சிறப்புக் கட்டுரைகள்

உலகம் ‘தட்டை’யானதாம் + "||" + world is flat

உலகம் ‘தட்டை’யானதாம்

உலகம் ‘தட்டை’யானதாம்
உலகம் உருண்டை வடிவமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை. ஆனால் உலகம் தட்டையானது என்று இன்றும் சிலர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
உலகம் தட்டையானது என்று உறுதியாக நம்பியவர், அதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்தான், இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் ஷென்டன்.

உலகம் தட்டையானது என்ற தனது கருத்தில் பிடிவாதமாக இருந்துவந்தார் ஷென்டன். அதற்குப் பல ‘விளக்கங்களை’யும் அவர் எடுத்துச் சொன்னார்.

அவற்றில் ஒன்றுதான், ஷென்டன் சொன்ன பலூன் உதாரணம். ஒரு பெரிய வெப்பக்காற்று பலூனில் பொருட்களை ஏற்றி வானில் நிலைநிறுத்த வேண்டும். பூமி தனது அச்சில் சுழல்வது உண்மை என்றால், வானில் பலூனை அசையாமல் நிலைநிறுத்தினாலே, அது அடைய வேண்டிய இடத்தை அடைந்து விடும் என்றார் ஷென்டன்.பூமி உருண்டையானது என்ற விஞ்ஞானிகளின் கூற்று உண்மை எனில், இம்முறையிலேயே பொருட்களை உலகின் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு சென்றுவிடலாம். ஆனால் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை என்பதால், பூமி தட்டையானது என்பதுதான் உண்மை என்றார் ஷென்டன்.

1956-ல் ‘ஸெட்டெட்டிக் சொசைட்டி’ என்ற அமைப்பின் செயலாளர் ஆனார், ஷென்டன். 1823-ம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப் பழமையான அமைப்புதான், ‘ஸெட்டெட்டிக் சொசைட்டி’. இந்த அமைப்பின் உறுப்பினர்கள், பூமி தட்டையான வட்ட வடிவம் கொண்டது, அது நிலையாக இருக்கிறது, சூரியன்தான் அதைச் சுற்றி வருகிறது என்று ஆணித்தரமாக நம்பினார்கள். சூரியன் வெறும் 51 கி.மீ. சுற்றளவே கொண்டது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

‘ஸெட்டெட்டிக் சொசைட்டி’யை ‘தட்டை பூமிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்தார், ஷென்டன். அத்துடன், அவ்வப்போது பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு, தம்மையும், தமது அமைப்பையும் செய்தி வெளிச்சத்திலேயே வைத்திருந்தார்.

ஷென்டனின் அதிரடியான அறிவிப்புகளில் ஒன்று, ‘அமெரிக்கர்களும் ரஷியர்களும் சூழ்ச்சித்திறன் மிக்கவர்கள். அவர்கள் கூட்டுச்சதி செய்துதான், நம்மையெல்லாம் பூமி உருண்டையானது என்று நம்ப வைத்துவிட்டார்கள்.’

மேலும், ‘உண்மையிலேயே சூரியன் பூமியில் இருந்து 10 கோடி கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருக்கிறது என்றால், பூமியின் கோடை காலம் இப்படியா இருக்கும்?’ என்று ஷென்டன் கேள்வி எழுப்பினார்.

விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், பூமியை உருண்டையாகத்தானே காட்டுகின்றன என்று சிலர் கேட்டபோது, ‘‘அவை ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட படங்கள்’’ என்றும் தடாலடியாகச் சொன்னார் ஷென்டன்.

கடந்த 1971-ம் ஆண்டில் ஷென்டன் இறந்துவிட்டார். ஆனால் தட்டை பூமிக் கழகம் இன்றும் உயிரோடு இருக்கிறது.

அதன் உறுப்பினர்கள், ‘‘மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும், வழக்கமான அறிவியல் கருத்துகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றுதான் நாங்கள் ஊக்குவிக்கிறோம்’’ என இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...