சிறப்புக் கட்டுரைகள்

மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் + "||" + The father of genealogy Gregor Mendel

மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல்

மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல்
ஒரு கணினி இயங்க மென்பொருள் எவ்வளவு முக்கியமானதோ, அதைப்போல ‘டி.என்.ஏ.’ எனப்படும் மரபணுவும் நம் உடலின் எல்லா இயக்கத்தையும் ஒருசேர இயக்கும் ஓர் உயிர்ச்செயலி ஆகும்.
நாளை (ஜூலை 20-ந் தேதி) மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் பிறந்ததினம்.

மரபணுக்கள் என்பது எல்லா உயிரினங்களின் அணுக்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஓர் அதிசய விசையாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு கணினி இயங்க மென்பொருள் எவ்வளவு முக்கியமானதோ, அதைப்போல ‘டி.என்.ஏ.’ எனப்படும் மரபணுவும் நம் உடலின் எல்லா இயக்கத்தையும் ஒருசேர இயக்கும் ஓர் உயிர்ச்செயலி ஆகும். இத்தகைய மரபணுவின் மரபுப் பண்புகள் குறித்தும், மரபணுக்கள் எவ்வாறு இயற்கை விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததியினருக்கு இடம் பெயருகிறது என்பது குறித்தும் தனது நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தவர் விஞ்ஞானி கிரிகோர் மெண்டல்.

மரபியலின் தந்தை என்று அழைக்கப்படும் கிரிகோர் மெண்டல்ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார். ஜெர்மானிய மொழி பேசும் குடும்பத்தில் பிறந்து, தன் பால்ய காலங்களை வறுமையின் பிடியிலேயே கழித்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது ஆர்வத்தினால் மரபியல் குறித்த ஆராய்ச்சிகளைச் சிரத்தையாக மேற்கொண்டு பல அதிசயிக்கும் உண்மைகளை உலகிற்கு அறிவித்தவர் கிரிகோர் மெண்டல். அவரின் ஆராய்ச்சி முழுவதும் மரபணு மற்றும் அதன் வெவ்வேறு வெளிப்பாடு, தத்துவம் சார்ந்ததாகவே இருந்தது.

தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளே அவரது ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. அவர் மேற்கொண்ட ஒரு ஆய்வில் உயரமான ஒரு பட்டாணிச் செடியும், குட்டையான ஒரு பட்டாணிச் செடியும் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டபோது இரண்டாம் தலைமுறையில் விளைந்த எல்லாச் செடிகளும் உயரமானதாகவே காணப்பட்டது. அதே செடிகளை மீண்டும் சுயமகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தியபோது, அதில் மூன்றாம் தலைமுறையில் விளைந்த செடிகளில் நான்கில் ஒரு பகுதிச் செடிகள் குட்டையானதாகவே காணப்பட்டது. ஆக, இரண்டாம் தலைமுறையில் வெளிப்படாமல் இருந்த குட்டைச் செடிக்கான காரணி, மூன்றாம் தலைமுறையில் ஏதோ ஒரு மரபணுச் சேர்க்கை விதியின் கீழ் வெளிப்பட்டுள்ளது என்ற ஒரு முக்கிய உண்மையைக் கண்டறிந்தார் கிரிகோர் மெண்டல். இதுவே அவர் மரபணுவியல் குறித்து மேலும் மேலும் ஆராய தூண்டுகோளாக அமைந்தது.

பட்டாணிச் செடிகளின் ஏழு குணாதிசயங்களை பல்வேறு புள்ளியியல் கோட்பாடுகளின் கீழ் மீண்டும் மீண்டும் மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்துப் பார்த்தவருக்கு, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. எப்படி ஒரு குரோமோசோமின் குறிப்பிட்ட குணாதிசயம், தன்னைச் சார்ந்துள்ள இன்னொரு குரோமோசோமின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்தார். தன் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி ‘மெண்டலின் விதிகள்’ என்ற மூன்று முக்கிய விதிகளையும் அமைத்தார். 1866-ல் அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். ‘எக்ஸ்பிரிமென்ட்ஸ் வித் பிளான்ட் ஹைபிரிட்ஸ்’ என்ற தலைப்பில் அவரது கட்டுரை பிரசுரமானது. இருப்பினும் அதை யாரும் அங்கீகரிக்கவில்லை.

முன்னதாக 1865-ல் பொகீமியாவில் உள்ள புருண் இயற்கை வரலாற்று சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் தனது ஆராய்ச்சியின் சாராம்சம் குறித்து விளக்கினார் மெண்டல். அந்தக் காலகட்டத்தில் அவரின் கண்டுபிடிப்புகளை யாரும் பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்தே கார்ரன்ஸ், ஹூயுகோ டி ரீஸ் போன்ற ஆராய்ச்சியாளர்கள்தான் மெண்டலின் கட்டுரைகளை மேற்கோள்காட்டி அவரின் மரபியல் கோட்பாட்டின் தத்துவத்தை வியந்து பாராட்டினர். தனது ஆராய்ச்சியை உலகம் ஏற்கும் முன்னரே 1884-ம் ஆண்டு மெண்டல் மறைந்துபோனார் என்பது சோகமான உண்மை.

முற்காலத்தில் பரம்பரை நோய் என்று கருதப்பட்ட சர்க்கரை நோய், ரத்த உறையாமை நோய், நிறக்குருடு போன்றவை ஏதோ சாபத்தினால் ஏற்பட்டவையாகவே கருதப்பட்டது. மரபியல் கோட்பாட்டை முழுமையாக அறிந்த பின்னரே அவை மரபணுக்களின் மாறுபட்ட வெளிப்பாடுகளால் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபியல் விதிகளின்படி அவை கடத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டது. உதாரணத்திற்கு பாட்டன் சொத்து பேரனுக்கே என்று கூறப்படுவதைப்போல் முதல் தலைமுறை பாட்டனின் நோய்கள், மூன்றாம் தலைமுறை பேரனுக்கு, இரண்டாம் தலைமுறை மகள் வழியே மரபியல் விதிப்படி சென்றடையும். இதில் இரண்டாம் தலைமுறை மகள்கள் அந்நோயின் மரபணுவைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அந்த நோய் ஏற்படாது. அதேபோல் ஆண்களுக்கே உரிய பரம்பரை நோய்களும் தலைமுறை தலைமுறையாக தொடரும் என்றும் கண்டறியப்பட்டது. இது பாலினம் இணைக்கப்பட்ட மரபியல் வெளிப்பாடாகும். இவையனைத்தின் காரணிகளையும் முழுமையாக புரிந்துகொள்ள மெண்டலின் விதிகளே மூலக்காரணமாகும்.

சொந்தத்தில் திருமணம் செய்வதால் குழந்தைகள் ஊனமாகப் பிறப்பது குறித்து நாம் அறிவோம். இதன் அறிவியல் காரணமும் மரபியல் சார்ந்ததாகும். ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரு நபர்கள் அதாவது, ஒரு பெண் தன் தாய்மாமனை திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணின் தாயின் ‘டி.என்.ஏ’வும் தாய்மாமனின் ‘டி.என்.ஏ’வும் ஒரே பெற்றோர்களிடமிருந்தே பெறப்பட்டிருக்கும். இதுவே அடுத்தத் தலைமுறைக்கு பயணிக்கும்போது, டி.என்.ஏ.க்கள் தங்கள் மரபணுக்களை வெவ்வேறு சேர்க்கைப் பொருளின்றி ஒரே ‘டி.என்.ஏ’ மாதிரியுடன் இணைய நேரிடும் போது, புதுப் புது மரபணு வெளிப்பாடுகளுக்கு வழியின்றி நோய் உண்டாக்கும் குரோமோசோம்களை உருவாக்க வாய்ப்புள்ளது. அதுவே குழந்தைகள் ஊனமாக பிறக்க காரணமாகவும் அமைகிறது. மேலும் கலப்புத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருக்கக் காரணம் புதுப் புது மரபணுக்களின் கலப்பே ஆகும்.

கிரிகோர் மெண்டலில் மரபியல் கோட்பாடுகளே இன்றும் பல்வேறு உயிரித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. இவரின் கண்டுபிடிப்புகளே தாவர இனப்பெருக்கம் மற்றும் கலப்பினம் குறித்தப் புரிதலை வெகுவாக ஏற்படுத்தியது. வணிக ரீதியாகவும் மரபணு மாற்றப்பட்ட பல தாவரங்களின் உற்பத்திப் பெருக்கத்திற்கும் மெண்டல் அவர்களின் கண்டுபிடிப்புகளே முக்கியக் காரணமாகும்.

முனைவர் தி.ஞா.நித்யா, இணைப் பேராசிரியர், தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை.