முதுமை ஒரு வரம்...!


முதுமை ஒரு வரம்...!
x
தினத்தந்தி 10 July 2019 6:22 AM GMT (Updated: 10 July 2019 6:22 AM GMT)

இயற்கையின் நியதிகளில் பரிணாம வளர்ச்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனித வாழ்விலும் பிறப்பு, இறப்பு என்பது தொடர் சங்கிலியாய் நிகழும் ஓர் செயல்பாடு. இதில் இளமையும், முதுமையும் கூட நாம் விரும்பியோ, விரும்பாமலோ வந்து போகும்.

இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஓர் வரைமுறை இதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் அல்லது ஏற்றுக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அது இனிமையானதா அல்லது கசப்பானதா என்று அறிய முடியும்.

வாழ்வில் எதையுமே நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அதற்கான சக்தியும், சந்தர்ப்பமும் நமக்கு வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். அது மட்டுமல்ல எல்லாமே கடந்து செல்லும் மேக கூட்டங்கள் தான். அதை நாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதை தான் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில் நம்மிடையே வாழ்பவர்கள் பலர் முதுமையை ஓர் சுமையாய் கருதுபவர்களாகவோ அல்லது சுற்றியிருப்பவர்களால் அப்படி ஒரு கருத்தை திணிக்கப்படுபவர்களாகவோ இருப்பதை காண முடிகிறது. உண்மை அதுவல்ல, முதுமை ஒரு வரம். அது குறிப்பிட்ட சிலரைத் தவிர எல்லோருக்கும் வாய்க்காத அது ஒரு அருள்.

எந்த மனிதனாயினும் இறைவனிடம் கையேந்தும் போது, “எனக்கு நல்ல வாழ்வைத் தந்தருள். நீண்ட ஆயுளை வழங்கியருள்” என்று கேட்காதவர்கள் இருக்க முடியாது. அப்படி வேண்டி பெற்ற அந்த வயோதிகத்தை ஒருவன் கடினம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனை நம் மனம் தான் முடிவு செய்ய வேண்டும். மனதை நாம் எப்படி பக்குவப்படுத்தி வைத்துள்ளோமோ, அந்த பக்குவம் தான் நம் வாழ்வை சரியான திசையில் முன்னெடுத்து செல்லும் உந்து சக்தியாகும். சுற்றிச் சூழ்ந்த உறவுகளின் பங்களிப்பும் அதில் குறிப்பிட்ட சதவீதத்தில் அமையும்.

மனைவியைத் தவிர மற்ற அத்தனை உறவுகளும் நம் வாழ்வின் எல்லைக்கோட்டை தாண்டியே நிற்கும் தன்மை கொண்டதுதான். பெற்ற பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள் கூட எட்ட நின்று பார்க்கும் ஒரு வாழ்வியல் முறையே நம்மை சுற்றி சிலந்தி வலையாய் பின்னியிருப்பது அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படும் உண்மை. இது யதார்த்தம்.

இப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில், வாழ்வின் பெரும் பகுதியை கடந்துவிட்ட வாழ்வியல், இன்னும் ஏன் குடும்பத்தினருக்காகவோ, பிறருக்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அந்த நினைப்பே உங்கள் மகிழ்ச்சியை ஏன், ஆரோக்கியத்தையே சிதைத்து விடும். எந்த ஒரு உயிரினமும் தன் உணவை தானே சுமந்து செல்வதில்லை. எந்த உயிருக்கும் இந்த உலகில் யாரும் யாருக்கும் பொறுப்பாளர்கள் இல்லை. படைத்த இறைவனே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறான். உனக்கு நிர்ணயித்தது போல் உங்கள் பிள்ளைகளுக்கும் நிர்ணயித்ததை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இதில் நீங்கள் அலட்டிக்கொள்வதில் என்ன மாறிவிடப்போகிறது.

வாழ்வில் குறிப்பிட்ட பகுதியை பிறருக்காகவும், பெற்ற பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து விட்டோம். கடமைகளை நிறைவேற்றி அவர்களை கரையேற்றிவிட்டு விட்டோம். இனி நம் வாழ்வு கலங்கரை விளக்கு தான். நாம் காட்டும் திசையில் அவர்கள் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது.

முதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள். சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு ராஜபாட்டையை விரித்து செல்லுங்கள்

முதியவர்கள் மூன்று விஷயங்களை முத்தாய்ப்பாய் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம், மனமகிழ்ச்சி, பொருளாதார பின்புலம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வயதில் ஓடி ஆட முடியாமல் போகலாம். ஆனால் சின்னச் சின்ன எளிமையான உடற்பயிற்சிகள் எதிர்பார்ப்பைவிட அதிக பயன்தரலாம். நடை பயிற்சிகள், மிதிவண்டி ஓட்டுதல், மனைவியுடன் காலார பேசிக்கொண்டே வலம் வருவது நன்மையை பயக்கும். மனம் லேசாகும் அந்த உணர்வே உற்சாகத்தைத் தரும் மன மகிழ்ச்சியின் முக்கிய காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதே எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றங்கள் இல்லை. ஏமாற்றங்கள் இல்லா மனங்களின் வெற்றிடங்களில் மகிழ்ச்சி அழையா விருந்தாளியாய் வந்து குடியேறிவிடும். மகிழ்ச்சியும் கூட உடலில் ஒரு துள்ளுதலை, உணர்ச்சிகளின் உத்வேகத்தைத் தரும். புத்துணர்ச்சி ஏற்படும்போது புது புது துறைகளில் ஆர்வம் மிகுந்து நிற்கும்.

கவிதைகள் எழுதலாம், கதை கட்டுரைகள் வரையலாம், ஓவியங்கள் தீட்டலாம். முதியவர்கள் தங்கள் கடைசி மூச்சு நிற்கும் வரை யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். பொருளாதார பின்புலத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நம்மைச் சார்ந்தவர்களின் சூழ்நிலைகள் மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் வரலாம். அவர்களுக்கு எல்லையை வகுத்து உதவி செய்யலாம். அதற்காக இருப்பதை இழந்து அல்லல் பட வேண்டாம். இப்படி இருந்து பாருங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாய் தெரியமாட்டீர்கள். அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பீர்கள். அவர்களின் அன்பு தாராளமாய் கிடைத்து கொண்டிருக்கும்.

மனைவியை முந்திச் செல்ல பிரார்த்தனை செய்யுங்கள். ஆயிரம் குணாதிசயங்கள் மாறுபட்டிருந்தாலும் அவளின் அன்பை, அரவணைப்பை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அந்த வெற்றிடம் அவளே அவளுக்கே சொந்தம். இருவரும் தனித்தனியாய் பிள்ளைகளோடு வாழ்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். முதுமையில் தான் துணையின் முக்கியத்துவம் உணரப்படும்.

இருப்பவற்றிக்கு கண்மூடுவதற்கு முன்பாகவே கடமையுணர்வோடு கண்ணியமாய் பிரித்துக்கொடுக்க உயில் எழுதுங்கள். இது உலகில் நீங்கள் விட்டுச்செல்லும் சிறந்த நன்மையை மறுவுலகில் கொண்டு வந்து சேர்க்கும்.

முடிந்தது வாழ்வு என்றாலும் வானமே எல்லை என்று சிறகுகளை விரியுங்கள். ஆங்காங்கே சில இறகுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் உயர உயர பறக்க முடியும். இன்பங்கள், துன்பங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் ரசிக்கப் பழகி கொள்ளுங்கள். எதுவுமே உங்கள் மனதை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உலகம் உங்கள் கைவசப்படும்.

- எழுத்தாளர் மு.முகமது யூசுப். உடன்குடி.

Next Story