‘‘அதிர்ஷ்ட தேவதையே, கொஞ்சம் நியூசிலாந்து நாட்டையும் சுற்றிப்பார்’’ நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம்


‘‘அதிர்ஷ்ட தேவதையே, கொஞ்சம் நியூசிலாந்து நாட்டையும் சுற்றிப்பார்’’ நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம்
x
தினத்தந்தி 20 July 2019 11:57 AM GMT (Updated: 20 July 2019 11:57 AM GMT)

‘‘வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். சில விஷயங்கள் காயப் படுத்தும். ஆனால் ஒருசில விஷயங்கள் மட்டுமே, நம் வாழ்க்கையை புரட்டிப்போடும். ஆனால் அத்தகைய சம்பவம், உலகக்கோப்பையின், இறுதி ஆட்டத்தில், இறுதி ஓவரில், இறுதி பந்தில் நடந்ததுதான் சோகமான விஷயம்.

சூப்பர் ஓவரை எதிர்கொண்ட தருணங்களை நினைத்து மகிழ்வதா, இல்லை சூப்பர் ஓவரை சமன்செய்தும் உலக கோப்பையை இழந்ததை நினைத்து, அழுவதா..? என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறேன்’’ என்று உள்ளக் குமுறல்களை, கண்ணீரோடு கொட்டித்தீர்க்கிறார், ஜிம்மி நீஷம்.

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான நீஷம், உலக கோப்பையில் அந்த அணியின் துருப்புச்சீட்டாகவும் திகழ்ந்தார். மிடில் ஓவர்களில் பந்து வீசி விக்கெட்டை வீழ்த்துவதாக இருக்கட்டும், பேட்டிங்கில் அணியின் ஸ்கோரை உயர்த்துவதாக இருக்கட்டும், நடந்து முடிந்த உலககோப்பையில் பிரமாதப்படுத்தினார்.

இறுதிப்போட்டியின் சூப்பர் ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, 2-வது பந்திலேயே சிக்சர் விளாசி, பதற்றத்தை தணித்தார். சூப்பர் ஓவரில் வீசப்பட்ட 6 பந்துகளில், 5 பந்துகளை அடித்தாடி, 14 ரன்களை சர்வ-சாதாரணமாக சேர்த்தார். இருப்பினும் அதிர்ஷ்ட தேவதை இங்கிலாந்து நாட்டையே காதலித்ததால், உலக கோப்பை இங்கிலாந்து வசமானது. இது குறித்து, நீஷம் கூறுவதை கேளுங்கள்:

‘‘அணியின் 5 வருட உழைப்பு, வீரர்களின் தியாகம்-காயம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கெல்லாம், பதில் கிடைத்த தருணம் அது. முதலில் பேட்டிங் செய்து, நல்ல ஸ்கோரை எட்டியதாகவே நினைத்தோம். நினைத்தபடியே, பந்துவீச்சில் அழுத்தம் கொடுத்து, இங்கிலாந்தின் விக்கெட்டுகளை காலி செய்தோம். பட்லரின் விக்கெட்டும் வீழ்ந்தது. அடுத்த பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். ஆனால் அதிர்ஷ்ட தேவதைக்கு, இங்கிலாந்தின் மீதுதான் காதல் போல. இல்லையெனில், பீல்டிங்கில் அட்டகாசப்படுத்தும் போல்ட், கேட்ச் பிடித்த பிறகு, பவுண்டரி கோட்டை மிதித்திருக்கமாட்டார். நடந்ததை நினைத்து வருத்தப்படாமல், அடுத்த பந்தை வெற்றி முனைப்போடு வீசினோம். ஆனால், அடுத்த பந்திலும், அதிர்ஷ்ட தேவதையின் விருப்பம் இங்கிலாந்து பக்கமே இருந்தது. ஓவர் துரோ முறையில், ஸ்டோக்ஸின் மட்டையில் பந்து பட்டு, தெறித்து, 6 ரன்களை கொடுத்தது. எப்படியோ, ஆட்டத்தை சமனாக முடித்துவிட்டோம். அடுத்து சூப்பர் ஓவர் என்ற நிலையில், இங்கிலாந்து 15 ரன்களை திரட்டியது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு, மட்டையை தூக்கி கொண்டு, மைதானத்திற்குள் நுழைந்தேன். அப்போது நான் பிரார்த்தித்தது ஒன்றுதான். அதிர்ஷ்ட தேவதையே, கொஞ்சம் நியூசிலாந்து நாட்டையும் சுற்றிப்பார் என்பதுதான் அது. என்றவர், சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் 5 பந்துகளையும், ரன்களாக மாற்றினார். இதில் ஒரு சிக்ஸும் அடக்கம். கடைசி பந்தில், 2 ரன்கள் தேவைப்பட, கப்தில் களத்தில் நின்றார்.

‘‘கப்தில் போன்ற வீரரை யாரும் குறை கூற முடியாது. அவர் சிறப்பான ஆட்டக்காரர். ஒரு விபத்தின்போது, இடது காலில் இருக்கும் மூன்று விரல்களையும் இழந்துவிட்டார். அதன் காரணமாகக்கூட, கடைசி பந்தில் அவரால் 2-வது ரன்னை நிறைவு செய்யமுடியாமல் போயிருக்கலாம். மேலும், சூப்பர் ஓவரில் மொத்தம் 8 ரன்களை ஓடியே எடுத்திருக்கிறோம். அந்த களைப்பில் கூட, அவரால் சரிவர ஓடமுடியாமல் இருந்திருக்கலாம். இப்படி, பல காரணங்களை யோசித்தபோதுதான், அதிர்ஷ்ட தேவதையின் பிடிவாதம் புரிந்தது.

நியூசிலாந்து அணிக்கு உலக கோப்பை கிடைப்பதாக விதி இருந்திருந்தால், ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றிருக்காது. அதற்கு முன்பாகவே முடிந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்ட தேவதைக்கு, நியூசிலாந்தைவிட, இங்கிலாந்தையே அதிகம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறோம். அதனால்தான், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் இங்கிலாந்து மண்ணிலேயே விழுந்துவிட்டது’’ என்பவர், உலக கோப்பைக்கு பிறகு, அதிர்ஷ்ட தேவதையிடம், பிரத்யேக கோரிக்கையும் வைக்கிறார்.

‘‘அது வேறு ஒன்றுமில்லை, சூப்பர் ஓவருக்கு முன் என்ன வேண்டினேனோ, அதைதான் இன்று கேட்கிறேன். ‘‘அதிர்ஷ்ட தேவதையே, கொஞ்சம் நியூசிலாந்து நாட்டையும் சுற்றிப்பார்’’ என்று வருத்தம் தோய்ந்த குரலோடு விடை கொடுக்கிறார்.

Next Story