பரவட்டும் கீழடி வெளிச்சம்..!


பரவட்டும் கீழடி வெளிச்சம்..!
x
தினத்தந்தி 17 July 2019 6:24 AM GMT (Updated: 17 July 2019 6:24 AM GMT)

தற்போது தமிழக அரசு கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியினை தொடங்கியுள்ளது. இரட்டைச் சுவர் கொண்ட கட்டிட அமைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ற்போது தமிழக அரசு கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியினை தொடங்கியுள்ளது. இரட்டைச் சுவர் கொண்ட கட்டிட அமைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஆச்சரியமான முடிவுகள் வர உள்ளதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார். இதற்குமுன் 2016 வரையிலான இரண்டு கட்ட அகழாய்வுப் பணியின் மூலம் கிடைத்த பொருட்கள் என்பது, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சீப்புகள், தாயக் கட்டைகள் மேலும், சூது பவம், வளையல்கள், அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய பானைகள், கழிவு நீர் கடத்துவதற்கான சுடுமண் குழாய்கள், பஞ்சை நூலாக்கும் தக்கிளி கருவிகள், சாயப் பட்டறைகள், இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை இந்தியத் தொல்லியல் துறையினர் கண்டெடுத்தனர்.

கிடைத்த பொருட்களில் சிலவற்றை காலநிர்ணய அளவிற்காக, கார்பன்டேட் ஆய்விற்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் இயங்கும் பீட்டா அனாலெட்டி என்னும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், 2,300 முதல் 2,750 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள்தான் இவைகள் என்று, அறிவியல் ரீதியாக சான்றளிக்கப்படுகிறது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 750 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அறிவார்ந்த சமுதாயம் இங்கே வாழ்ந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது. பிரபல வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பா, இந்திய வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் நேரம் வந்துவிட்டது என்று கீழடி ஆய்வின் முடிவுகள் குறித்து தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்தார். இதுவரையில் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு வரலாற்றில் கட்டிட அமைப்பு கொண்ட வீடுகள் இருந்ததற்கான அடையாளங்கள் கீழடியில்தான் கிடைக்கப்பெற்றன. ஐந்து மீட்டர் அகலத்தில் நான்கரை மீட்டர் ஆழத்தில் வெட்டப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில், வெறும் இரண்டரை மீட்டர் ஆழத்தில் கிடைத்த கனிமப் பொருட்களைத்தான் கார்பன்டேட் ஆய்விற்காக அனுப்பப்பட்டது. இதுதான் 2,750 ஆண்டுகள் வரையில் பிற்பட்டது என்கிற முடிவுகள் வந்துள்ள நிலையில் நான்கரை மீட்டர் ஆழத்தில் கிடைக்கும் பொருட்களையும் முறையாக ஆய்வு செய்தால், சிந்துசமவெளி நாகரிகத்திற்கும், கீழடியில் வாழ்ந்த மக்களுக்குமான தொடர்புகளை தெரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.

இந்த நிலையில்தான் கீழடியில் ஆய்வினைத் தொடங்கிய அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிடை மாற்றம் செய்யப்படுகிறார். இந்தியத் தொல்லியல் துறையானது 1861-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்துறையில் கண்காணிப்பாளராக இருக்கும் ஒருவரை இடமாற்றம் செய்வது கிடையாது. முதன் முதலில் அமர்நாத் ராமகிருஷ்ணாதான் இடமாற்றம் செய்யப்படுகிறார். கண்காணிப்பாளர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரையில் பணியாற்றி வருவதும் பிறகு அறிக்கை அரசிடம் வழங்குவதுதான் மரபாகும். கீழடி அகழாய்வு தடங்கல் ஏதுமின்றி தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு நடைபெற்ற கீழடிக்கே வந்து பார்வையிட்டு, மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ண தலைமையில் கீழடி பணிகள் தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், அமர்நாத்தின் இடமாற்றம் ரத்து செய்யப்படாமல் ராமன் என்பவரை நியமித்து மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணியினைத் தொடங்கியது இந்திய தொல்லியல்துறை. இத்துடன் கீழடி ஆய்வினை நிறைவு செய்தது.

தற்போது நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல்துறை செய்து வருகிறது. இந்தியத் தொல்லியல் துறையில் இருக்கும் தொழில் நுட்ப வசதி தமிழகத் தொல்லியல் துறையில் கிடையாது. மேலும் இந்தியத் தொல்லியல் துறையில் உள்ள ஆய்வாளர்கள் முறையாக பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்றவர்கள். தமிழகத் தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளை படித்தறியும் ஆற்றல் பெற்றவர்கள். ஆனால் அகழாய்வு செய்யும் பயிற்சிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களல்ல.

உண்மையிலேயே கீழடி குறித்த வரலாறு முழுமையாக வெளிவர வேண்டும் என்றால் மத்திய அரசுதான் முனைப்புடன் செயல்பட வேண்டும். கீழடி அகழாய்வுப் பணியைத் தொடங்கிய அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் முழுமையாக 110 ஏக்கர் நிலத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் கீழடி வரலாற்று வெளிச்சம் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே புகழை உண்டாக்கும். தொன்மையான மனிதர்கள் வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்துள்ளார்கள் என்று உலகளவில் பேசப்படும் பகுதியாக கீழடி மாறுவது உறுதி. இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் மிகப் பழமையான கல்வெட்டுகள் அசோகர் காலத்து கல்வெட்டுகள் தான் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த கல்வெட்டுகள் என்பது அரசன் சொல்லி மற்றவர்கள் எழுதிய பறை சாசனம்.

அசோகர் காலம் எனப்படுவது கி.மு. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு எனச் சொல்கிறது வரலாறு. ஏறக்குறைய அதே சமகாலத்தில் கீழடியில் வாழ்ந்த சாமானியனுக்கும் எழுத்தறிவு இருந்துள்ளது. தான் பயன் படுத்திய பானை ஓடுகளின் மேல் இறவாதன், முயன், ஆதன், இயணன், மாடச்சி, சுரமா போன்ற பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கீழடியில் கிடைத்த பானை ஓடுகள் சொல்கின்றன. அதாவது வடபகுதியில் உள்ளோர் கல்வெட்டுகள் செதுக்குகிற காலத்தில் இங்கே மதுரைக்கு அருகில் கீழடியில் வாழ்ந்த சாமானியர்களுக்கும் எழுத்தறிவு இருந்துள்ளது. எனவே சித்தாந்த கருத்து வேறுபாடாக மத்திய அரசு கருதாமல் தமிழ் இனத்தின் தொன்மையினை உலகத்தார் அறிந்துகொள்ள உதவ வேண்டும்.

நீ.சு.பெருமாள், எழுத்தாளர், பரமக்குடி.

Next Story