‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்


‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ நாட்டின் எந்த மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்
x
தினத்தந்தி 6 July 2019 7:45 AM GMT (Updated: 6 July 2019 7:45 AM GMT)

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும்.

தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த திட்டத்தில், ரேஷன் பொருட்களை இருவேறு இடங்களில், பகுதியாக பெற முடியும்.

மிகவும் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல் படுத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 2.0. ஆட்சியின் முதல் 100 நாள் திட்டத்தின் ஒரு அங்கமாக இதை செயல்படுத்த இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ், 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல், இந்தியாவிற்குள் புலம் பெயரும் ஏழைத் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். ஆதார் எண்களுடன் இணைக்கப்படும் ரேஷன் அட்டைகள் மூலம், தம் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து, வேலை செய்யும் தொழிலாளர்கள், மலிவு விலையில் அரிசி, கோதுமை மற்றும் இதர பண்டங்களை இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும்.

இடம் பெயரும் தொழிலாளர்கள், தங்களின் ஆதார் அட்டையை காட்டி, இந்தியாவில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் உணவு தானியங்களை வாங்க முடியும். தங்களின் ரேஷன் கார்டுக்கு உரிய ரேஷன் கடையில் இருந்து பண்டங்களை வாங்க, ஆதார் அட்டை தேவையில்லை. ரேஷன் கார்டு மட்டுமே போதுமானது.

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறைகளுக்கான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 29-ந் தேதி வெளியிட்டார். “ரேஷன் கார்டுகளை, ஆதார் எண்களுடன் இணைக்கும் பணிகளும், உணவு தானியங்கள் வினியோகத்தை முற்றிலும் ‘விற்பனை முனைய’ (பி.ஓ.எஸ்.) கருவிகள் மூலம் நடத்த தேவையான பணிகளும் கடைசி கட்டத்தில் உள்ளன” என்றார்.

திட்டத்திற்கு எதிர்ப்பு

வேலை தேடி தமிழகத்திற்கு பெரும் எண்ணிக்கையில் வரும் வடமாநில தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்ற தவறான கருத்து, தமிழக மக்களிடம் அரசியல் ரீதியாக பரவியுள்ளது. “தமிழர்கள் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வது குறைவு. இது வெளி மாநிலத்தவர்களுக்கு மட்டும் பலன் அளிக்கும் திட்டம்” என்று மந்தவெளிப்பாக்கத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

தமிழகத்தின் பிரதான உணவு தானியமான அரிசி இங்கு அனைத்து பிரிவினருக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதர மாநிலங்களில் இது கிலோவிற்கு ரூ.1 முதல் ரூ.3 வரையிலான விலைக்கு விற்கப்படுகிறது.



ஒரே ரேஷன் கார்டு திட்டம் எழுப்பும் கேள்விகள்

இடம் பெயர்பவர்களுக்கு, மத்திய அரசின் மானிய விலையில் மட்டுமே பண்டங்கள் கிடைக்கும் என்று உணவு அமைச்சகத்தை சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி தெளிவுபடுத்தினார். ஒரு கிலோ அரிசி ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் விற்கப்படுகிறது. இலவசமாக உணவு தானியங்களை வழங்கும் மாநிலத்திற்கு இடம் பெயரும் பயனாளிகளுக்கு, அந்த மாநில அரசு அளிக்கும் மானியம் கிடைக்காது.

ரேஷன் கார்டில், பயனாளியின் பெயர் மற்றும் சொந்த மாநிலத்தில், சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடை பற்றிய விவரங்கள் இருக்கும். ஆனால் இந்த கார்டை, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அந்த தொழிலாளியால் பயன்படுத்த முடியும்.

இடம் பெயரும் தொழிலாளர்கள் எடை மிகுந்த கருவிகளை பயன் படுத்தி, மிக கடுமையான உடல் உழைப்பை கோரும் பணிகளில் ஈடுபடுவதால், அவர்களின் கைவிரல் ரேகைகள் அழிந்து விடுகிறது. இதனால் ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பரிசீலனை செய்யும் பையோ மெட்ரிக் கருவிகளை பயன்படுத்துவதில் தோல்வி அடைகின்றனர். தேர்தல்களில் வாக்களிக்க தேவையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை, ரேஷன் அட்டையுடன் சேர்த்து காட்டி, ரேஷன் பொருட்களை, நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பெற முடியும். ரேஷன் பொருட்களில், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்குரிய பங்கை, அவரின் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடையில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கார்டில் குறிப்பிட்டபடி அவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படும்.

ரேஷன் கடைகளில் ஏற்படும் பிரச்சினைகள், தவறுகள் பற்றிய புகார்களை தொலைபேசி மூலம் அளிக்க, தேசிய அளவில் ஒரு உதவி எண், ஜூலை 1, 2019 முதல் செயல்படும்.

ரேஷன் கார்டை பற்றிய தகவல்கள் இன்று மாநில அளவிலான சர்வர்களில் சேமிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய, இவை ஒரு தேசிய அளவிலான சர்வருக்கு மாற்றப்பட வேண்டும். ஆகஸ்டு 15, 2019 முதல் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களிடையே இந்த தகவல் பரிமாற்ற திட்டம் செயல்பட இருக்கிறது. குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களிடையே இது செயல்பட இருக்கிறது.



தமிழகத்தில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் அளிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் அனைத்து பயனாளிகளும் இலவச அரசி மற்றும் மலிவு விலையில் இதர பண்டங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற முடியும்.

ஆனால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013, குடும்பங்களை வருமானத்தின் அடிப்படையில் வகைபடுத்தி, அதற்கேற்ப அரிசி மற்றும் கோதுமை விலையை நிர்ணயிக்கிறது.

2016 நவம்பர் 1-ந் தேதி முதல், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுவரை அளிக்கப்பட்ட சலுகைகள் எதுவும் மாறப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்தியது.

அந்த ஆணையில், அரிசிக்கான 20 கிலோ உச்சவரம்பு நீக்கபட்டது. உதாரணமாக, 3 பெரியவர்கள், 2 குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 25 கிலோ அரிசி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உச்ச வரம்பு எதுவும் இல்லாமல் அளிக்கப்படுகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி ஒதுக்குகிறது.

இது அனைவருக்கும் அளிக்க போதுமானதாக இல்லை. அதனால், தமிழக அரசு பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச் சந்தையில் கொள் முதல் செய்கிறது.

தவறுகளை களைய நடவடிக்கை

பொது வினியோக அமைப்பில் தற்போது நிலவும் ஊழல்களை களைய உரிய நடவடிக்கைகளை, இந்த புதிய கொள்கையின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் அட்டை முறை தற்போது இங்கு செயல்படுகிறது. இதன் மூலம் ரேஷன் கடையில் பொருட்களை, பி.ஓ.எஸ். கருவிகள் மூலம் வாங்க முடிகிறது. ஒவ்வொரு விற்பனையும் இதில் பதிவாகிறது.

விற்பனை முடிந்த பின், உடனடியாக அதை பற்றிய விவரங்கள் பயனாளியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. பிறகு அந்த தகவல்கள் மாநில அளவிலான தரவு தளத்தில் சேமிக்கப் படுகிறது.

“சில சமயங்களில், எங்களுக்கு உரிய அரிசி முழுமையான அளவில் கிடைப்பதில்லை. எங்கள் குடும்பத்திற்கு மாதம் 20 கிலோ அரிசி அளிக்கப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் 10 கிலோ தான் கிடைக்கிறது. போதுமான இருப்பு இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்” என்கிறார் ஒரு பயனாளி.

“நான் மாதம் 5 கிலோ மட்டும் தான் பெறுகிறேன்” என்கிறார் மற்றொருவர். “அரிசியின் தரம் மோசமாக உள்ளது. நான் அதை சில விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறேன். அன்றாட பயன்பாட்டுக்கு, தரமான அரிசியை சந்தையில் இருந்து வாங்குகிறேன்” என்கிறார் வேறொருவர். பாமாயில், சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை தரம் வாய்ந்ததாக உள்ளதாக ‘தினத்தந்தி’க்கு பேட்டி கொடுத்த பெரும்பாலான பயனாளிகள் கூறுகின்றனர்.

சில குறிப்பிட்ட பண்டங்களை வாங்க விரும்பாத பயனாளிகள், தங்களுக்கு அவை தேவையில்லை என்று அறிவிப்பதில்லை.

இதனால் மீதமாகும் பண்டங்களை ஊழல்வாதிகள், கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர்.

விழிப்புணர்வு

முன்னுரிமை குடும்ப அட்டை (அ.அ.யோ) வைத்திருப்பவர்களில் பலரும், தங்களுக்கு உரிய அளவை பற்றி அறியாமையில் உள்ளனர் என்று ஒரு ரேஷன் கடை ஊழியர் கூறுகிறார். “உச்சவரம்பு நீக்கப் பட்டுவிட்டது என்பதை அறிவேன். ஆனால் பலருக்கும் இது தெரியவில்லை என்பதால் அவர்கள் கேட்பதில்லை. எனவே நான் பழைய ஒதுக்கீட்டை தொடர்கிறேன்” என்று சிந்தாதிரிப்பேட்டை ரேஷன் கடையின் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

அரசு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் உப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவை இருப்பு வைக்கப்படுகிறது என்று ஒரு ரேஷன் கடையில் வாடிக்கையாளர் கூறுகிறார். வாடிக்கையாளர்கள் இவற்றையும் வாங்குகின்றனர். ஆனால் சில இடங்களில் இவற்றைபற்றி அறியாதவர்கள், வெளியே வாங்குகின்றனர் என்கிறார்.

தங்களுக்கு உரிய முழு ஒதுக்கீட்டையும் கோராதவர்களுக்கு, 15 கிலோ அரிசியும், 5 கிலோ கோதுமையை மட்டும் வினியோகிப்பதாக அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையின் ஊழியர் கூறினார்.

தற்போது, ஆந்திர பிரதேசம், குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில், ரேஷன் கடைகளில் தானியங்கள் வினியோகத்தில், பி.ஓ.எஸ். கருவிகள், 100 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.

இங்கு உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. பொது வினியோகத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தின் மூலம், பயனாளிகள் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் தானியங்களை பெற முடியும்.

டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற பெரும் நகரங்கள் மற்றும் மராட்டியத்தில் இதர நகரங்களில் உள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருட்களை இரண்டு மாதத்திற்குள் அளிக்க, சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சருடனான கேள்வி பதில் நிகழ்வின் போது, இதுவரை 89 சதவீத பயனாளிகளுக்கு, ஆதார் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 77 சதவீத ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 22 மாநிலங்களில் பி.ஓ.எஸ். கருவிகள் 100 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது என்பதால் இதை செயல்படுத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள 85 சதவீத பயனாளிகளின் ரேஷன் கார்டுகள், ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.



Next Story