தங்கம் விலை உயர்வு: ரிசர்வ் வங்கியின் பங்கு


தங்கம் விலை உயர்வு: ரிசர்வ் வங்கியின் பங்கு
x
தினத்தந்தி 8 July 2019 4:41 AM GMT (Updated: 8 July 2019 4:41 AM GMT)

ரிசர்வ் வங்கி இந்தியாவின் மத்திய வங்கி ஆகும். அதன் முக்கிய பணிகளில் ஒன்று புதிதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு வினியோகம் செய்வதும் புழக்கத்தில் உள்ள உபயோகப்படுத்த முடியாத பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் வரவழைத்து அவைகளை இயந்திரங்கள் மூலம் அழிப்பது ஆகும்.

ரிசர்வ் வங்கி நேரடியாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ புழக்கத்தில் விடும் பணத்துக்கு ஈடாக பல வகையான அசையும் சொத்துகளை தன்னிடம் இருப்பாக வைத்துள்ளது. இந்த இருப்பில், தங்கம், வெளிநாட்டு முதலீடுகள், மத்திய அரசின் முதலீட்டு பத்திரங்கள் மற்றும் ரூபாய் நாணயங்கள் உள்ளன.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 28.6.2019 உடன் முடிவடைந்த வாரத்திற்கான புள்ளி விவரங்கள் அறிக்கையின் படி, நம் நாட்டில் உள்ள மொத்த பணப்புழக்கம் ரூ.21,79,984 கோடிகள் ஆகும். இதற்கு ஈடான மேற்குறிப்பிட்டுள்ள அசையும் சொத்துகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பாக உள்ளது. இதில் தங்கமும் அடங்கும்.

இங்கு நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. பொதுவாக நம் நாட்டில் மக்கள் ஆபரணமாகவோ அல்லது நாணயமாகவோ தங்கம் வாங்குகிறார்கள். சிலர் தங்கத்தை சேமிப்பாக வைத்துள்ளார்கள். ஆனால் ரிசர்வ் வங்கி ஏன் தங்கத்தை வாங்குகிறது? அவ்வாறு வாங்கும் தங்கத்தை என்ன செய்கிறது? மார்க்கெட்டில் தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. அப்படி என்றால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்க இருப்பை பாதிக்காதா? இதற்கான விடையை அறிய நாம் சிறிது பின்னோக்கி சென்று உலகளவில் மத்திய வங்கிகளிடையே நடைபெற்ற பண பரிவர்த்தனைகளைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

முன்பு பல வருடங்களாக கோல்டு ஸ்டாண்டர்ட் என்ற முறை பல நாடுகளில் நிலவியது. அதன்படி காகித நோட்டுகளை யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தங்கமாக மாற்றிக்கொள்ளலாம். இரு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களுக்கு தங்கமே விலையாக பரிமாறிக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக மத்திய வங்கிகள் தங்கத்தை இருப்பாக வைத்திருந்தன. காலப்போக்கில் இந்த முறையில் பல சிக்கல்கள் உருவானதால், 1930-களில் பல நாடுகள் கோல்டு ஸ்டாண்டர்ட் என்ற முறையை கைவிட்டன. அமெரிக்க அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிவித்தது. உலக நாடுகள் தங்களிடம் உள்ள தங்கத்தை 1 அவுன்ஸ் தங்கம் அமெரிக்கா டாலர் 35 என்ற விகிதத்தில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. (ஒரு அவுன்ஸ் என்பது 28.35 கிராம் ஆகும்). இந்த திட்டத்தையும் 1971-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் நிறுத்திக்கொண்டது. 1971-க்கு பின்னர் உலகநாடுகள் அந்தந்த நாட்டுக்கு ஏற்றவாறு காகித கரன்சிகள் அச்சடிப்பு, அதற்கு ஈடாக தங்கம் மற்றும் அசையும் சொத்துகளின் இருப்பு, அமெரிக்க டாலராக மாற்றுவதற்கான விகிதம் இவைகளை நிர்ணயித்தன.

கோல்டு ஸ்டாண்டர்ட் நடைமுறையில் இருந்தபோது, மற்ற மத்திய வங்கிகளை போல ரிசர்வ் வங்கியிலும் தங்கம் இருப்பாக மாறியது. உலக சந்தையில் எந்த நேரத்திலும் தங்கத்தை அமெரிக்க டாலராகவோ மற்ற கரன்சிகளாகவோ மாற்றிக்கொள்ளலாம். எனவே, தங்க இருப்பு என்பது அன்னிய செலாவணிக்கு ஈடானது. நாம் 1991-92-ம் ஆண்டு ஏற்பட்ட அன்னிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் இருப்பிலிருந்த 65 டன் தங்கத்தை இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கியிடம் கொடுத்து அதற்கு ஈடாக அன்னிய செலாவணி கடன் பெற்றோம். எனவே தங்கம் இருப்பு என்பது வருங்கால வைப்பு நிதி போன்றது.

2018 மற்றும் 2019 வருடங்களிலிருந்து உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி தங்கள் இருப்பில் சேர்த்து வருகின்றன. ரிசர்வ் வங்கியும் தனது இருப்பை உயர்த்த தங்கம் வாங்கியது. உலக கோல்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி ஜூன் 2019 மாத முடிவில் ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு 612.6 டன்கள் ஆகும். இது நமது அன்னிய செலாவணி இருப்பில் 6.1 சதவீதம் ஆகும். உலகிலேயே, அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி 8133 டன்கள் தங்கம் இருப்பை வைத்துள்ள முதல் வரிசையில் உள்ள நாடு ஆகும். இது, அதன் அன்னிய செலாவணி இருப்பில் 75 சதவீதம் ஆகும்.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கம் அன்னிய செலாவணியாக மாற்றத்தக்க இருப்பாகவே உள்ளது. இதை வேறு எதற்கும் உபயோகப்படுத்துவது இல்லை. வளர்ந்த நாடுகளில் தங்கம் வாங்க, விற்க சந்தை போன்ற அமைப்பு உள்ளது. அதில் தங்கத்தை நாள் கணக்கில் விற்று வாங்கி அதன் மூலம் வட்டி வருமானம் பெறலாம். ஆனால் அது போன்ற ஒரு சந்தை அமைப்பு இங்கு இல்லை. இங்கு தங்கம் பெரும்பாலும் நகை கடைகளில் ஆபரணமாக வாங்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட சில நிறுவனங்களும் தங்க நாணயங்கள்/பிஸ்கட்டுகள் (24 காரட்) விற்கின்றன. இதை தவிர தங்க வியாபாரம் செய்ய அமைப்பு இல்லை.

உலகிலேயே இந்தியா தங்கம் இறக்குமதி செய்வதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியாவில் ஆபரணங்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. பங்கு சந்தையில் லாபம் குறைந்துள்ளதால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அமெரிக்கா டாலர் மதிப்பில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாலும், இந்தியாவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் தங்கத்தில் விலை உயர காரணம் என்று சொல்லப்படுகிறது. தங்கம் வாங்குவதில் உலக மத்திய வங்கிகளின் பங்கு அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. 

- எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி.

Next Story