அங்கோர் வாட் கோவில் யாருக்குச் சொந்தம்? நடிகை வெளியிட்ட கருத்தால் கலவரம் - போர் அபாயம்


தாய்லாந்து நடிகை கோப்
x
தாய்லாந்து நடிகை கோப்
தினத்தந்தி 21 July 2019 6:14 AM GMT (Updated: 21 July 2019 6:14 AM GMT)

கம்போடியாவுக்கும், பக்கத்து நாடான சயாம் எனப்படும் தாய்லாந்துக்கும் தீராப்பகை உண்டு.

கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம், தாய்லாந்து நாட்டின் பிரபல டெலிவிஷன் நடிகை, ‘கோப்’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுவானந்த் கொங்யிங் என்பவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அவரிடம், “நீங்கள் உலகிலேயே அதிகமாக வெறுப்பது எதை?” என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “நான் கம்போடியர்களை அதிகமாக வெறுக்கிறேன். ஏனென்றால் அழகிய அங்கோர் வாட் கோவிலை அவர்கள் எங்களிடம் இருந்து திருடிக்கொண்டு விட்டார்கள். மறு ஜென்மம் என்பது எனக்கு உண்டு என்றால், நான் கம்போடியராக பிறப்பதைவிட ஒரு நாயாகப் பிறக்கவே விரும்புவேன்” என்று கூறினார்.

பத்திரிகைகளிலும் டெலிவிஷனிலும் இந்த பேட்டி அதிகமாகப் பகிரப்பட்டதும், கம்போடியர்கள் கொதித்து எழுந்தார்கள்.

கம்போடியாவில் இருந்த தாய்லாந்து தூதரகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அங்கே இருந்த தூதர், மாடியில் இருந்து குதித்து படகு மூலம் உயிர் தப்பி ஓடினார்.

தாய்லாந்து நாட்டினருக்குச் சொந்தமான அத்தனை ஓட்டல்களும், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. தாய்லாந்தில் இருந்து கம்போடியா செல்லும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கலவரம் உச்ச நிலையை அடைந்ததால், அந்த நாட்டின்மீது போர் தொடுக்க தாய்லாந்து தனது படைகளை தயார்படுத்தியது.

பின்னர் அந்த நடிகை தான் அவ்வாறு கூறவில்லை என்றும், அவ்வாறு வெளியான கருத்துக்காக வருந்துவதாகவும் கூறிய பிறகே கலவரம் ஓய்ந்தது.

இப்போதும் கூட தாய்லாந்து நாட்டினர் பலர், அங்கோர் வாட் கோவிலுக்குச் சொந்தம் கொண்டாடுவதை இணையதளங்களில் காண முடியும்.


Next Story