சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : மிகப்பெரிய பஸ் நிலையங்கள் + "||" + Biggest bus stations

தினம் ஒரு தகவல் : மிகப்பெரிய பஸ் நிலையங்கள்

தினம் ஒரு தகவல் : மிகப்பெரிய பஸ் நிலையங்கள்
உலக அளவில் மிகப் பெரிய பஸ் நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இடையில் அதைவிட மிகப் பிரமாண்டமான பஸ் நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப்பட்டது.
லக அளவில் மிகப் பெரிய பஸ் நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இடையில் அதைவிட மிகப் பிரமாண்டமான பஸ் நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிதான், இந்த பிரமாண்ட பஸ் நிலையம் உருவாக காரணம். கிழக்கு டெல்லியில் இந்திரப்பிரஸ்தா பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் காமன்வெல்த் கிராமத்தில்தான் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 2014-ம் ஆண்டு இந்தப் பெருமையை அந்த பஸ் நிலையம் இழந்தது. அதற்கான காரணத்தை இங்கே பார்ப்போம். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த பஸ் நிலையம். இதில் மூன்று பிரதான வாசல்கள் இருக்கின்றன. அவை தனித்தனியாக கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய பகுதிகளை இந்த பஸ் நிலையத்துடன் இணைக்கின்றன.

இந்த பஸ் நிலையத்தின் பரப்பளவு 61 ஏக்கர். இதில் சாதாரணமான பஸ்களைவிட கூடுதலான அகலமும் நீளமும் கொண்ட தாழ்தள பஸ்களை ஆயிரத்துக்கும் மேல் தாராளமாக நிறுத்தலாம். அதனால் இந்த பஸ் நிலையத்திற்கு “மில்லினியம் பஸ் டெப்போ” என்று பெயர் வைத்தார்கள். ஏதாவது பழுது என்றால் அதை சரிசெய்வதற்கு வசதியாக பஸ் நிலையத்திற்கு உள்ளே 5 பணிமனைகள் இயங்கி வந்தன. இதுபோக சரக்கு மையமும் இருந்தது. பயணிகள் கொண்டு வரும் பொருட்களில் அபாயகரமான பொருள் ஏதாவது இருக்கிறதா? என்பதை கண்காணிப்பதற்காக அதிநவீன கண்காணிப்பு மையம் ஒன்றும் இயங்கி வந்தது. டெல்லி வாகனங்கள் டீசலுக்கு விடை கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு இயக்கப்படும் வாகனங்களில் கியாஸ் மட்டுமே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கியாசிலும் மிகக் குறைந்த கார்பனை வெளியிடக்கூடிய சி.என்.ஜி. ஹைபிரிட் பஸ்கள் வந்துவிட்டன. குறைவான மாசுக்குறியீடும், சுற்றுச்சூழலுக்கும் உகந்த இந்த பஸ் ஒன்றின் விலை ரூ.1½ கோடியாகும். இத்தகைய சிறப்பான பஸ்களை உலகிலேயே முதன்முதலாக இயக்கிய பெருமை டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கே உரியது. காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்த ரக பஸ்களை மாநகரில் வலம் வர வைத்தது.

இப்படி பிரமாண்டமாக யமுனை நதிக்கரையில் உருவாக்கப்பட்ட இந்த பஸ் நிலையத்துக்கு சுற்றுச்சூழல் மூலம் பிரச்சினை வந்தது. யமுனை ஆற்றின் கரையில் இருப்பதால் நதி மாசுப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 2014-ம் ஆண்டில் இந்த பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனால் பஸ் நிலையத்தின் பெரும்பகுதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மாற்றலுக்கான வேலைகள் மெதுவாக நடந்து வருகின்றன. இதனால் உலகின் மிகப்பெரிய பஸ் நிலையம் என்ற பெருமையை வெறும் நான்கே ஆண்டுகளில் பறிகொடுத்தது மில்லினியம் பஸ் டெப்போ. தற்போதைய நிலவரப்படி இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெலவிவியில் உள்ள சென்ட்ரல் பஸ் ஸ்டேஷன் தான் உலகிலேயே மிகப் பெரிய பஸ் நிலையம் ஆகும். இது 57 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 800 பஸ்களை நிறுத்த முடியும்.

இதற்கடுத்து இரண்டாவது பெரிய பஸ் நிலையம் எது தெரியுமா? நம்ம கோயம்பேடு பஸ் நிலையம் தான். சென்னையில் புறநகர பஸ்களுக்காக கட்டப்பட்ட இந்த பஸ் நிலையம் 37 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒரே நேரத்தில் இங்கு 500 பஸ்களை நிறுத்த முடியும். இதுதான் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பஸ் நிலையமும் ஆகும். இது நமக்கெல்லாம் ஓர் பெருமைதான்!