ஜூன் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் ரூ.7,663 கோடி முதலீடு


ஜூன் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் ரூ.7,663 கோடி முதலீடு
x
தினத்தந்தி 11 July 2019 11:49 AM GMT (Updated: 11 July 2019 11:49 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஜூன் மாதத்தில் பரஸ்பர நிதி துறையின் பங்குசார்ந்த திட்டங்களில் நிகர அடிப்படையில் ரூ.7,663 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனப் பங்குகள்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள், நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி துறை நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இந்த துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்குச்சந்தையில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு இறங்குகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் பரஸ்பர நிதித்துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை எட்டும் என மகிந்திரா ஏ.எம்.சி. நிறுவனம் கூறி இருக்கிறது.

கடந்த மே மாதத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.25.43 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாதத்தில் இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.25.81 லட்சம் கோடியாக உள்ளது. ஆக, இத்துறையின் சொத்து மதிப்பு 1.49 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

பரஸ்பர நிதி திட்டங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இத்துறையின் சொத்து மதிப்பில் அவர்களுடைய பங்களிப்பு உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் பங்குசார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு நிகர அடிப்படையில் 42 சதவீதம் அதிகரித்து ரூ.7,663 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய மாதத்தில் (மே) அது ரூ.5,408 கோடியாக இருந்தது.

தேர்ச்சி, அனுபவம்

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என கருதப்படுகிறது.

Next Story