சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : இரும்பு பெண்மணி + "||" + Iron Woman

தினம் ஒரு தகவல் : இரும்பு பெண்மணி

தினம் ஒரு தகவல் : இரும்பு பெண்மணி
மேற்கு ஜெர்மனியில் பிறந்து, கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர் அங்கேலா மெர்கெல். சோவியத் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் கெடுபிடிகள் அதிகம். கருத்து சுதந்திரம் கிடையாது.
மேற்கு ஜெர்மனியில் பிறந்து, கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவர் அங்கேலா மெர்கெல். சோவியத் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் கெடுபிடிகள் அதிகம். கருத்து சுதந்திரம் கிடையாது. எங்கும் எப்போதும் ரஷிய உளவாளிகள் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் மெர்கெலின் இளம்வயது வாழ்க்கை கழிந்தது. கிழக்கும், மேற்கும் ஒன்றிணைந்த ஜெர்மனி உருவாகாதா என்ற ஏக்கத்துடன்தான் வளர்ந்தார். இளம் வயதிலேயே அதற்கான அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டார். அறிவியலில் அதீத ஆர்வம். அறிவியல் ஆய்வாளராக பணியாற்ற தொடங்கிய மெர்கெல், 1986-ம் ஆண்டில் குவான்டம் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

1989-ம் ஆண்டு, நவம்பர் 9-ந்தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு ஒன்றிணைந்த ஜெர்மனி உருவான சமயத்தில், மெர்கெல் தீவிர அரசியலில் இறங்கினார். கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சியில் இணைந்தார். அவரது அரசியல் அறிவும், பொறுப்பான அணுகுமுறையும் கட்சி தலைவர் ஹெல்மட்கோலை கவர்ந்தது. ஒன்றிணைந்த ஜெர்மனிக்காக 1990-ம் ஆண்டில் நடந்த முதல் தேர்தலில் கிழக்கு ஜெர்மனியில் இருந்து வந்த பிரதிநிதியாக மெர்கெலை முன்னிறுத்தினார் ஹெல்மட். அந்த தேர்தலில் மெர்கெல் வெற்றிபெற்றார். சான்ஸிலர் ஹெல்மட் தலைமையில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியமைக்க, மந்திரி சபையில் மெர்கெலும் இடம்பிடித்தார். பெண்கள் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியான அவர், பின்னர் சுற்றுச்சூழல் துறை மந்திரியாகவும் இருந்தார்.

நேர்த்தியான செயல்பாடுகள், தைரியமான நடவடிக்கைகள், கட்சியினரை அரவணைத்து செல்லும் பாங்கு என மெர்கெல் கட்சிக்குள் நல்ல பெயர் எடுத்தார். 1998-ம் ஆண்டு தேர்தலில் ஹெல்மட் அரசு தோற்கடிக்கப்பட்டது. அந்தச் சூழலில் மெர்கெல் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 2000-ம் ஆண்டில் கட்சியின் தலைவராக அமர்ந்தார். ஜெர்மனி வரலாற்றில் அரசியல் கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

ஜெர்மனி மக்களின் அபிமானத்தைச் சம்பாதித்த மெர்கெல், 2005-ம் ஆண்டு தேர்தலில் ஜெர்மனியின் முதல் பெண் சான்ஸிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எந்தச் சூழலிலும் உடனடியாக முடிவெடுத்து ஜெர்மனியின் நிலைப்பாட்டை அழுத்தமாக பதிவுசெய்தார்.

தீவிரம் அடைந்திருந்த சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் உள்நாட்டு போர்களினால், அங்கிருந்து வெளியேறிய லட்சக்கணக்கான மக்கள், கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளைத்தான் வந்தடைந்தனர். 2015-ம் ஆண்டில் அந்த அகதிகளுக்கு பெரும் அளவில் தஞ்சம் அளித்தது ஜெர்மனிதான். தனது நாட்டின் எல்லையை மெர்கெல் திறந்தே வைத்திருந்தார். சுமார் 8 லட்சம் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார் அவர்.

ஆனால், பிரான்ஸ் நாட்டில் நடந்த ஐ.எஸ். தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, அகதிகளின் போர்வையில்தான் தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தபோது, மெர்கெல் கதவுகளை மூடவேண்டிய கட்டாயம் உருவானது.

கொடுங்கோன்மைக்கு எதிராக தீவிரத்துடனும் வலிமையுடனும் செயல்படும் உலக தலைவர்கள் அருகிவிட்ட நிலையில், மெர்கெல் சிறந்த சர்வதேச தலைவராக செயலாற்றி வருகிறார், என புகழாரம் சூட்டியிருக்கிறது ‘டைம்’ பத்திரிகை. இன்றைய உலக அரசியலின் போக்கை நிர்ணயிக்கும் பிரதான சக்திகளுள் ஒருவராகவும் இருக்கிறார். மனிதாபிமானமும், பெருந்தன்மையும் கொண்ட இரும்பு பெண்மணி எனவும் போற்றப்படுகிறார்.