அங்கோர்வாட் கோவில்: கல்லிலே கலைவண்ணம்- 15. மனிதச் செயலா? மாயாஜாலமா?


அங்கோர்வாட் கோவில் எப்படி கட்டப்பட்டு இருக்கலாம் என்பதை விளக்கும் ஓவியம்.
x
அங்கோர்வாட் கோவில் எப்படி கட்டப்பட்டு இருக்கலாம் என்பதை விளக்கும் ஓவியம்.
தினத்தந்தி 21 July 2019 6:08 AM GMT (Updated: 21 July 2019 6:08 AM GMT)

உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் என்ற உன்னதமான பெருமையைப் பெற்று இருக்கும் அங்கோர் வாட் கோவிலின் பிரமாண்டத்தை நேரில் பார்க்கும் ஒவ்வொருவரும் எழுப்பும் வியப்பு மிக்க வினா.

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு வசதியும் இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய அளவிலும், அளப்பரிய ஏராளமான சிற்பங்களையும் கொண்ட அற்புதமான இந்தக்கோவிலை எப்படிக் கட்டினார்கள்?’ என்பதாகத் தான் இருக்கும்.

இது மனிதச்செயலால் சாத்தியமானதா? அல்லது மாயாஜாலத்தால் உருவானதா? என்ற மயக்கத்தைத் தரும் வகையில் அந்தக் கோவில் பிரமிப்பூட்டுகிறது.

அங்கோர் வாட் கோவில் எப்படி கட்டப்பட்டது என்பதற்கான பழங்கால ஆவணம் ஏதும் கிடைக்காத நிலையில், அதற்கான விளக்கத்தைத் தேடி பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

ஆனால் விடையைத் தான் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எகிப்து நாட்டில் இருக்கும் மிகப்பெரிய பிரமிடு கட்டுவதற்கு, ஒவ்வொன்றும் 1.5 டன் முதல் 2 டன் எடை கொண்ட 5 லட்சத்து 712 கற்கள் பயன்படுத்தப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அங்கோர் வாட் கோவில், அதே எடை கொண்ட, ஏறத்தாழ 10 லட்சம் கற்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்ற ஒரு தகவலே அந்த கோவிலின் பிரமாண்டத்திற்கு சாட்சி.

கம்போடியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சியாம் ரீப் நகருக்கு வடக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் அங்கோர் வாட் கோவில் அமைந்து இருக்கிறது.

இதன் சுற்றுவட்டாரங்களில் கற்களை வெட்டி எடுப்பதற்கு மலை ஏதும் இல்லை. அங்கோர் வாட் கோவிலில் இருந்து வட கிழக்கே 45 கிலோ மீட்டர் தூரத்தில் ‘புனோம் குலேன்’ என்ற மலை இருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘சேன்ட் ஸ்டோன்’ எனப்படும் மணல் பாறை களைக் கொண்ட இந்த மலையில் இருந்து, பாறைகளை வெட்டி எடுத்து வந்து அங்கோர் வாட் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது என்பது ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.

அந்த மலையில் கற்களை எடுப்பதற்காக பெரிய அளவில் குவாரிகள் அமைக்கப்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்திர வசதி ஏதும் இல்லாமல் அந்த மலையில், மிகப்பெரிய அளவிலான பாறைகள் எவ்வாறு வெட்டி எடுக்கப்பட்டன?

தலா 2 டன் எடை கொண்ட லட்சக்கணக்கான பாறைகளை, 45 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கொண்டு வந்தது எப்படி?

அந்தப் பாறைகளில் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்து, அழகிய கோவிலாக உருவாக்கிய சாதனைக்கு அடிப்படை என்ன?

கோவில் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கற்களை இடம்பெயர்த்து எடுத்துச்செல்ல எத்தனை யானைகள் பயன்படுத்தப்பட்டன?

இது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடை காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்கோர் வாட் கோவிலைச் சுற்றி 5½ கிலோ மீட்டர் நீள் சதுரத்தில், 656 அடி அகலத்தில், 13 அடி ஆழத்தில் மிகப்பெரிய அகழி அமைத்து இருக்கிறார்கள்.

ஏராளமான அளவிலான மண்ணைத் தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி அந்த அகழி அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஒரு வேலைக்கே பல லட்சம் ஆட்கள் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

கம்போடியாவில் கோவில்கள் கட்டும் வழக்கம் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொடங்கியது.

தங்கள் வீடுகள் உள்பட அனைத்து கட்டுமானப் பணிக்கும் மரங்களையே பயன்படுத்திய கம்போடியர்கள், முதல் முறையாக செங்கல்களைக் கொண்டு கோவில்களைக் கட்டினார்கள்.

அப்போது தமிழகத்திலும் கோவில்கள் செங்கல் கட்டிடங்களாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கம்போடியர்கள் உபயோகித்த செங்கல் அளவு 32 செ.மீ. நீளமாகவும், 9 செ.மீ. அகலமாகவும் இருந்தன.

இப்போது அனைத்து இடங்களிலும் புழக்கத்தில் இருக்கும் செங்கல் அளவை விட இவை ஒன்றரை மடங்கு பெரியது ஆகும்.

இதில் மேலும் ஒரு வியப்பான தகவல் என்ன என்றால், சமீபத்தில் மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முந்திய கட்டிடங்களின் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கட்டிடங்களைக் கட்டுவதற்கு எவ்வளவு பெரிய அளவிலான செங்கல் பயன்படுத்தப்பட்டதோ, அதே அளவிலான செங்கல் கம்போடியாவிலும் கோவில்கள் கட்ட பயன்பட்டு இருக்கின்றன என்பது தான்.

செங்கல்லால் கோவில் கட்டும்போது, அந்தக் கற்களின் இணைப்புக்கு சாந்து போல ஒரு கலவையை கம்போடியர்கள் உபயோகித்து இருக்கிறார்கள். இந்தக் கலவை, சில தாவரங்களை அரைத்து அதன் மூலம் தயாரானவை ஆகும்.

ஆனால் எந்த தாவரங்களைக் கொண்டு இந்தக் கலவையை அவர்கள் தயாரித்தார்கள் என்பது இன்னும் ஆய்வில் உள்ளது.

இந்தக் கலவையை அவர்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். செங்கற்கள் இணைக்கப்பட்ட இடமே தெரியாத அளவு அந்த சுவர்கள், ஒரே கல்லால் ஆனது போல மிக அற்புதமாகக் காட்சி அளிக்கின்றன.

அவ்வாறு கட்டப்பட்ட செங்கல் கட்டிடத்தின் மீது, கருங்கற்களில் செய்யப்படுவது போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகளும் செய்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே கம்போடியர்கள் கற்களால் கோவில்களைக் கட்டத் தொடங்கினார்கள்.

நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கப்படும் ‘லேட்டரைட்’ எனப்படும் ஒருவகையான களிமண் இரும்பு சக்தி கொண்டது.

தோண்டி எடுத்த உடனேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். அல்லது அவை கெட்டிப்பட்டு பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

கோவில்கள் கட்டும் பணிக்கும், வாசலின் மேல் பகுதியில் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடுகளுக்கும் இந்தக் களிமண் கணிசமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கம்போடியாவில் எரிமலைக் கற்களும் கிடைக்கின்றன. இவை, கரடு முரடானவை. வழுவழுப்பு தன்மை அற்றவை. இவற்றை பயன்படுத்தி சிற்பங்கள் செய்வது இயலாத காரியம். எனவே எரிமலைக் கற்கள், கோவில்களின் சுற்றுப்புற சுவர்களை கட்டவும், படிக்கட்டுகள் கட்டுவதற்கும் பயன்பட்டன.

ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பெரும்பாலும் மணல் கற்களே கோவில் கட்டுவதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.

இதே கால கட்டத்தில், அதாவது கி.பி.685-ம் ஆண்டில் காஞ்சி புரத்தில் பல்லவ மன்னர் இரண்டாம் நரசிம்ம வர்மனால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோவில், முழுக்க முழுக்க மணல் கற்களால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்போடியாவில் அங்கோர் வாட் உள்பட பல கோவில்கள் இதே பாணியில், மணல் கற்களால் கட்டப்பட்டு இருக்கின்றன என்பது அங்கு நிலவிய தமிழகத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது.

அங்கோர் வாட் கோவிலைக் கட்டுவதற்காக 45 கிலோ மீட்டர் தூர மலையில் இருந்து மணல் பாறைகளைக் கொண்டு வரும் பணி, இரண்டு விதமான முறைகள் மூலம் கையாளப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

புனோம் குலேன் மலையில் வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளின் அடியில் உருட்டுக் கட்டைகளை வைத்து அவற்றை தரை வழியாக இழுத்து வந்து இருக்கலாம் அல்லது, மூங்கில்களால் கட்டப்பட்ட தெப்பத்தில் வைத்து, அவற்றை டோன்லே சாப் நதி வழியாகக் கொண்டு வந்து இருக்கலாம் என்று சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அதாவது 52 கிலோ மீட்டர் தூரம் நதியில் பயணம் செய்து பாறைகள் கொண்டுவரப்பட்டு இருக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வளவு அதிக தூரத்துக்குப் பதிலாக ஏதாவது குறுகிய பாதையை கம்போடியர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று கருதி, அந்தப் பாதை எங்கே என்று அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது, குலேன் மலைப்பகுதியில் இருந்து மிகப்பெரிய கால்வாய் வெட்டி அந்தக் கால்வாய் வழியாக பாறைகள் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடித்தனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு அமைக்கப்பட்ட கால்வாயின் வழித்தடத்தையும் அவர்கள் அடையாளம் கண்டனர்.

அந்தக் கால்வாய் இருந்த இடம் இப்போது தூர்ந்து போய் விட்டது என்றாலும், கால்வாய் அமைக்கப்பட்ட இடத்தை அவர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தக் கால்வாயின் வழித்தடம் 40 கிலோ மீட்டர்கள் தான். எனவே, குறைந்த தூரம் கொண்ட இந்தக்கால்வாய் வழியாகவே பாறைகள் கொண்டுவரப்பட்டு இருக்கும் என்பது அவர்களது முடிவு.

அங்கோர் வாட் உள்பட அனைத்துக் கோவில்களையும் கட்டுவதற்குப் பயன்படுத்திய பாறைகளில் ஆங்காங்கே ஒரு அங்குல அகலத்தில், ஒரு அங்குல ஆழத்தில் துளைகள் போடப்பட்டு இருக்கின்றன.

இந்த துளைகள் மூலம் இரும்பு கம்பிகள் அல்லது மூங்கில் களைச் சொருகி, அவற்றைக் கொண்டு பாறைகளை விரும்பிய இடத்திற்கு நகர்த்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

கோவில் கட்டுவதற்கு மணல் பாறை அல்லது களிமண் என்று எதைப் பயன்படுத்தினாலும் கட்டுமானப் பணிக்கு சாந்துப் பூச்சு என்பதே எந்த இடத்திலும் காணப்படவில்லை.

இணைப்புக்கு எதையும் பயன்படுத்தாமல், கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி பிரமாண்ட கோபுரங்களையும், அழகிய வேலைப்பாடுமிக்க வளைவுகளையும் கட்டி இருக்கும் கம்போடியர்களின் அபாரமான திறமை இன்றளவும் அனைவராலும் வியந்து போற்றப்படுகிறது.

அதே போல எந்த கோவிலுக்கும் ஆழமான அஸ்திவாரம் அமைக்கப்படவே இல்லை.

மணலும் களிமண்ணும் கலந்த உறுதியான சமதளத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கற்களைப் பரப்பி, அதன் மீது லேட்டரைட் எனப்படும் களிமண்ணை இரண்டு அடுக்குகளாக உருவாக்கி அதன் மீதே கோவில்களைக் கட்டி இருக்கிறார்கள்.

கம்போடியர்களின் இந்தக் கோவில் கட்டும் திறனுக்கு அடிப்படை ஆதாரம் தமிழர்களே என்று கூறப்பட்டாலும், கம்போடியர்கள் தங்களின் தனித்திறமையை பல இடங்களில் வெளிப்படுத்தி இருப்பதைக் காணமுடிகிறது.

அவர்கள் இந்த அதிசய கோவில்களை எல்லாம் எப்படிக் கட்டினார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே கிடைத்து இருக்கிறது.

அங்கோர் தாம் என்ற வளாகத்தில், ஏழாம் ஜெய வர்மன் என்ற மன்னர் கட்டிய பெயோன் என்ற அதி அற்புதமான கோவிலிலும், அங்கோர் வாட் கோவிலில் இருப்பது போன்ற புடைப்புச் சிற்பங்கள், நீண்ட சுவரில் காணப்படுகின்றன.

அந்த சிற்பங்களில் ஒன்று, கம்போடிய மக்களின் அன்றாட வாழ்வை அழகாகச் சித்தரிக்கிறது.

பெயோன் கோவில் உள்பகுதி மாடத்தின் மேற்கு சுவர், தென் பகுதியில் உள்ள ஒரு சிற்பத்தில், கோவில் கட்டுவதற்காக பெரிய பாறைகள் கொண்டுவரப்பட்டு அவை பளபளப்பாக ஆக்கப்படும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.

இந்த சிற்பத்தின் மூலம் தான் பாறைகள் எவ்வாறு சீர்படுத்தப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இது தவிர கோவில்கள் கட்டுவதற்கு கம்போடிய மன்னர்கள் வேறு என்னென்ன யுக்திகளைக் கையாண்டார்கள்? அவற்றின் மூலஆதாரம் எது என்பதற்கு தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

அங்கோர் வாட் கோவில், 3 லட்சம் ஆட்களையும் 6 ஆயிரம் யானைகளையும் கொண்டு 30 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

நவீன வசதிகளைக் கொண்டு இது போன்ற ஒரு கோவிலை இப்போது கட்டுவது என்றால் 300 ஆண்டுகள் ஆகிவிடும் என்பது பலரது கணக்கு.

எந்திரங்கள் இல்லாமல், குறுகிய காலத்தில் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டது அபாரமான சாதனை என்பதாலேயே, அங்கோர் வாட் கோவிலைக் காண உலகம் முழுவதும் இருந்து ஆர்வலர்கள் படையெடுக்கிறார்கள்.

கம்போடியாவில் இத்தகைய கோவில்களைக் கட்டிய ரகசியங்கள் முழுமையாக விடுபடவில்லை என்றாலும், அந்தக் கோவில்களில் உள்ள இறைவனை விட, நாட்டை ஆட்சி செய்த மன்னரையே கடவுளாக மக்கள் வழிபட்டனர் என்பதையும், இன்று வரை அந்தப் பழக்கம் நீடித்து வரும் அதிசயம் என்ன என்பதையும் அடுத்துப் பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)


Next Story