இந்திராகாந்தியை கைது செய்தவர்...!


இந்திராகாந்தியை கைது செய்தவர்...!
x
தினத்தந்தி 25 Jun 2019 5:24 AM GMT (Updated: 25 Jun 2019 5:24 AM GMT)

இந்தியாவில் 1975- ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார்.

ந்தியாவில் 1975- ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். 1977-ம் வருடம் நடந்த தேர்தலில் ஜனதாகட்சி தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட ‘எமர்ஜென்சி’ சட்டத்தின்போது 1975-ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற அத்துமீறல்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார்.அது தொடர்பாக அப்போதைய ஜனதா அரசு இந்திரா காந்தியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. சி.பி.ஐ. இணை இயக்குனராக இருந்த லட்சுமி நாராயணனுக்கு இந்திராகாந்தியை கைது செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்திராகாந்தியை கைது செய்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்கும். சமயோஜிதமாக லட்சுமிநாராயணன் இந்திராகாந்தியின் மகன் ராஜீவ் காந்தியிடம் பேசி சுமுகமாக கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பின்பு இந்திராகாந்தி இல்லம் சென்று தான் அவரிடம் காவல் விருதுகள் பெற்றதை நினைவு கூர்ந்து தற்போது கைது செய்ய வேண்டிய தர்ம சங்கடமான நிலையை பணிவுடன் தெரிவிக்க இந்திராகாந்தியும் விலங்கிட்டு கைது செய்யுங்கள் என்று கூறினார். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பதில் அளிக்க வல்லவரான லட்சுமிநாராயணன் ‘மன்னிக்கவும் மேடம் பணிசுமையில் கைவிலங்கு கொண்டுவர மறந்துவிட்டேன்’ என்று கூற அம்மையாரும் சிரித்துக்கொண்டே கைது செய்ய ஒத்துழைப்பு கொடுத்தார். நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த விவரத்தை சுவைபட தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணன் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது எனலாம். நேர்மை தவறாத அதிகாரி என்று தனது முழு பணிக்காலத்திலும் அப்பழுக்கற்ற நடை முறையை கடைபிடித்தவர். பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதம் ஏந்திய போலீசாருடன் வளைய வரும் முக்கிய நபர்கள் மத்தியில் நேர்மையும், சத்தியவாக்கும் தான் ஒருவருக்கு பாதுகாப்பு வளையம் என்று ஆடம்பரம் இன்றி பெருமை பட வாழ்ந்தவர்.

1951-ம் வருடம் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்து தமிழ்நாட்டில் தனது காவல் பணியை தொடங்கினார். முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் இவரது சகோதரர் ஆவார். பாரம்பரியம் மிக்க தமிழக காவல்துறை நாட்டிற்கு முன்னோடியாக பல செயல்பாடுகளில் முத்திரை பதித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் அதற்கு அடித்தளம் வகுத்த உயர் அதிகாரிகள் அருள், மகாதேவன், நரசிம்மன் போன்றவர்களோடு இணைந்து பணியாற்றினார். வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களில் உள்நாட்டு பயங்கரவாத பிரச்சினைகளை கையாள மலபார் போலீஸ் ஆயுதப்படை என்ற அப்போதைய தமிழ்நாட்டு சிறப்பு காவல் படை அனுப்பப்பட்டது. மலபார் போலீஸ் படையின் தளபதியாக இருந்த லட்சுமிநாராயணன் தலைமை ஏற்று கடினமான பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி எல்லோரது பாராட்டை பெற்றார். பாரபட்சம் இன்றி செயல்பட்டதால் உள்ளூர் மலைவாழ் மக்களின் அன்பை பெற்றார்.

முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காவல் துறை தலைவருக்கு டி.ஜி.பி., தலைமை இயக்குனர் என்ற உயர் பதவி அறிவித்தார். முதல் டி.ஜி.பி.யாக ஸ்ட்ரேசி நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு டி.டி.பி.அப்துல்லா பொறுப்பேற்றார். இருவரிடமும் காவல்துறை தலைவராக நிர்வாக பொறுப்பில் இருந்து காவல் துறை நிர்வாகத்தை செம்மைபடுத்திய பெருமை லட்சுமிநாராயணனை சாரும். அதுவும் அப்போது காவல் துறையில் வேலை நிறுத்தம் நாடெங்கிலும் பெரும் பிரச்சினையாக வெடித்த கால கட்டம். கடினமான சூழலில் அரசுக்கு தோள் கொடுத்து நிலைமையை சீர் செய்தார்.

எம்.ஜி.ஆர். காவல் துறை வீட்டு வசதி வாரியத்தை அமைத்தார். இந்தியாவில் இது ஒரு முன்னோடி திட்டம். காவலர்களுக்கு சொந்தமாக குறைவான விலையில் வீடு கட்டித்தர வேண்டும் என்ற ஒரு சிறப்பான திட்டத்தை லட்சுமி நாராயணன் வடிவமைத்து அரசின் ஒப்புதலை பெற்றார். வாரியத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். தமிழநாட்டின் பல மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட காவல்துறையினருடன் கலந்தாய்ந்து செயல் திட்டங்களை வகுத்தார். திருச்சி நாவலூரிலும், வேலூர் தொரப்பாடியிலும் இத்திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டது. காவலர்களுக்கு கனவு இல்லம் கிடைத்தது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி காவலர் குடியிருப்பு மற்றும் காவல் நிலையங்கள் கட்டுமான பணியும் இந்த வாரியத்திற்கு அளிக்கப்பட்டது. இதற்கு வழிவகுத்தவர் லட்சுமி நாராயணன்.

காவல்துறை என்றாலே கடுப்புதுறை அடித்து துவைப்பார்கள் என்ற கெட்ட பெயர் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்தது. அதை மாற்றி மக்கள் நல்மதிப்பை பெற ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற தமிழக காவல்துறை திட்டத்தை காவல்துறை தலைவர் பரமகுரு தொடங்கினார். அதற்கு வலிமை சேர்க்கும் விதமாக காவல்துறை புலனாய்வு, விஞ்ஞான அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று காவல் நவீனமயமாக்கல் திட்டத்தை லட்சுமிநாராயணன் வகுத்தார். அதற்கு எம்.ஜி.ஆர். முழு ஆதரவு அளித்து செயல்பட நிதி ஒதுக்கினார். தற்போது தமிழக காவல் துறை நவீனமயமாக்கலில் நாட்டில் தலை சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த வலிமையான அடித்தளம். லட்சுமிநாராயணன் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்ற காலம் ஒரு பொற்காலம் எனலாம். நான் தலைமை இடத்தில் அவருக்கு கீழ் எஸ்.பி. ஆக சி.ஐ.டி.யில் பணி புரியும் பாக்கியம் பெற்றேன். சி.பி.ஐ.யில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து லட்சுமிநாராயணன் தமிழக காவல் துறை, சி.ஐ.டி. குற்றபுலனாய்வு பிரிவுகளில் பணி புரிவோருக்கு திறன் மேம்பாடு செய்தல், பணி சிறக்க தேவையான உபகரணங்கள் அளிக்க எல்லா வழிகாட்டுதல்கள் வழங்கினார். பாரன்சிக் ஆய்வுக்கூடம், குற்றவியல் விஞ்ஞான கூடம் புலனாய்வில் கிடைக்கும் தடயங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்து காவல் துறைக்கு உறுதுணையாக செயல்படுகிறது. விஞ்ஞான கூடத்தின் அப்போதைய தலைவர் சந்திரசேகரன் பவுதிகம், ரசாயனம் துறைகளை மேம்படுத்த பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க அரசோடு விவாதித்து அதற்கு ஒப்புதல் பெற்று லட்சுமிநாராயணன் நடைமுறைபடுத்தினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தடயங்களை ஆய்வு செய்ய லட்சுமிநாராயணனால் நிறுவப்பட்ட ஆய்வுக்கூடங்கள் மற்றும் தேர்ந்த நிபுணர்கள் பெரும் பங்காற்றினர்.

1985-ம் வருடம் பணிநிறைவு செய்து லட்சுமிநாராயணன் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடனே அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால் லட்சுமிநாராயணன் பணி நீட்டிப்பு பெற விரும்பவில்லை. தன்னுடன் பணியாற்றிய இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தனது பணிகாலம் முடிந்தது. மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பெருந்தன்மையாக கூறியது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எம்.ஜி.ஆரின் பாராட்டை பெற்றார். அவர் பரிந்துரையின் பேரில் ரவீந்தரனை காவல் தலைமை இயக்குனராக எம்.ஜி.ஆர். நியமித்தார். அரசு பணியில் இருப்பவர்களில் வெகு சிலரே அறிவு ஜீவிகளாக விளங்குகிறார்கள். அத்தகைய அறிவு ஜீவி என்றால் லட்சுமிநாராயணனை சொல்லலாம். பணியில் நேர்மை, பழக இனிமை என்ற தாரக மந்திரத்திற்கு எடுத்துக்காட்டு லட்சுமி நாராயணன் ஆவார்.

நடராஜ், ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.

Next Story