நீர்நிலைகளும், ஆக்கிரமிப்புகளும் ...!


நீர்நிலைகளும், ஆக்கிரமிப்புகளும் ...!
x
தினத்தந்தி 8 July 2019 10:23 AM GMT (Updated: 8 July 2019 10:26 AM GMT)

நீர் மனித வாழ்வின் ஆதாரமானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் பூலோக உயிர்கள் அனைத்திற்கும் அதுவே ஆதாரமானது. ஆனால், அத்தகைய நீர் இன்று பல விதங்களில் முக்கியமாக மனிதனின் பேராசைக்காக விரயமாக்கப்படுகிறது. இன்னொரு புறம் நீராதாரங்கள் அழிக்கப்படுகின்றன.

காடுகளை அழித்தல், அளவுக்கு அதிகமாக விவசாய நிலங்களை நீர்பிடிப்பு பகுதிகளில் விரிவுபடுத்தல், நிலத்திற்கும், நீர் அளவுக்கும் ஒவ்வாத நீர்த்தேவை மிகுந்த பயிர்களை பயிர் இடுதல் என பல முறைகளில் நீராதாரங்கள் அழிக்கப்படுகின்றன. காலை பல் துலக்கி இரவு உறங்கும் வரை பல வழிகளில் வீட்டிலேயும், அலுவலகங்களிலேயும், மற்ற பிற இடங்களிலும் நீர் விரயமாகிறது. நீருக்கும், அதன் உபயோகத்திற்கும் சரியான மதிப்பீடு இல்லாததால் அதன் விலை நமக்கு தெரியவில்லை.

நீர் என்பது இயற்கையின் வரப்பிரசாதம்.பூமியானது நான்கில் மூன்று பகுதி நீரால் சூழப்பட்டிருந்தபோதும் உலகின் தற்போதைய முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது ‘பூமி வெப்பமாதல்’ ஆகும். மனிதன் இன்று பயன்படுத்தும் நீரின் அளவு 2 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள நீர் மனிதன் பயன்படுத்த முடியாத கழிவு மற்றும் கடல் நீரே. இதனை முன்னரே உணர்ந்த பண்டைத் தமிழன் நீர் மேலாண்மையில் பல்வேறு தொழில்நுட்பத் திறன்களையும், வழிமுறைகளையும் கையாண்டு வேளாண்மை, குடிநீர், இல்லப் பயன்பாடு என பல்வேறு பயன்பாட்டிற்காக நீரைச் சேமிக்கும் வகையில் பல்வேறு நீர் நிலைகளை ஏற்படுத்தினான். பண்டைத் தமிழர் நீர் நிலைகள், நீர் மேலாண்மை தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப கலைச்சொற்களாக பயன்படுத்தியுள்ள திறத்தையும் அறியமுடிகிறது.

நீரின் இன்றியமையாமையை உணர்ந்து பண்டைத் தமிழர் ஊர்தோறும் கோவில்கள் என்பது போல ஊர்தோறும் இயற்கை சூழலுக்கு ஏற்ப ஏரி, குளம், குட்டை என்று நீர் நிலைகளை உருவாக்கினார்கள். நாட்டில் நீர் நிலைகள் பெருக வேண்டும் என்ற நோக்கில், நீர் நிலையை உருவாக்கினால் புகழும், பெருமையும், புண்ணியமும் கிடைக்கும் என்றும் புலவர்கள் மக்களுக்கு அறிவுரையாகவும் சொல்லிவைத்தார்கள். அதனால் மழைநீர் கீழே விழுந்து ஆற்றில் சேர்ந்து கடலில் கலக்கும் முன் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளை நிறைத்துச் சென்றன. பண்டைத் தமிழர்கள் 40-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் தொடர்பான கலைச்சொற்களை கையாண்டுள்ளனர் என்ற செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது. இன்று நீர்நிலைகளைக் குறிக்கும் பொதுவான சொல்லாக நீர்த்தேக்கம் என்ற சொல்லாட்சியே பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

பண்டைத் தமிழர்கள் நீர்நிலைகள் குறித்து பல்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளமையை சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. அவையாவன: அகழி, அருவி, ஆழ்கிணறு, ஆறு, இலஞ்சி, ஊறுணி, ஊற்று, ஏரி, கட்டுக்கிணறு, கடல், கம்வாய், கலிங்கு, கயம், கால்வாய், குட்டம், குட்டை, குமிழி, குமிழி ஊற்று, குளம், கேணி, சிறை, சுனை, சேங்கை, தடம், தாங்கல், திருக்குளம், தொடுகிணறு, நீராழி, பிள்ளைக்கிணறு, பொங்கு, பொய்கை, மடு, மடை, மதகு, மறுகால், வலயம், வாய்க்கால் என்பனவாகும்.

நீர் நிலைகளில் ஆண்டு முழுவதும் நீர்வளம் நிறைந்து இருந்ததால் நிலத்தடி நீர் பெருகுவதற்கும் பெருவாய்ப்பாக இருந்தது “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயர்வான்” என்ற முதுமொழி வேளாண்மைக்கும், நீர் வளத்திற்கும் அரசன் முதன்மை கொடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அம்மொழியின் உயிர்ப்பொருளாகும். அறிவியல் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிறகு நீர் எவ்வளவு உயர்ந்தாலும், பாய்ச்சினாலும், நெல் விளைச்சல் உயராது என்ற உண்மையை உணரமுடிகிறது. சீரிய நெல் விளைச்சலுக்கு வயலில் 5 செ.மீ. அளவுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது என்ற உண்மையை உழவர் பெருமக்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டை விட மூன்றில் ஒரு பங்கு மழை மட்டுமே பெய்யும் இஸ்ரேல் நாட்டில் சொட்டு நீர், தெளிநீர் பாசனங்கள் மூலம் மிகச் சிறப்பாக வேளாண்மை செய்து நல்ல வருவாய் ஈட்டுகின்றனர். நீரின் தேவை குறைந்த மலர்ப்பயிர்கள், பழ மரங்கள், நெல் தவிர பிற தானியப் பயிர்களை பயிர் செய்கிறார்கள். இத்தகைய முறைகளில் உழவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் நல்ல பலன் விழையும். அதேபோல் நகரத்தில் செலவாகும் நீரைப் பற்றிய சிந்தனையும் நமக்கு தேவை. நாள் ஒன்றுக்கு ஒரு மனிதனுக்கு குறைந்த அளவு 107 லிட்டர் தண்ணீர் வேண்டுமென்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள தரவிதிகளின்படி தனி ஒரு நபருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்ணீர் அளவு 135 லிட்டர்களாகும்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் ஏரி, குளம், குட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன. பல நீர் நிலைகள் தூர்ந்து போய்விட்டன. பல தூர்க்கப்பட்டுவிட்டன. பல பெரிய ஏரிகள் தனியார் ஆக்கிரமிப்பினால் சிறிய ஏரிகளாகி விட்டன. நீர் தேங்குவதற்கு வசதியே இல்லாமல் போய்விட்டது. நகரத்தை ஒட்டிய ஏரி, குளங்களெல்லாம் தூர்க்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன. அதனால் மழை பெய்தால் தரையில் ஓடி பள்ளத்தில் தேங்கி வீணாகிறதே ஒழிய, நிலத்தடி நீர் பெருகுவதற்கு ஏற்ப ஏரி குளங்களில் நீர் தேங்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தின் தலைநகரமே நீரில் தத்தளித்ததை யாரும் மறக்க முடியாது. இது போன்ற நிலை மீண்டும் வராமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.

இன்றைய நிலையில் மழைப்பொழிவின் அளவை எடுத்துக்கொண்டாலும் உலக சராசரி மழைப்பொழிவை விட இந்திய நாட்டின் மழைப்பொழிவு கூடுதலாகவே இருக்கிறது. உலக மழைப்பொழிவு சராசரி 990 மில்லி மீட்டராகவும், தமிழ்நாட்டின் சராசரி 942 மி.மீ அளவும் உள்ளது. இந்த அடிப்படையில் இன்று மழை நீரைக் கொஞ்சமும் வீணாக்காமல் ஊர்தோறும் ஆங்காங்கே நிறைத்து வைத்துக்கொள்ளப் பழைய நீர் நிலைகளைப் புதுப்பித்தலும், தேவைக்கு ஏற்ப புதிய நீர்நிலைகளை உருவாக்குதலும் முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டிய இன்றியமையாத கடமையாகும்.

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு ஏரி, குளங்கள் பாதுகாப்பு சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அடுத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை முழு வீச்சில் அகற்றினர். ஆனால், சிலர் நீதிமன்றத்துக்கு சென்றதால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் 21 நாட்கள் அவகாசம் அளித்து, அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டணை அல்லது இரண்டையும் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர பொதுப்பணித்துறை முடிவு செய்தது. ஆனால் இந்த சட்டம் இன்றுவரையில் கடைப்பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்காக, ஏற்கனவே உள்ள தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். ஏரி, குளங்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளதன் மூலம், ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். நீர் நிலை ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றுவதற்கு புதிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது அவசியமான ஒன்றாகும்.

- முனைவர் சி.சிதம்பரம்,  உதவி பேராசிரியர், தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்.

Next Story