ஐந்தாவது வெளியீடு 18-ந் தேதி ஆரம்பம் : சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். திட்டம் வாயிலாக ரூ.8,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு


ஐந்தாவது வெளியீடு 18-ந் தேதி ஆரம்பம் : சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். திட்டம் வாயிலாக ரூ.8,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 11 July 2019 12:35 PM GMT (Updated: 11 July 2019 12:35 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

பொதுத்துறை ஈ.டி.எப். திட்டத்தின் ஐந்தாவது வெளியீடு 18-ந் தேதி ஆரம்பமாகிறது. இதன் வாயிலாக குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பரஸ்பர நிதி திட்டம்

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் தற்போது இரண்டு வகையான பொதுத்துறை ஈ.டி.எப். திட்டங்களின் யூனிட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். மற்றும் பாரத்-22 ஈ.டி.எப். ஆகிய இந்த திட்டங்களை இரண்டு தனியார் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். என்பது ஒரு பரஸ்பர நிதி திட்டமாகும். இது ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, இந்தியன் ஆயில் உள்ளிட்ட 11 பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய தொகுப்பாக உள்ளது. மறுசீரமைப்புக்கு முன்னால் இதில் 10 நிறுவனங்கள் இருந்தன.

ரிலையன்ஸ் நிப்பான்

சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். திட்டத்தை ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நிர்வகிக்கிறது. இத்திட்டத்தின் முதல் வெளியீடு 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு ரூ.3,000 கோடி திரட்டியது. 2017 ஜனவரியில் இரண்டாவது வெளியீடு நடந்தது. அதன் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.6,000 கோடியாகும். அதே ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது வெளியீட்டில் மத்திய அரசு ரூ.2,500 கோடி திரட்டியது.

நான்காவது வெளியீடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி நிறைவடைந்தது. அதன் வாயிலாக ரூ.8,000 கோடி திரட்ட மத்திய அரசு உத்தேசித்து இருந்தது. எனினும் அதிக விண்ணப்பங்கள் வந்ததால் விசேஷ அனுமதியின் பேரில் ரூ.17,000 கோடி திரட்டப்பட்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். திட்டத்தின் ஐந்தாவது வெளியீட்டை ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மேற்கொள்கிறது. இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் இவ்வெளியீட்டில் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் அதிக விண்ணப்பங்கள் வந்தால், சிறப்பு அனுமதியின் பேரில் திரட்டும் தொகை அதிகரிக்கும்.

நிதிப்பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு கையாளும் முக்கிய வழிமுறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் ஒன்றாக உள்ளது. நடப்பு 2019-ஆம் ஆண்டில் இதுவரை ஈ.டி.எப். திட்டங்கள் மூலம் மத்திய அரசு ரூ.71,000 கோடி திரட்டி இருக்கிறது.

2017-18-ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை இலக்கை மத்திய அரசு ரூ.72,500 கோடியாக முதலில் நிர்ணயித்து இருந்தது. எனினும் அந்த ஆண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் திரட்டப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்த வழிமுறையில் ரூ.85 ஆயிரம் கோடி திரட்டப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதி ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை ரூ.1.05 லட்சம் கோடியாக நிர்ணயித்துள்ளார்.

நிதித்துறை ஈ.டி.எப்.

மத்திய அரசு, பொதுத்துறையைச் சேர்ந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளுடன் நிதித்துறை ஈ.டி.எப். திட்டம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை இலக்கை எட்ட இது உதவும் என மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து நிர்வாகத் துறை நம்புவதாக கூறப்படுகிறது.

மேலும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சி.பி.எஸ்.இ. மற்றும் பாரத் 22 ஈ.டி.எப். ஆகிய பரஸ்பர நிதி திட்டங்களின் முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்வதாகவும், அது பற்றி மேற்கண்ட துறை மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிகிறது.

ஒரு யூனிட் விலை

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது சி.பி.எஸ்.இ. ஈ.டி.எப். யூனிட் ஒன்று ரூ.26.38-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.26.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.26.10-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.26.22-ல் நிலைகொண்டது. இது, கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.61 சதவீத இறக்கமாகும்.

Next Story