சிறப்புக் கட்டுரைகள்

இதயத்தைக் கவரும் இசைக் குடும்பம் + "||" + A heartwarming musical family

இதயத்தைக் கவரும் இசைக் குடும்பம்

இதயத்தைக் கவரும் இசைக் குடும்பம்
“இசைதான் எங்கள் உலகம். எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இசையே ஜீவன். இசையிலே நாங்கள் விழிக்கிறோம். இசையிலே நாங்கள் தூங்குகிறோம்.
பல குடும்பங்களில் இரவு நேர உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நல்ல பழக்கம் இருந்துகொண்டிருக்கிறது. அப்போது அன்றைய அவரவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். அதுபோல் எங்கள் வீட்டில் தினமும் நான், என் மனைவி, மகள், மகன் ஆகிய நால்வரும் அமர்ந்து எங்கள் இசை அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறோம். புதிய இசை ஆய்வுகள் பற்றியும் பேசுகிறோம். ‘கீபோர்டு’ இசையில் நான் கற்றவை அனைத்தும் என்னோடும், என் குடும்பத்தோடும் தேங்கிவிடாமல் என்னிடம் கற்கும் மாணவர்கள் மூலமாக உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையவேண்டும். அதுதான் எனது லட்சியம். அதற்கான பணியில்தான் இரவு-பகல் பாராது இப்போது ஈடுபட்டிருக்கிறேன்..” என்று கூறும் எம்.எஸ்.மார்ட்டின், கீபோர்டு இசைத் துறைக்கு கிடைத்த பொக்கிஷம்! அதில் மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்தவர். இந்தியாவின் முன்னணி கீபோர்டு இசைக் கலைஞர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது குடும்பத்தினர் அனைவருமே இசைத் தொடர்பு கொண்டவர்கள்.

மனைவி கிருபா, மகள் ஸ்ருதி மார்ட்டினா, மகன் ஜெனோ மார்ட்டின் ஆகியோருடன் அமர்ந்து சுவாரசியமாக கீபோர்டு வாசித்தபடியே எம்.எஸ்.மார்ட்டின் இசைக் கலந்துரையாடல் நடத்திக்கொண்டிருந்த இனிய மாலை நேரம் ஒன்றில் அவரை சந்தித்தோம். அவரது இசை பூர்வீகத்தையும், கடந்து வந்த சங்கீத பயணத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

“நான் விழுப்புரம் அருகில் உள்ள முகையூரில் பிறந்தேன். என் பெற்றோர் மரியசூசை- பாத்திமா. எனது தாத்தா ஞானபிரகாசம் நாதஸ்வர வித்வான். அப்பா கிளாரினெட் இசைக் கலைஞர். அவர்கள் கொடுத்த இசை ஆர்வத்தில் நான் ஏழு வயதிலேயே தேவாலய இசைக்குழுவில் சேர்ந்து பாடினேன். அப்போதே பயிற்சி இல்லாமல் சுயமாக ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டேன். பொதுவாக கிறிஸ்தவ பாடல்களில் கர்நாடக இசைக் கலப்பு இ்ல்லாத சூழல்தான் நிலவுகிறது. மேற்கத்திய இசையே அதில் முக்கியத்துவம் பெறுகிறது.

சிறுவயதில் நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேவாரம் பாடவும் செல்வேன். அங்கு ‘பித்தா பிறைசூடி பெருமானே..’ என்று பாடும்போதும், தேவாலயத்தில் ‘ஆண்டவரே என் ஆயர்.. எனக்கேதும் குறையில்லை..’ என்று மனமுருகும்போதும் எனக்கு ஒரே மாதிரியான உணர்வுதான் ஏற்பட்டது. அதனால் அப்போதே நான் மதமெல்லாம் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனது பாடல்கள் மதங்களை கடந்து மக்களை ஈர்த்து, பலரையும் திரும்பிப்பார்க்க வைத்ததால் இசையையே என் எதிர்காலமாக்கிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தேன்” என்கிறார்.

இவர் கர்நாடக இசையை முறைப்படி கற்க விரும்பியிருக்கிறார். ராகங்களை கற்று, தேர்ச்சிபெற்று அதை ஆர்மோனியத்தில் வாசிக்க விரும்பியுள்ளார். அதற்காக பிளஸ்-டூ முடித்ததும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. இசைக் கல்வி (வாய்ப்பாட்டு) பயின்றிருக்கிறார்.

“இலங்கை மாணவர்கள் மூன்று பேரும், இந்தியாவில் இருந்து நானும், ஆக நான்கு பேர் அப்போது இசைக் கல்வி கற்றோம். எங்களுக்காக சென்னையில் இருந்து வந்து பேராசிரியர் டி.கே.கோவிந்தராவ் பாடம் நடத்தினார். அவரிடம் வாய்ப்பாட்டு கற்று, அதை ஆர்மோனியத்தில் வாசிக்க தேர்ச்சி பெற்றுவிட்டு நானும் சென்னைக்கு வந்தேன். கீபோர்டில் கர்நாடக இசையை வாசிப்பதை இங்கே அறி முகப்படுத்தினேன்.

கீபோர்டு மிக அற்புதமான இசைக் கருவி. ஆர்மோனியத்தின் நவீன வடிவமைப்புதான் கீபோர்டு. அதில் அபசுரம் கிடையாது. அதை எளிதாக இசைக்கலாம். ராகங்களை எளிதாக புரியலாம். அதில் வயலின், புல்லாங்குழல் போன்ற எல்லா இசைகளையும் தரமுடியும். நான் கீபோர்டில் தேர்ச்சி பெற்றதும் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தேன். எனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. பின்பு ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற என்னை அணுகினார்கள். முதலில் பாபநாசம் சிவனின் மகள் ருக்மணி ரமணியின் இசைப்பள்ளியில் மாணவர்களுக்கு கீபோர்டு கற்றுக்கொடுத்தேன். பின்பு ‘மெலிபுலுஸஸ் கர்நாட்டிக் மியூசிக்’ என்ற பெயரில் இசைப் பயிற்சி பள்ளியையும் தொடங்கினேன். சென்னை சி.ஐ.டி.காலனியில் இது இயங்கி வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் கீபோர்டு பயிற்சி பெற்றிருக்கிறார்கள். வெளிநாட்டு மாணவர்களுக்கு ‘ஸ்கைப்’ மூலம் பயிற்சி தருகிறேன்” என்றார்.

கீபோர்டு தயாரிப்பதில் உலக அளவில் தலைசிறந்து விளங்கும் யமஹா நிறுவனத்தினர், இசைக் கலைஞர் எம்.எஸ்.மார்ட்டினின் ஆலோசனையை பெற்று அதற்கு தக்கபடி கீபோர்டுகளை தயாரித்திருப்பது இவருக்கு கிடைத்திருக்கும் கூடுதல் கவுரவமாகும்.

“கீபோர்டு தயாரிக்கும் யமஹா நிறுவனத்தில் இருந்து 13 தொழில்நுட்ப கலைஞர்கள் 2010-ம் ஆண்டு என்னை சந்தித்தார்கள். ஜப்பானில் இருந்து வந்திருந்த அவர்கள், கர்நாடக இசைக்குதக்கபடி கீபோர்டில் எத்தகைய மாற்றங்களை உருவாக்கவேண்டும் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். நான் கொடுத்த தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்று, அதற்குதக்கபடி 2012-ம் ஆண்டு நவீனமுறையில் கீபோர்டை வடிவமைத்து தந்தார்கள். அதற்கு ‘ I 455’ என்று பெயரிட்டார்கள். அதை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்” என்கிறார்.

2009-ம் ஆண்டில் இருந்து இவரது இசை சாதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

“முதலில் ஒரே இடத்தில் எனது மாணவர்கள் 75 பேரை ஒருங்கிணைத்து இயக்கி கீபோர்டு இசைக்கவைத்து லிம்கா சாதனை படைத்தேன். அடுத்து கீபோர்டு இசை மூலம் மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்தோம். முதல் சாதனையில் 109 பேரும், இரண்டாவது சாதனையில் 244 பேரும் கீபோர்டு இசைத்தார்கள். மூன்றாவது சாதனையை குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப் புணர்வுக்காக நிகழ்த்தினோம். அதில் என்னிடமும், மற்ற இசை ஆசிரியர்களிடமும் பயிற்சி பெற்ற 440 மாணவர்கள் கீபோர்டு வாசித்து, இரண்டு மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் தேச பக்தி பாடல்கள் உள்பட அனைத்து விதமான பாடல்களையும் பாடினோம். இந்த சாதனைகள் மூலம் இந்திய மக்களிடம் கீபோர்டு இசை பெருமளவு போய் சேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் 42 ஆண்டுகளாக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு இசை ஆராதனை விழா நடத்திவருகிறார்கள். அதில் இப்போதுதான் முதல்முறையாக கீபோர்டு கச்சேரியை சேர்த் திருக்கிறார்கள். ஆராதனை குழுவின் அழைப்பின் பேரில் நான் அமெரிக்காவிற்கு சென்று கீபோர்டு கச்சேரி நடத்தினேன். அதை ரசித்துக்கேட்ட வெளிநாட்டு ரசிகர்கள் ‘உங்கள் விரல்கள் இசையில் வித்தைகள் செய்கின்றன’ என்று பாராட்டினார்கள். ‘எப்படி உங்களால் ராகங்களை இவ்வளவு சிறப்பாக கீபோர்டில் வாசிக்க முடிகிறது?’ என்றும் கேட்டார்கள்.

கீபோர்டு எல்லாவிதமான இசைகளையும் தரும் இசைச் சங்கமமாக திகழ்கிறது. அதை நிறைய பேர் இசைத்தாலும் அதில் நான் என் சங்கீதத் திறமையை வெளிப்படுத்துகிறேன். அதனால்தான் அதில் என்னால் பிரகாசிக்க முடிகிறது. ரசிகர்களை என் இசையில் கட்டிப்போடவும் முடிகிறது. கீபோர்டில் கர்நாடக இசையை வாசிப்பது என்னோடு நின்றுவிடக்கூடாது. பயிற்சி மூலம் இசை மாணவர்கள் அனைவரிடமும் போய் சேரவேண்டும் என்பதுதான் என் ஆசை” என்றார்.

இவர் தமிழ்நாடு அரசின் ‘கலைச்சுடர்மணி’ உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இவர் இசை பயின்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இசைத்துறை கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் நினைவு இல்லத்தில், இசை நிகழ்ச்சி நடத்தினார். “அங்கு இசை நிகழ்ச்சி நடத்தியபோது எனக்கு அதிக ஆத்மதிருப்தி கிடைத்தது. உணர்வுரீதியாகவும் நான் மிகுந்த உற்சாகத்தோடு நிகழ்ச்சியை நடத்தினேன். அது மறக்கமுடியாத நினைவாகவும் அமைந்தது” என்று உவகை மேலிட சொல்கிறார்.

எம்.எஸ்.மார்டினின் வெற்றிகரமான இசைப் பயணத்திற்கு பின்புலமாக இருக்கும் அவரது மனைவி கிருபாவும், கீபோர்டு இசை அனுபவம் பெற்றவராக இருக்கிறார். அவர் கீபோர்டு இசை பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்களை பட்டிய லிடுகிறார்.

“இசை பயிலும் மாணவர்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். தியானத்தில் ஈடுபடுவதுபோல் அவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கீபோர்டு வாசிப்பதால் மனதை ஒருமுகப்படுத்தும் கலை அவர்களுக்கு வசப்பட்டுவிடும். அதன் மூலம் எல்லா செயல்களையும் வெற்றிகரமாக செய்துமுடிக்கும் ஆற்றலை அவர்கள் பெறுவார்கள். அவர்களிடம் நினைவாற்றலும் கூடும். சமயோசிதமாக முடிவெடுக்கும் ஆற்றலும் அவர்களிடம் வளரும். ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளிலும் ஈடுபடமாட்டார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இசை பயின்றால் அவர்களால் அதிக மதிப்பெண்ணும் வாங்க முடியும். அதனால் எங்கள் மகளும், மகனும் இசையை கற்று, அதிலும் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். படிப்பிலும் பிரகாசிக் கிறார்கள்” என்று பெருமிதம் கொள்கிறார்.

இந்த குடும்பம் இசையில் ஜொலிக்கட்டும்!

ஆசிரியரின் தேர்வுகள்...