ரெயில்வேயில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறதா?


ரெயில்வேயில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறதா?
x
தினத்தந்தி 16 July 2019 8:45 AM GMT (Updated: 16 July 2019 8:45 AM GMT)

இந்திய ரெயில்வே துறையில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பது தென்னக ரெயில்வே துறை ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாக கொண்டிருக்கும் தென்னக ரெயில்வே துறையில் வரும் வேலைவாய்ப்புகளில் அதிக அளவில் வட மாநிலத்தவர்களே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். குறிப்பாக ராஜஸ்தான், ஒரிசா, பீகார், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் ரெயில்வே தேர்வு எழுதுவதற்கான பயிற்சி மையங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இங்கு ரெயில்வே துறையில் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முறையான பயிற்சி பெற்று வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ரெயில்வே தேர்வு எழுதுகிறார்கள். தெற்கு ரெயில்வே துறையில் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால் வட மாநில இளைஞர்கள் ஆங்கில புலமையில் குறைவாகத்தான் காணப்படுகிறார்கள். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர். அங்கே வட மாநில மக்கள் ரெயில்வே தேர்வு எழுத வருவதை அனுமதிப்பது மிக குறைவு. வட மாநிலங்களை போல் நமது மாநிலத்திலும் அரசு சார்பில் பயிற்சி முகாம் நடத்தலாம். ரெயில்வே தேர்வு குறித்து இளைஞர்கள் தேர்வு எழுதுபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். தமிழக இளைஞர்களுக்கு ரெயில்வே தேர்வு எழுதுவதை கல்வி நிறுவனங்களும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தமிழக ரெயில்வே நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர், ரெயில் ஓட்டுனர் உள்பட ஏராளமான ஊழியர்கள் தமிழ்மொழி தெரியாதவர்களாகத்தான் உள்ளனர். இன்று தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1 கோடி பேர் இருக்கிறார்கள். இதனால் வேலைவாய்ப்பில் நமது இளைஞர்களின் உரிமை பறி போகிறது. இதை அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலை நாடுகளில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் போதே குழந்தைகளுக்கு தொழில்கல்வியை கற்றுக் கொடுக்கிறார்கள். அதைப்போல் படிக்கும் போதே தொழில்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வசதிகளை அரசு உருவாக்கி கொடுக்க வேண்டும். ரெயில்வே துறை வேலை வாய்ப்புகளை மாவட்ட வாரியாகவே நியமிக்கலாம்.

தமிழகத்தை சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ரெயில்வே தேர்வு எழுதுவதில் அதிகமான அக்கறையை, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரெயில்வே தேர்வு என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆகவே முறையாக தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற வேண்டும். ரெயில்வே தேர்வுக்கு அதிக இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். குறுக்கு வழியில் பணம் கொடுத்து ரெயில்வே துறையில் வேலை வாங்கும் இன்றைய இளைய சமூகமும் உண்டு.

ரெயில்வே தேர்வில் உதவியாளர், கடைநிலை ஊழியர், துப்புரவு தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து வேலைவாய்ப்புகளிலும் வட மாநிலத்தவர்களே அதிகம் இடம் பெறுகின்றனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற அரசாணை வெளியிட்டது.

தமிழகத்தில் தெற்கு ரெயில்வே துறைக்கு வேலை வாய்ப்பு அரசாணை வெளியிடும்போது தமிழகத்தில் உள்ள ரெயில்வே பயிற்சி மையங்களில் தகுதியான ஆசிரியர்களை இலவசமாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். தெற்கு ரெயில்வேயில் அதிக இளைஞர்கள் ரெயில்வே துறையில் வேலை வாய்ப்புகளை வரும் காலங்களில் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் பூர்வீகமாக வாழும் மக்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் விட்டு வேறு இடங்களுக்கு பணிபுரிய செல்வதற்கு விரும்புவதில்லை. ஆகையால் மாநில அளவில் பணிபுரிவதற்கு அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பிற மாநிலம் சார்ந்த மாணவர்கள் தமிழகத்திற்கு தேர்வு எழுத வரும்போது அவர்களுக்காக பயணக்கட்டண சலுகை கொடுக்கப்படுகிறது.

அதுபோல தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பிற மாநிலம் சென்று தேர்வு எழுத பயணக்கட்டணச் சலுகை கொடுக்க வேண்டும்.

தமிழக அரசு சார்பில் ரெயில்வே தேர்வு குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும். தமிழில் தேர்வு எழுதலாம் என்பதை தேர்வாளர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வழி செய்ய வேண்டும். தென்னக ரெயில்வே என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாநில அரசு நமக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாணவர் நலனுக்காக தேர்வு வகுப்புகள் நடத்த முன்வர வேண்டும். தென்னக ரெயில்வே துறையில் தமிழர்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும்.

தற்போதைய ரெயில்வே பட்ஜெட்டில் ரூ.4,118.80 கோடி நிதி தென்னக ரெயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பயனுள்ள வகையில் புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால் மக்களுக்கு அதிக அளவில் பயனைக் கொடுக்கும்.

- முனைவர் தே.தேவ் ஆனந்த், தலைவர், தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம்.

Next Story