இன்று ஒரு தகவல் : ஆன்லைன் தங்க வர்த்தகம்


இன்று ஒரு தகவல் : ஆன்லைன் தங்க வர்த்தகம்
x
தினத்தந்தி 9 July 2019 6:53 AM GMT (Updated: 9 July 2019 6:53 AM GMT)

தங்கத்தை ஆபரணமாக வாங்கி, விற்பதன் மூலம் ஏற்படும் செய்கூலி, சேதார இழப்புகளை கணக்கிட்டால் ஆபரணமாக தங்கம் வாங்குவது சரிப்பட்டு வராது என்று சிலர் நினைக்கின்றனர்.

அவர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய ஈ.டி.எப். எனப்படும் எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்கள் பக்கம் போகின்றனர். வேறு சிலர், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

வேறு எந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்தாலும் முழுத் தொகையையும் செலுத்தியே அதற்கான தங்கத்தை வாங்க முடியும். ஆனால் ஊக வணிகத்தில் 100 கிராம் தங்கம் வாங்க விரும்பினால் அன்றைய விலையில் சுமார் 5 முதல் 7 சதவீதம் மட்டும் கட்டினால் போதும்.

உதாரணமாக, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் தற்போதைய விலை ரூ.2,700 என்று வைத்துக்கொள்வோம். அப்போது 100 கிராம் தங்கம் வாங்க 2,70,000 ரூபாய் வேண்டும். ஆனால் ஆன்லைன் பொருள் சந்தையில் அதிகபட்சமாக வெறும் 18,900 ரூபாய் மட்டும் மார்ஜின் தொகையாக செலுத்தினால் போதும். 100 கிராம் தங்கம் உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். வாங்கிய பின்னர் ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் விலை ஏறினால் உங்களுக்கு 5,000 ரூபாய் லாபம். தரகுக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற செலவுகளுக்கு 300 ரூபாய் போக, 4,700 ரூபாய் லாபம். வாங்கிய அன்றே விலை ஏறினாலும் விற்றுவிட்டு வெளியே வரலாம். ஆக 18,900 ரூபாய் முதலீட்டில் 4,700 ரூபாய் லாபம்.

இவ்வளவு சுலபமாக பணம் சம்பாதிக்க வழியா? என்று வியக்க வேண்டாம். இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது ஊக வணிகம். ரூ. 18,900 மார்ஜின் பணத்தை செலுத்தி காலையில் 100 கிராம் தங்கம் ஊக வணிகத்தில் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். மாலையில் ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் குறைந்தால், ரூ.5,000 நஷ்டம்.

தங்கம்தான் அடிக்கடி விலை ஏறிக்கொண்டே இருக்கிறதே, அதனால் வாங்கிப் போடலாம், இறங்கினால் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக ரிஸ்க் எடுக்க நினைத்தால், மார்ஜின் தொகையுடன் விலை குறைந்தால் ஏற்படும். இழப்புக்கு ஈட்டுத் தொகையாக கொஞ்சம் பணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். 100 கிராம் தங்கம் வாங்க ரூ.30 ஆயிரம் உங்கள் கையில் இருந்தால், இன்று விலை குறைந்தாலும் நாளை விலையேறும் போது விற்று நஷ்டத்தை தவிர்ப்பதுடன், லாபத்துடன் வெளியே வரலாம்.

Next Story