உள்நாட்டில், ஜூன் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18% சரிவு


உள்நாட்டில், ஜூன் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18% சரிவு
x
தினத்தந்தி 11 July 2019 9:32 AM GMT (Updated: 11 July 2019 9:32 AM GMT)

உள்நாட்டில், ஜூன் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

சியாம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

ஜூன் மாதத்தில் 2,25,732 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,73,748-ஆக இருந்தது. ஆக, விற்பனை 18 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதில் கார்கள் விற்பனை 25 சதவீதம் சரிவடைந்து (1,83,885-ல் இருந்து) 1,39,628-ஆக குறைந்துள்ளது.

வர்த்தக வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் குறைந்து 70,771-ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அது 80,670-ஆக இருந்தது. ஒட்டுமொத்த அளவில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவடைந்து 16,49,477-ஆக குறைந்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 18,67,884-ஆக இருந்தது. இதில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 10 சதவீதம் சரிந்து (11,99,332-ல் இருந்து) 10,84,598-ஆக குறைந்து இருக்கிறது.

ஜூன் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 19,97,952-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 22,79,186-ஆக இருந்தது. ஆக, விற்பனை 12 சதவீதம் குறைந்துள்ளது.

நடப்பு 2019-ஆம் ஆண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18 சதவீதம் குறைந்து 7,12,620-ஆக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது 8,73,490-ஆக இருந்தது. இதே காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 60,85,406-ஆக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 69,42,742-ஆக இருந்தது. ஆக, விற்பனை 12 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பின்னடைவு

கடந்த சில மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை பின்னடைவை சந்தித்து வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டார்சைக்கிள், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். மோட்டார், ராயல் என்பீல்டு ஆகிய 5 நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்கள் பிரிவில் முன்னணியில் உள்ளன.

Next Story