ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் காத்திருக்கும் சவால்கள்


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் காத்திருக்கும் சவால்கள்
x
தினத்தந்தி 27 Jun 2019 6:11 AM GMT (Updated: 27 Jun 2019 6:11 AM GMT)

மூன்று அடுக்குகள் கொண்ட ஜனநாயக அமைப்பில் ஒரே தேர்தல் எழுப்பும் பல கேள்விகள்

நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் மூன்றே வாரத்தில் ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் திட்டத்தை விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை ஜூன் 19 அன்று கூட்டினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதில் அவருக்கு உள்ள உறுதி இதன் மூலம் வெளிப்பட்டது. அழைக்கப்பட்ட 40 கட்சி தலைவர்களில் 21 பேர் பங்கேற்றனர். மூன்று கட்சிகள் தம் கருத்துகளை கடிதம் மூலம் அனுப்பின.

இதை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட சிக்கல்களையும், சவால்களையும் ஆராய குழு ஒன்றை அமைக்க மோடி உறுதியளித்துள்ளார். மூன்று அடுக்குகள் கொண்ட ஜனநாயக அமைப்பில் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்த தேர்தல் பணியாளர்கள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் தளவாடங்களை தேசிய, மாநில, கிராம அளவில் ஒருங்கிணைக்க பெரும் திட்டமிடல் தேவைப்படுகிறது. இதற்காக இந்திய அரசியல் சட்டத்திலும் பல திருத்தங்களை செய்ய வேண்டியதுள்ளது.

ஒரு முடிவு எடுத்த பின் அதை செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பார் என்று பிரதமர் மோடியை பற்றி நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் என்ன?

எளிமையாக சொன்னால் இந்திய குடிமக்கள் அனைவரும் மக்களவை, மாநில சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரே நாளில் வாக்களிக்கும் முறை.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியா போன்ற நாட்டிற்கு மிகவும் பொருத்தமாக தோன்றுவது ஏன்?

இதில் புதுமை எதுவும் இல்லை என்றாலும் இந்தியாவில் 1952 முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடைபெற்றன. 1968 மற்றும் 1969-ல் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன. 1970-ல் மக்களவை கலைக்கப்பட்டது. இவற்றின் விளைவாக இந்த திட்டம் சீர்குலைந்தது.

1967, 1977, 1980, 1996, 1998 மற்றும் 1999-ல் ஆறு மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. நான்கு வருடங்கள் முதல் 13 மாதங்கள் வரை இவை நீடித்தன. 1971 மற்றும் 2004-ல் அரசுகளுக்கு பெரும்பான்மை பலம் இருந்த போதிலும் மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன.

நாடு எப்போதும் தேர்தல் மனோநிலையில் இருப்பதால் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவது நாட்டிற்கு பல வகைகளில் நன்மையளிக்கும் என்று ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை முன்மொழிபவர்கள் கருதுகின்றனர். நடப்பு மக்களவைக்கும், அடுத்த மக்களவைக்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 30 சட்டமன்ற, யூனியன் பிரதேசங்களில் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன.

சாதகமான அம்சங்கள்
ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலம் இந்தியா பல நன்மைகளை பெறமுடியும். பொருளாதார ரீதியில், பணியாளர்கள் சம்பளம், போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவுகளை குறைப்பதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும். இந்த பணத்தை இதர திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.

சமீபத்தில் முடிவடைந்த 2019 மக்களவை தேர்தலில் தோராயமாக ரூ.55,000 கோடி முதல் ரூ.60,000 கோடி செலவு செய்யப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோசி வெளியிட்ட சி.எம்.எஸ் அறிக்கை சொல்கிறது. தேர்தல் ஆணையம் செய்த செலவுகள், அரசு துறைகள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செலவுகள் அனைத்தும் இதில் அடங்கும். சராசரியாக ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடியும், வாக்காளர் ஒருவருக்கு தலா ரூ.700 செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார செலவுகளுடன், சமூக அரசியல் சந்தர்ப்ப விலைகளும் சேர்க்கப்பட வேண்டும். ஆளும் கட்சியின் தலைவர் என்ற முறையில் தனது கட்சி மாநில தேர்தல்களில் வெற்றி பெற செய்ய பிரதமர் தனது நேரத்தையும், கவனத்தையும் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மாற்றாக நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த நேரத்தை அவர் செலவு செய்யலாம். ஆனால் நலத் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பிரதமர் மோடி எப்போதும் தேர்தல் மனோநிலையிலேயே இருந்தார் என்று பல விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறும் தேர்தல்கள் அவைகளுக்கான பிரசாரங்களினால் ஏற்படும் கசப்பான அரசியல் மோதல்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதால் மக்களிடம் சமூக, மதரீதியான பதற்றம், கவலைகள் அதிகரிக்கிறது. தேர்தல்களை ஒழுங்காக நடத்த மத்திய பாதுகாப்பு படைகளை பயன்படுத்துவதால் அவற்றின் அடிப்படை பணிகள் பாதிப்படைகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான அரசியலில் தான் கருப்பு பணத்தின் ஆணிவேர் உள்ளதாக கருதப்படுகிறது. அடிக்கடி தேர்தல்கள் நடப்பதை குறைப்பதன் மூலம் தேர்தல்களில் கருப்பு பணம் பயன்படுத்தப்படுவதையும், குதிரை பேரங்களையும் குறைக்க முடியும்.

கடுமையான தேர்தல் நடத்தை விதிமுறைகளுடன் சட்டமன்ற தேர்தல்கள் அடிக்கடி நடப்பதால் முக்கிய நலத்திட்டங்கள் முடங்கி விடுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். முக்கியமாக மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பாதிக்கப்பட்டு நீண்ட கால பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.

எளிமையான தீர்வு உள்ளதா?

கொள்கை அளவில் இத்திட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் இதை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொள்கையை செயல்படுத்த பல்வேறு சிக்கல்களை முதலில் தீர்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். மக்களவை மற்றும் சட்டமன்றங்களின் கால வரம்பை நிர்ணயம் செய்து அவற்றை ஒருங்கிணைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆளும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையை இழந்து அதன்பின் எதிர்க்கட்சிகள் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் என்ன ஆகும்?

நம்பிக்கையில்லா தீர்மானத்துடன் அடுத்ததாக ஆட்சியமைக்க இருக்கும் கட்சி மீது நம்பிக்கை தீர்மானத்தையும் சேர்த்து நிறைவேற்றும்படி மாற்றம் செய்ய வேண்டும் என்று சில அரசியலமைப்பு சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஐந்து வருடம் நிலையான ஆட்சி முறையை ஏற்படுத்துவதன் மூலம் சர்வாதிகார போக்கு கொண்ட அரசுகள் உருவாகும் என்று சில விமர்சகர்கள் கருதுகின்றனர். உத்தரவாதமான ஆட்சி முறையில் இடையே பதவி இழக்க வாய்ப்பில்லை என்ற தைரியத்தில் வாக்காளர்களிடம் ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் நடக்கும் தன்மை குறைந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

நமது ஜனநாயக அமைப்பின் மூன்றாவது அடுக்கில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பஞ்சாயத்துகள், ஜில்லா பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும். இவைகளுக்கான தேர்தல்களை நடத்தும் பொறுப்பு அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களின் வசம் உள்ளது. 31 மாநில தேர்தல் ஆணையங்கள் மூலம் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த மிகப்பெரும் ஒருங்கிணைப்பு முயற்சி தேவைப்படும்.

இதை படிப்படியான முறையில் செயல்படுத்த முடியும் என்று சில வல்லுனர்கள் கருதுகின்றனர். முதல் கட்டமாக எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒருங்கிணைக்க வேண்டும். செயல்பாட்டில் இருக்கும் சட்டமன்றங்களின் கால வரம்பை தேர்தல் ஆணையம் வசம் உள்ள அதிகாரங்கள் மூலம் ஆறு மாதம் அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் அவற்றை தொகுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கும் அதிக காலம் வரம்பு கொண்ட சட்டமன்றங்களை மாற்றி அமைக்க ஜனாதிபதி தம்மிடம் உள்ள சிறப்பு அதிகாரங்களை கொண்டு செயல்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற குழு அறிக்கை 2015-ல் தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் கருத்துகளை மேற்கோள் காட்டுகிறது.

கொள்கையளவில் இதற்கு ஆதரவளிக்கும் அ.தி.மு.க.வின் கருத்து:-

“எனினும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு நிலையான கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். பிரிட்டனில் 2011-ல் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு நிலையான கால வரம்பு 2011 சட்டத்திற்கு ஒப்பானது இது.

அந்த சட்டத்தின்படி நாடாளுமன்ற தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடத்தப்பட முடியும். நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் அரசு கவிழ்ந்து அதற்கு அடுத்து ஆட்சியமைக்க விரும்பும் கட்சி 14 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியாத நிலை இருந்தாலோ அல்லது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவையை கலைக்க ஆதரவு தெரிவித்தால் மட்டுமே முன்கூட்டியே தேர்தல் நடத்த முடியும்.

மக்களவைக்கு நிலையான கால வரம்பை நிர்ணயிப்பதுடன் நிலையான தேர்தல் தேதிகளையும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் தேதியையும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறையில் உள்ளதை போல் இங்கும் நிர்ணயிக்கப்பட வேண்டும். தேர்தல்களுக்கு தயாராக கட்சிகளுக்கு போதுமான கால அவகாசம் இதன் மூலம் கிடைக்கும்.

இதனால் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் தன் இஷ்டப்படி அறிவிக்க முடியாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதை தவிர்க்க முடியும். மக்களவையின் கால வரம்புடன் சட்டமன்றங்களை ஒருங்கிணைக்க வேண்டிய பிரச்சினை இதன் பிறகும் தொடரும். அவற்றின் கால வரம்பை கூட்டவோ, குறைக்கவோ, விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்”

ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த தி.மு.க. நாடாளுமன்ற குழுவிற்கு பின்வரும் ஆலோசனைகளை அளித்தது:-

“மக்களவை, மாநிலங்களவை அல்லது சட்டமன்ற இடைதேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர் அவையின் இறுதி காலம் வரையில் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று அரசியலமைப்பு சட்டம் தெளிவுபடுத்துகிறது. மக்களவை அல்லது சட்டமன்றங்கள் இடையே கலைந்தால் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் அரசு மீதியுள்ள கால வரம்பில் மட்டும் ஆட்சியில் இருக்காமல் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் தொடர உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இது மாற்றப்பட வேண்டும். ஐந்து வருட கால வரம்பு முடிவதற்குள் கலையும் அவைகளின் விளைவாக நடத்தப்படும் தேர்தல்களில் வெல்லும் கட்சி மீதம் உள்ள கால வரம்புக்குள் மட்டும் ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியப்படும்”

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இத்திட்டத்தை நிராகரித்து விட்டதாக நாடாளுமன்ற குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. அரசியலமைப்பு சட்டம், மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஐந்து வருட கால வரம்பு அளித்திருந்தாலும் அவை இடையே கலைக்கப்பட முடியும். அவற்றின் கால வரம்பு தேசிய அளவில் அவசரநிலை நெருக்கடி உருவானால் மட்டுமே நீட்டிக்கப்பட முடியும்.

தேர்தல்களை தள்ளிப்போடுவது ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்கிறது திரிணாமுல் கட்சி. ஆனால் பஞ்சாயத்துகளுக்கும், நகராட்சி மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு அக்கட்சி ஆதரவு அளித்துள்ளது.

Next Story