளாகும் பருத்தி
x
தினத்தந்தி 24 Jun 2019 11:09 AM GMT (Updated: 24 Jun 2019 11:09 AM GMT)

பிளாஸ்டிக்கின் தீமை பற்றி உலகம் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமலுக்கு வந்துள்ளது. நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல.

பயன்பாட்டிற்கு எளிமையாக இருப்பதாலும், உறுதி மற்றும் நீர் ஒட்டாத தன்மையாலும் நாம் பிளாஸ்டிக் பிரியர்களாகிப்போனது உண்மையே.

எனவே அதற்கு சரியான மாற்றுப்பொருள் இல்லாதவரையில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது பெரும் பிரச்சினையாகவே கருதுகிறது விஞ்ஞான உலகம். ஆகையால் மட்கும் பிளாஸ்டிக் மற்றும் சரியான பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் பற்றிய ஆய்வுகள் உலகம் முழுக்க நடந்து வருகிறது. தற்போது அதற்கு சரியான மாற்றுப்பொருள் பருத்திப்பஞ்சு என்று கண்டுபிடித்திருக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு.

பருத்தியில் இருந்து ஆடை தயாரிக்கும் இழைகள் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்போது பஞ்சு நிறைய அளவில் கழிவாக மிஞ்சும். இதையும் மெத்தை, தலையணை தயாரிப்பு மற்றும் கட்டுப்போடும் துணிகள் உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். இப்போது இந்த கழிவுப்பஞ்சை மட்கும் பிளாஸ்டிக்காக பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டீக்இன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த முறையை கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஆண்டிற்கு 32 மில்லியன் டன் பஞ்சு பயன்படுத்துவதாகவும், இதில் மூன்றில் ஒரு பகுதி கழிவாக மிஞ்சுவதாகவும் மதிப்பிடப்படுகிறது. இந்த கழிவை குறைத்து, மட்கும் பிளாஸ்டிக்காக மாற்ற முடியும் என்கிறார் பல்கலைக்கழக ஆய்வாளரான மர்யம் நாபே.

பருத்தி பஞ்சு மட்டுமல்லாமல் அதன் விதைகள், தண்டு ஆகியவற்றை சில உயிரிவேதிப்பொருட்களுடன் சேர்த்து பஞ்சு பாலிமர் (பிளாஸ்டிக்) தயாரிக்கலாம். இது சுற்றுச்சூழலுக்கு தீமையில்லாமல் மட்கும் தன்மையும் உறுதியும் கொண்டுள்ளது. இதே முறையில் கோதுமை வைக்கோல் உள்பட பல்வேறு தாவர கழிவுகளை மட்கும் தன்மையுள்ள மாற்றுப்பொருளாக தயாரித்து பயன்படுத்தும் ஆய்வுகளில் இறங்கி உள்ளது விஞ்ஞானிகள் குழு.

Next Story