ஆச்சரியங்கள் ஆயிரம் : வண்டுகளால் வரும் வருமானம்


ஆச்சரியங்கள் ஆயிரம் : வண்டுகளால் வரும் வருமானம்
x
தினத்தந்தி 20 July 2019 12:56 PM GMT (Updated: 20 July 2019 12:56 PM GMT)

ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம் பல்கலைக்கழக மாணவரான வியாசஸ், கோழி இறைச்சி எலும்புத் துண்டுகளை விரைவாக மக்கச் செய்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்.

அப்போது அவர் ஒரு சுவாரசியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அந்தக் கண்டு பிடிப்பு, அவரை பெரும் பணக்காரர் ஆக்கியிருக்கிறது.

குப்பையில் தினந்தோறும் டன் கணக்கில் கொட்டப்படும் எலும்புத் துண்டுகளை, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் எந்த உயிரினம் கொண்டு அழிக்கலாம் என வியாசஸ் ஆராய்ந்தார்.

அப்போது, குப்பைகூளப் பகுதியில் சில வெண்ணிற முட்டைகளை அவர் கண்டார். அவற்றைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று, பாதுகாப்பாய் வைத்துக் கண்காணித்தார். சில நாட்களில் அந்த முட்டைகள் பொரிந்து, அவற்றில் இருந்து ‘டைனஸ்டிஸ் ஹெர்குலிஸ்’ என்ற ஒரு வகை வண்டுகள் வெளிவந்தன.

வண்டினங்களிலேயே மிகவும் பெரியதாகும் இந்த டைனஸ்டிஸ் ஹெர்குலிஸ். மத்திய மற்றும் தென்அமெரிக்கப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இதில் முதிர்ந்த ஆண் வண்டு 17 செ.மீ. நீளம் இருக்கும், பட்டாக்கத்தி போன்ற இரு கொம்புகளைக் கொண்டிருக்கும். பெண் வண்டு, ஆண் வண்டின் பாதி அளவில்தான் இருக்கும்.

எலும்புத் துண்டுகளை அழிப்பதில் இந்த ஹெர்குலிஸ் வண்டு பயன்படாது என்று முடிவெடுத்த வியாசஸ், அவற்றை அகற்றிவிடத் தீர்மானித்தார்.

அப்போது வியாசஸிடம் இருந்த அந்த வண்டுகளைப் பார்த்த சில ஜப்பானிய தொழிலதிபர்கள், தாம் செல்லப் பிராணியாக வளர்க்க விரும்புவதாகக் கூறி அவற்றைக் கேட்டனர். அத்துடன், அவ்வண்டுகளை வளர்த்து, செல்லப்பிராணி போல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று யோசனையும் கூறினர்.

அந்த யோசனையை அப்படியே பிடித்துக்கொண்ட வியாசஸ், ஹெர்குலிஸ் வண்டுகளை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கினார். தற்போது, இவர் இந்த வண்டுகளை சிறிய, தூய்மையான பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்கிறார்.

உயிருள்ள ஓர் ஆண் ஹெர்குலிஸ் வண்டு ரூ. 9 ஆயிரத்துக்கும், உயிருள்ள ஒரு பெண் ஹெர்குலிஸ் வண்டு ரூ. 3 ஆயிரத்து 500-க்கும் வியாசஸ் ஏற்றுமதி செய்கிறார். நன்கு பதப்படுத்தப்பட்ட இறந்த வண்டுகளை, ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதுபோன்ற விந்தைப் பொருட்களைச் சேகரிப்போர் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு இவர் அனுப்புகிறார்.

வண்டுகளாலேயே வாழ்க்கையில் வளமான வியாசஸ், தேர்ந்தெடுத்த சில ஹெர்குலிஸ் வண்டுகளை தானே செல்லப்பிராணிகளாக வளர்க்கவும் செய்கிறார்.

Next Story