சர்ச்சையை கிளப்பும் ஹைட்ரோ கார்பன் வளர்ச்சிக்கான திட்டமா? நிலநடுக்கம் ஏற்படும், நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் வாய்ப்புள்ளதால் எதிர்ப்பு


சர்ச்சையை கிளப்பும்  ஹைட்ரோ  கார்பன் வளர்ச்சிக்கான திட்டமா? நிலநடுக்கம் ஏற்படும், நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் வாய்ப்புள்ளதால் எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 July 2019 5:22 AM GMT (Updated: 10 July 2019 5:22 AM GMT)

கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்து வரும் வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கவலைகளுக்கு மத்தியில், புதிய ஹைட்ரோ கார்பன் வயல்களை கண்டறிய மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது.

குற்றச்சாட்டுகள், எதிர்வினைகளுக்கு இடையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் பற்றிய சர்ச்சைகள் ஓயாமல் தொடர்கிறது. புதிய அறிவிப்புகள் வெளியாகும் போதெல்லாம், சர்ச்சைகள் வெடிக்கிறது. 

தமிழகத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு உரிமங்களை வழங்கியபோதிலும், அதற்கான அனுமதி வழங்கப்படாது என தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையில் கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் துறை பற்றி விரிவாக பார்க்கும் போது, இதன் சாதக, பாதக அம்சங்கள் தெளிவாகும்.

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?

ஹைட்ரோ கார்பன் என்பவை பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்கள் ஆகும். அவை கிடைக்கும் பகுதிகள் மற்றும் எடுக்கப்படும் முறைகளின் அடிப்படையில், அவை மரபானவை மற்றும் மரபு சாராதவை என்று இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. 

பூமியில் தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் வாயுக்கள், மரபானவை என்ற பிரிவில் வருகின்றன. பூமியின் அடிஆழத்தில் உள்ள நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் வாயு, வாயு ஹைட்ரேட்ஸ் ஆகியவற்றை எடுக்க வழக்கத்துக்கு மாறான முறைகள் தேவைப்படும் என்பதால், அவை மரபு சாராதவை என்று அழைக்கப்படுகின்றன. 

இத்துறை மீது கவனம் குவிப்பதற்கு காரணம்:

ஆய்வுகள் மற்றும் வெளிக்கொணரப்படுதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும், புதிய வயல்கள் கண்டறியப்பட்டு, உள்நாடு உற்பத்தியை ஊக்குவிக்கவும், 1993–ல் ஹைட்ரோ கார்பனுக்கான இயக்குனரகம் (டி.ஜி.ஹெச்) உருவாக்கப்பட்டது. 

ஹைட்ரோ கார்பன் துறையை மேம்படுத்துவதன் மூலம் 2022–க்குள் இறக்குமதிகளை 10 சதவீதத்துக்கு குறைக்க முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. 

2018–19–ம் ஆண்டிற்கான மொத்த கொள்முதலில், 83.7 சதவீதம் (22.66 கோடி டன்கள்) இறக்குமதி மூலம் நிறைவு செய்யப்பட்டது என்று பெட்ரோலிய அமைச்சரகத்தின், பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வுகளுக்கான மையம் (பி.பி.எ.சி) கூறுகிறது. 

எண்ணெய் மற்றும் வாயு தேவைகளுக்கு இறக்குமதியை நம்பி உள்ள இந்தியா, இறக்குமதியை குறைப்பது கடினம் என்று துறைசார் வல்லுனர்கள் கூறுகின்றனர். இன்றைய தேதியில், சுமார் 5 ஆயிரம் கிணறுகள் இந்தியாவில் இயங்குகின்றன. 

லைசென்ஸ் வழங்கும் கொள்கை:

2014–ல் ஹைட்ரோ கார்பன்களுக்கான ஆய்வுகள் மற்றும் லைசென்ஸ் அளிக்கும் கொள்கையை டி.ஜி.ஹெச். வெளியிட்டது. இதன் கீழ் அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன்களும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன. இன்று, தமிழகத்தில் சுமார் 700 எண்ணெய் கிணறுகள் இயங்குகின்றன. இவை பழைய லைசென்ஸ் முறையில் அனுமதிக்கப்பட்டவை ஆகும். 31 ஒப்பந்த பகுதிகளில், ஆண்டுக்கு 600 டன் எண்ணெய் மற்றும் 30 லட்சம் கன அடி எரிவாயு ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. 

கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்களுக்கான கொள்கையின் அடிப்படையில் டி.ஜி.ஹெச். புதிய லைசென்சுகளை வழங்கியுள்ளது. இந்த சிறிய வயல்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கண்டறிந்தது. ஆனால் அளவில் சிறியதாக இருப்பதாகவும், அதனால், கட்டுப்படியாகாது என்பதாலும் பயன்படுத்தாமல் வைத்திருந்தது. 2016–ல் நடத்தப்பட்ட ஏலத்தின் மூலம் 44 வயல்களில், 31 ஒப்பந்த பகுதிகள் அளிக்கப்பட்டன. 

செயல்முறை:

ஒரு பகுதியை ஏலம் விட அரசு முடிவு செய்த பின், அந்த பகுதியை பற்றிய அனைத்து தகவல்கள் அடங்கிய ஏலத்தொகுப்பை வெளியிடுகிறது. ஏலம் இறுதி செய்யப்பட்ட உடன் கீழ்க்கண்ட முறையில் செயல்படுத்தப்படுகிறது. 

* ஏலத்தில் வென்ற நிறுவனம், சுற்றுச்சூழல் அமைச்சரகத்திடம், குறிப்பு விதிமுறைகளை பெற விண்ணப்பிக்கிறது. 

* சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒன்றை அந்நிறுவனம் உருவாக்குகிறது.

* பெரும்பாலான சமயங்களில், சுற்றுச்சூழல் அமைச்சரகம், ஒரு பொது கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த ஆணையிடுகிறது. இது மாவட்ட கலெக்டரின் முன்னிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உள்ளூர் கிளையினால் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை, எதிர்ப்புகளை பதிவு செய்யலாம். 

* கருத்து கேட்பு கூட்டம் பற்றிய அறிக்கை ஒன்றை மாவட்ட கலெக்டர் சமர்ப்பிப்பார். 

* மத்திய அரசின் அனுமதியை பெற்ற பின், அந்த நிறுவனம், மாநில அரசின் அனுமதி பெற விண்ணப்பிக்கும். 

* பிறகு சம்மந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கிளையில் செயல் அனுமதி கடிதம் பெற விண்ணப்பிக்கும்.

* இவை அனைத்தும் முடிய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும்.

சர்ச்சைகள்: 

காவிரி டெல்டா பகுதியில் இயங்கும் எண்ணெய் கிணறுகளினால் நிலத்தடி நீர், காற்று மற்றும் மண் ஆகியவை கடுமையாக மாசுபடுவதாக பல புகார்கள் இருப்பதால், இந்த திட்டங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. 

(பார்க்கவும்: தமிழகத்தின் நிலை)

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய விவாதங்கள்:

உலகெங்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய சக்தி, காற்றாலை சக்தி ஆகியவற்றுக்கு மாறுவது பற்றி ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்தியாவிலும் இவை பெரிய அளவில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இவை, மரபுசார் முறைகளில் தயாரிக்கப்படுவதை போல் மலிவாகவும், வலுவாகவும் இருப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எண்ணெயை நம்பி உள்ள துறைகளில் ஆகப்பெரியது, போக்குவரத்து துறை தான். இத்துறையில் மாற்று வழிகளை கண்டறிய இந்தியா முயற்சி செய்யும் வரை, மரபுசார் முறைகளை உதாசீனம் செய்ய முடியாது. நுகர்வோர்கள் தம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவும் தேவை உள்ளது. 

டெரி எனப்படும் எரிசக்தி ஆய்வக நிறுவனத்தின், தொழில்துறைக்கான உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் பன்வாரிலால் கூறுகையில், ‘‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அனைத்து இடங்களிலும் வேலை செய்யாது. சில துறைகளில் மட்டுமே பயனளிக்கும். எங்கு சாத்தியமோ, அங்கு நாம் உயர் எரிபொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை பயன்படுத்த முயற்சி செய்கிறோம். ஆனால் மிகப்பெரிய அளவுக்கு எண்ணெயை நம்பி இருப்பதால், ஹைட்ரோ கார்பனை இப்போதைக்கு புறக்கணிக்க முடியாது. 

மின்சார வாகனங்களை தனி நபர்களும், பொது போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். ஆனால் கனரக வாகனங்களில் என்ன செய்வது? விமான எரிபொருட்களுக்கு? இதற்கான பதில் இப்போதைக்கு நம்மிடம் இல்லை’’ என்றார்.

பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் உறுப்பினரான (2007–12) சுதா ராமலிங்கம் கூறுகையில், ‘‘விதிமுறைகளை மீறும் நிறுவனங்களை கண்காணித்து, கட்டுப்படுத்த இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எண்ணெய் கிணறுகளை கைவிட்ட பின்னர், அந்த பகுதியை மீட்டெடுக்க அந்த நிறுவனங்களை நிதி ஒதுக்கீடு செய்ய வைக்க வேண்டும்’’ என்றார்.

சுற்றுசூழலுக்கு ஏற்படும் நாசத்தை பற்றிய அச்சம், தமிழக திட்டங்களை தடுக்கிறது

தமிழக திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அச்சங்கள்

2016–ல் தமிழகத்தில், 2 தொகுதிகள் அளிக்கப்பட்டன. காரைக்காலில் 10.4 சதுர கி.மீ, நெடுவாசலில் 10 சதுர கி.மீ.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.9,300 கோடி நிகர வருமானம் கிடைக்கும் என்று ஹைட்ரோ கார்பன் இயக்குனரகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவு இருக்கும்.

மேலும் இந்த திட்டங்கள் மூலம் 37,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011–ல் மன்னார்குடியில் ஒரு நிலக்கரி படுகை மீத்தேன் தொகுதியை, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கம்பெனிக்கு அளித்ததில் இருந்து பிரச்சினைகள் தொடங்கின என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் சங்கங்கள் இதை கடுமையாக எதிர்த்ததால், 2015–ல் தமிழக அரசு, மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இதை ரத்து செய்தது. எண்னெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் மீதான சந்தேகங்கள் அதன் பிறகு தொடர்ந்து அதிகரித்து வந்தது. நெடுவாசல் திட்டம் அறிவிக்கப்பட்ட உடன் போராட்டம் வெடித்தது. 

போராட்டக்காரர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள்: 

* அதிக அளவு நீரை பயன்படுத்தி வாயு எடுக்கப்படுவதால், இது நிலத்தடி நீரை வெளியேற்றி, பிறகு தரைதள நீர் மாசுபடுவதற்கும் வழிவகை செய்யும். 

* பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்க வழியே இல்லை.

* தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கருதப்படும் இந்த பகுதியின் நில வளத்தை கடுமையாக பாதிக்கும்.

* நிலத்தடி நீர் பெரிய அளவில் உறிஞ்சப்படுவதால், நிலத்தடியில் கடல்நீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது.

* ஹைட்ராலிக் பிராக்கிங் அல்லது பிராக்சரிங் என்ற தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் பயன்படுத்தும் என்ற அச்சம் எதிர்ப்பாளர்களுக்கு உள்ளது. 
(பார்க்கவும்: பிராக்கிங் என்றால் என்ன?)

சூழலியல் பிரச்சினைகள்: 

சூழியலை பாதுகாப்பதில் எண்ணெய் நிறுவனங்களின் கடந்த கால செயல்பாடுகள் மோசமாக இருப்பதே, இதை பற்றிய சந்தேகங்கள் உருவாக காரணம் என்கிறார் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட சூழியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். 

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஹைட்ரோ கார்பன் தொழில்துறை, வெளிப்படை தன்மையற்ற துறையாக உள்ளது. அவர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி வெளிப்படையான அறிவிப்புகள் எதுவும் இருந்ததில்லை. காவிரி டெல்டாவில், 2004–ல் தோண்டப்பட்ட எண்ணெய் கிணறுகளினால் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில், ஹைட்ரோ கார்பன் தடயங்கள் உள்ளன. பல இடங்களில், கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகள் ஒழுங்கான முறையில் மூடப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை’’ என்றார். 

சகட்டுமேனிக்கு தோண்டப்படும் எண்ணெய் கிணறுகள் பற்றி, அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும், அமெரிக்க புவியியல் சேவை நிறுவனமும் கடந்த காலங்களில் கவலை தெரிவித்திருந்தன. 

ஆனால் இவற்றினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் பற்றி விஞ்ஞானப்பூர்வமான மதிப்பீடு செய்வது, இவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.  பன்னாட்டு அறிஞர்கள் உதவியுடன், சுற்றுச்சூழல் தாக்கம் பற்றி விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு முதலீடு செய்ய வேண்டும். எதிர்ப்பாளர்களுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

Next Story