காசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்


காசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:32 AM GMT (Updated: 24 Jun 2019 11:33 AM GMT)

காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காச நோயை உருவாக்கும் பாக்டீரியா கிருமிகள், நோய் தாக்கியவர்களின் உடலில் வைட்டமின்-டி சத்துக்களை சேரவிடாமல் தாக்குதல் நடத்திவிடுகிறது. உடலின் அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றான இது தடுக்கப்படுவதால் நோயாளிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

இதற்காக வைட்டமின்-டி நிறைந்த உணவுப்பொருட்களை காசநோயாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. தற்போது அவர்களுக்கு சிறந்த மாற்று உணவுப்பொருளாக சிப்பிக் காளானை வழங்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஜெர்மனைச் சேர்ந்த ஹோகென்கெய்ம் பல்கலைக் கழக மருத்துவ முனைவர் பட்ட ஆய்வாளர் சேயோம் கெப்லி.

பொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின்-டி அதிக அளவில் இருப்பதில்லை. ஏனெனில் காளான்கள் பெரும்பாலும் வெயிலில் விளைவதில்லை. இருந்தாலும் இவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலமும், இவை உடலில் செரிமானம் ஆகும் போதும் நிறைய வைட்டமின்-டி சத்து உடலுக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

மருத்துவர் கெப்லி தனது குழுவி னருடன் சேர்ந்து 32 காசநோயாளிகளுக்கு 4 மாதத்திற்கு காளான் உணவுகளை கொடுத்து ஆய்வு செய்தார். அப்போது 95 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு அதிகமாவது தடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே நோயின் தீவிரம் காளான் உணவுகளால் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணமானது.

இந்த வகை காளான்களை எங்கும் எளிமையாக வளர்க்க முடியும் என்பதால் காளான் உணவை, காசநோயாளிகளுக்கான சிறந்த மாற்று உணவாக வழங்கலாம் என்று ஆய்வுக்குழு கூறி உள்ளது. காளானில் வைட்டமின்-டி சத்துகளை அதிகமாக சேமிப்பது எப்படி என்பது பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது ஆய்வுக்குழு. அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள சத்துக்கள் தொடர்பான வருடாந்திர மாநாட்டில் இந்த காளான் உணவு பற்றி விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story