எல்லைப் போராளி ம.பொ.சி...!


எல்லைப் போராளி ம.பொ.சி...!
x
தினத்தந்தி 26 Jun 2019 5:06 AM GMT (Updated: 26 Jun 2019 5:06 AM GMT)

“பெற்றோர் உனக்கிட்ட பெயரோடு நின்றுவிடாதே, உன்னுடைய உன்னதப்பெயர் உன்னிலிருந்து உருவாக வேண்டும்” என்பார் ஓர் அறிஞர்.

ன்று (ஜூன் 26-ந் தேதி) ம.பொ.சிவஞானம் பிறந்த தினம்.

“பெற்றோர் உனக்கிட்ட பெயரோடு நின்றுவிடாதே, உன்னுடைய உன்னதப்பெயர் உன்னிலிருந்து உருவாக வேண்டும்” என்பார் ஓர் அறிஞர். பெற்றோர் ஒரு குழந்தைக்கு இட்ட பெயர் சிவஞானம். மனிதனாக வளர்ந்த பிறகு பெற்றுக்கொண்ட பெயர் “சிலம்புச் செல்வர்”.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சாலவன்குப்பத்தில் பொன்னுசாமி-சிவகாமியம்மாள் தம்பதியருக்கு 26.6.1906-ல் பிறந்தவர்தான் ம.பொ.சி. மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதன் சுருக்கமே அது.

கள் இறக்கும் தொழில் செய்த தந்தையிடம் முரண்பட்டு பள்ளிப்படிப்பை இழந்தார். மூன்றாம் வகுப்போடு படிப்பு நின்றது. வறுமையைப் போக்கிக்கொள்ள அச்சுக்கோர்க்கும் பணியில் இணைந்தார். இளம் வயதிலேயே தேசியத்தில் நாட்டம் வந்துவிட்டது. விடுதலைப் போராட்டத்தில் நம்மவரின் உயிர்த்தியாகம், சிறைக்கொடுமைகள் பற்றிய செய்திகள், ஆங்கில ஆட்சியின் அடக்குமுறை இவையெல்லாம் அவர் மனதில் அச்சாகப் பதிந்தன. 2.12.1919-ல் வடசென்னைக்கு வருகை புரிந்த மகாத்மா காந்தியை வரவேற்று, பேச வைத்துப் பெருமை பெற்றார்.

காங்கிரஸ் கட்சி சார்பாக சுதேசிய கண்காட்சி நடத்தி நிதி சேர்த்தார். மக்களுக்கு விடுதலை உணர்ச்சி ஊட்ட பல கூட்டங்களை நடத்தினார். ஆங்கில அரசின் கழுகுப் பார்வை அவர் மேல் விழுந்தது. அவரது ‘வந்தே மாதரம்’ முழக்கத்தையும், ஆவேசப் பேச்சையும் கேட்டு வெகுண்ட ஆங்கில அரசின் இரும்புக்கரம் ம.பொ.சி.யைத் தொட்டது. வேலூர் சிறையில் போட்டு வதைத்து பின் வெளியே விட்டது. 1942 ஆகஸ்டு கிளர்ச்சியில் கைதான ம.பொ.சி.யை வடநாட்டு அமராவதி சிறையில் அடைத்து வைத்தது ஆங்கில அரசாங்கம். கள்ளுக்கடை மறியல் முதல், நாடு விடுதலை பெறும்வரை ஆறு முறை சிறைத்தண்டனை பெற்றவர்.

தேசியத்தைப் போற்றினாலும் தமிழின் பெருமை பேச அவர் தவறவில்லை. விடுதலைக்குப் பின் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது தமிழின் தகுதியை தமிழினத்தின் சிறப்பை எடுத்துரைப்பதில் நாட்டம் காட்டினார். அதற்காகவே தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவருடைய அமைப்புக்கு, திரு.வி.க., காமராஜ், ஜீவானந்தம், பாரதிதாசன், ‘கல்கி’ போன்ற அறிஞர்கள் ஆதரவு காட்டினர்.

1954-ல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் பகுதிகளைத் தீர்மானிப்பதில் பங்காளிச் சண்டைகள் ஏற்பட்டன. திருப்பதி திருமலை நம் கையை விட்டுப்போனது மட்டுமில்லாமல் சென்னையும் இழுபறி நிலைக்கு வந்தது. அப்போது சிங்கம் போல் சிலிர்த்தெழுந்தவர் ம.பொ.சி. அவரது அயராத உழைப்பும், அற்புதமான வாதத்திறமையும், பூகோள அறிவும், வரலாற்றுப் பார்வையும் சென்னையை நமக்கு மீட்டுத் தந்தது. அதுபோல திருத்தணியும் மீட்கப்பட்டது. கேரளப் பகுதியில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளும் தமிழகத்தோடு இணைந்தன. இதற்கெல்லாம் ஜீவா, ம.பொ.சிக்கு துணை நின்றார். அதோடு அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை, உளவங்கோடு பகுதிகளை குமரி மாவட்டத்தோடு இணைக்கப் பாடுபட்டார்.

1967-ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ம.பொ.சி. தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்குப் பிள்ளையார் சுழிபோட்டார். 18.7.67-ல் மெட்ராஸ் என்றிருந்த நமது மாகாணம் அப்போதைய முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் ‘தமிழ்நாடு’ ஆனது. சிலப்பதிகாரம் பற்றிப் பல பேர் பேசினாலும் இவரது அணுகுமுறை அற்புதமானது. தனித்துவமானது. புதிய விளக்கங்கள் தருவது.

பத்மஸ்ரீ, எம்.எல்.ஏ., எம்.எல்.சி., கலைமாமணி, சாகித்ய அகாடமி விருது, பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி எத்தனையோ பதவிகள், விருதுகள். அத்தனைக்கும் மேலாக, ‘சிலம்புச் செல்வர்’ என்பதே செம்மாந்து நிற்கிறது. ஆங்கிலம் மூலம் கல்வி கற்று ஆங்கிலத்திலேயே பேசும் பட்டதாரிகள் நிறைந்த சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் ஆனார். பட்டமளிப்பு விழாக்களில் கருப்பு உடை அணிந்து கருப்பு தொப்பியும் வைத்தவர்கள்தான் கலந்துகொள்ள முடியும். தமிழ்ப் பண்பாட்டில் ஊறித் திளைத்த ம.பொ.சி.யால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் உடையான வேட்டி, சட்டையோடுதான் வருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். அது ஏற்கப்படாததால் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதில்லை. மதுரை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் ஆனார். அங்கேயும் இந்தப் பிரச்சினை குறுக்கிட்டது. ஆனால் மதுரை பல்கலைக்கழகத்தில் அப்போது துணைவேந்தராக இருந்தவர் தமிழ் அறிஞர், தமிழ் ஆர்வலர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். அவரிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நான், அவர்களது வழக்கப்படி ஆடை அணிய விரும்பவில்லை. கவியரசர் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் வெள்ளை வேட்டியும், ஜிப்பாவும் அணிந்துகொண்டு போகிறார்கள் என்றார்.

ம.பொ.சி.யின் தேசிய மற்றும் தமிழ் உணர்வுக்கு மதிப்பளித்த தெ.பொ.மீ. அதற்குச் சம்மதம் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா உரையாற்ற வந்த அறிஞர் அண்ணாவும் அதைப் பின்பற்றினார். தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தபோது ம.பொ.சி.யை தமிழக சட்டமன்ற மேலவையின் தலைவராக நியமித்தார். தமிழுக்கு தலைமைப்பீடம் தந்து அழகுபார்க்கிறேன் என்று அப்போது எம்.ஜி.ஆர். கூறினார். அந்தத் தருணத்தில் ம.பொ.சி. கூறிய கருத்து போற்றுதலுக்குரியது. “சட்டமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க என்ற இரு கட்சிகளுக்குமிடையே பிரச்சினைகள் வரும்போது, ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் எனது மனச்சாட்சிப்படித்தான் தீர்ப்புச் சொல்வேன் என்ற உத்திரவாதம் பெற்றுத்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” என்றார். இந்தக் காலத்துக்கு இந்த சிந்தனை மிகவும் தேவை.

முனைவர் இளசைசுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.

Next Story