சிறப்புக் கட்டுரைகள்

நவீன சுயம்வரங்கள் நடக்கும் விதம் - ஒரு புதிய பார்வை + "||" + How Modern Suyavarangal Are Happened - A New Look

நவீன சுயம்வரங்கள் நடக்கும் விதம் - ஒரு புதிய பார்வை

நவீன சுயம்வரங்கள் நடக்கும் விதம் - ஒரு புதிய பார்வை
‘திருமணம் செய்து கொள்வதா? வேண்டாமா? என்ற கேள்விகளோடு குழம்பித் தெளிவதற்குள் சிலர் திருமண வயதைக் கடந்துவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் திரு மணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசைக் கனவுகளில் மிதந்தாலும், பல வருடங்களாக அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு உருவாகுவதில்லை. வயதைக் கடந்து திருமண ஆசை கொள்பவர்களுக்காகவும், திருமண வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் தீர்வாக இருப்பது, நவீன சுயம்வரங்களுக்கான சந்திப்புகள். இது எண்ணம் கலந்த செயல்பாடுதான்.

நகரின் மையப் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் அமைப்புகளோ, மையங்களோ இத்தகைய சுயம்வரங்களை நடத்துகின்றன. அங்கு மணமகன் தேவைப்படுகிறவர்களும், மணமகள் தேவைப்படுகிறவர்களும் ஒன்றுகூடுகிறார்கள். பந்தா, பகட்டு இல்லாமல் இந்த நிகழ்வு நடக்கிறது.

இளைஞர்களும், இளம்பெண்களும் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்கள். தனது வயது, தொழில், குடும்ப பின்னணி அனைத்தையும் தெரிவித்த பின்பு அவர் தனக்கான இணை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறுவார்.

ஒரே இடத்தில் இப்படி ஒன்றுகூடும் பல குடும்பங்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு மணமகன், மணமகள் வேட்டையில் நேரடியாக இறங்கி விடுகிறார்கள். சில நேரங்களில் அங்கு சிலருக்கு தாங்கள் விரும்புவது போன்ற இணை அமையாது. இன்னொருபுறத்தில் ஒரு சிலரை, பலர் தங்கள் வாழ்க்கைத்துணையாக்க விரும்பி அணுகும் நிலையும் ஏற்படுகிறது. அதனால் சில இடங்களில் நடக்கும் நவீன சுயம்வரங்களில் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

நிறைகளைகொண்ட எல்லா நிகழ்வுகளிலும் ஒருசில குறைகளுக்கும் இடமுண்டு என்பதுபோல், ‘இதில் ஒருவரை பற்றி முழுமையான உண்மைகளை விசாரித்து தெரிந்துகொள்ள போதிய அவகாசம் இருப்பதில்லை’ என்று சிலர் கூறுகிறார்கள். ‘பத்தே நாட்களில் மாப்பிள்ளை கனடாவிற்கு கிளம்பிவிடுவார். அதனால் திருமணத்தை உடனே நடத்திவிடலாம்’ என்று பறக்கும் சில குடும்பத்தினரால், அவர்களின் பின்னணியை பற்றி விசாரிக்க போதிய அவகாசம் இல்லாமல் போய்விடுகிறது.

ஒரு நிகழ்ச்சியில், ஒரே நாளில், திடீர் அறிமுகத்தில் சந்திக்கும் இருவர், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. பல வருடங்கள் காதலித்தவர்களே திருமணம் செய்துகொண்டு சில மாதங்களில் பிரியும் நிலை இருந்துகொண்டிருக்கும் சூழலில், இந்த திடீர் சந்திப்புகளில் உருவாகும் புரிதலே, ஒரு புரிந்துகொள்ள முடியாத விஷயம்தான். அப் படியே புரிந்துகொண்டாலும் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடிவதில்லை. அந்த மேடையில் அறிமுகம் செய்யும்போது ஒருவரைபற்றி சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் உண்மையானது தான் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆண் தவறானவராக அமைந்துவிட்டால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்! ஆண்களும் சில நேரங்களில் பெண் களால் பாதிக்கப்படுவது உண்டு.

டெல்லியில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில், ஒரு இளம்பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட மணமகன் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவர் மட்டுமல்ல, அவருடன் வந்த அம்மா, அப்பா எல்லோருமே போலி என்பது பின்னர்தான் தெரியவந்தது. சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியவரோ, ‘எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே இடத்தில் அழைத்து அறிமுகம் செய்து வைப்பது மட்டுமே எங்கள் வேலை. விசாரிப்பது, தேர்ந்தெடுப்பது, நிராகரிப்பது எல்லாம் அவரவர் கவனமாக செய்ய வேண்டியவேலை’ என்றுகூறி தன்னை நிரபராதியாக காட்டிக்கொண்டார்.

இதில் வெற்றி பெற்ற திருமணங்களும் இருக்கின்றன. பிரச்சினைக்குரிய திருமணங்களும் இருக்கின்றன. நல்லவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். கெட்டவர்களும் இடம் பெறுகிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்து சுயம்வரத்தில் பங்கேற்று திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்கு திரும்பிய நபரும் இருக்கிறார்.

“கூடுமானவரை நாங்கள் இருதரப்பினரையும் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி கொடுக்கிறோம். அதில் இருக்கும் உண்மை, பொய்களை அவரவர் விசாரித்துதான் தெரிந்துகொள்ளவேண்டும். இதில் இருக்கும் ‘ரிஸ்க்’ முழுவதும் வாழ்க்கையில் இணையப்போகும் குடும்பங்களை சார்ந்ததுதான்.

இருவரின் உடல்நிலையை அறியும் மருத்துவ சான்றிதழ், எய்ட்ஸ் சோதனை குறிப்பு போன்றவைகளைக்கூட சம்பந்தப்பட்டவர் களிடம் கேட்கிறோம். பெரும்பாலானவர்கள் அதை தருவதற்கு அவ்வளவாக விருப்பம்காட்டுவதில்லை.” என்று சுயம்வர நிகழ்ச்சி களை நடத்தியவர்கள் சொல்கிறார்கள்.

நோக்கம் நல்லதுதான். அது சரியான முறையில் நிறைவேறவேண்டும் என்பதுதான் எல்லோரது ஆசையும்!