சிறப்புக் கட்டுரைகள்

நதாஷா பெண்களின் நாயகி - பாலியல் வன்முறையில் இருந்து மீண்டு சாதனை + "||" + Natasha is the heroine of women's recovery from sexual violence

நதாஷா பெண்களின் நாயகி - பாலியல் வன்முறையில் இருந்து மீண்டு சாதனை

நதாஷா பெண்களின் நாயகி - பாலியல் வன்முறையில் இருந்து மீண்டு சாதனை
வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் ஏற்பட்டாலும் அத்தனையையும் கடந்து சாதனை படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு, நதாஷா நோயல்.
இவரது வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது, அத்தனை வேதனைகள்.. விம்மல்கள். மூன்று வயதில் இவரது அம்மா இறந்திருக்கிறார். வீட்டில் வேலைபார்த்தவனால் ஏழு வயதில் இருந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறார்.


பதினைந்து வயதுவரை உறவினர்களே தொடர்ந்து இரையாக்கி யிருக்கிறார்கள். ஆனால் அத்தனை கொடுமைகளிலும் தளர்ந்துபோகாமல் தனிஆளாக நின்று போராடி ஜெயித்து, சாதனை நாயகியாக உருவெடுத்திருக்கிறார், நதாஷா.

இப்போது இவர் தன்னம்பிக்கை பேச்சாளர், யோகா பயிற்சியாளர், சமூக வலைத்தளங்களில் மக்களுக்கு பலனுள்ள பாலியல் விழிப்புணர்வு விஷயங்களை அளிப்பவர் என்பன போன்ற பன்முக அடையாளங்களோடு ஜொலிக்கிறார்.

“எனக்கு கொடுமை விளைவித்தவர்கள் யாருக்கு எதிராகவும் நான் புகார் கொடுத்ததில்லை. சட்டப்படி ஜெயிப்பதைவிட, வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி ஜெயிப்பதே சிறந்தது என்று நான் கருதினேன். மூன்று வயதில் என் கண்முன்னே அம்மா மாண்டார். ஏழு வயதில் இருந்து என் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்தது..” என்கிறார்.

அப்படிப்பட்டவர் இப்போது மும்பையில் குறிப்பிடத்தக்க ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணமாக இருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் அவரது அத்தை, இன்னொருவர் அவரது கணவர். அவர்கள் இருவரையும் நதாஷா அம்மா, அப்பா என்று அழைக் கிறார்.

“அம்மா என்று சொல்லும் எனது அத்தை, எனது அப்பாவின் சகோதரி. அவர்தான் எனது வழிகாட்டி. வயது 69 என்றாலும் இப்போதும் அதிகாலையில் எழுந்துவிடுவார். மூன்று, நான்கு பிரிவுகளாக மாணவர்களை பிரித்து அவர்களுக்கு டியூஷன் நடத்துவார். அவரிடமிருந்துதான் நான் கடுமையான உழைப்பையும், நேர மேலாண்மையையும் கற்றுக்கொண்டேன்.

நான் சிறுவயதிலேயே நடன கலைஞர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த நடனம்தான் சோகத்தில் இருந்து என்னை விடுவித்து இயல்பான வாழ்க்கைக்கு கொண்டுவந்தது. ஆனால் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் மூட்டில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதனால் ஒன்றரை வருடங்களாக ஓய்வில் இருந்தேன். நடனம் ஆட முடியாத அந்த நாட்கள் எனக்கு நரகம்போல் அமைந்துவிட்டது.

அப்போது ஒருநாள் சமூகவலைத்தளங்களில் சில பெண்கள் யோகாசனம் செய்த படங்களையும், அவர்களது வீடியோக்களையும் பார்த்தேன். அது எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. அப்போது என் உடல் குண்டாகியிருந்தது. உடல் எடையை குறைக்க யோகாசனம் செய்யத் தொடங்கினேன். பின்பு ஒருவரிடம் பயிற்சி பெற்றேன். அப்போதுதான் உடலுக்காக நான் செய்த யோகாசனங்கள் என் மனதையும் சரி செய்ததை என்னால் உணர முடிந்தது.

எனது மனதுக்குள் கிடந்து அவ்வப்போது என்னை அச்சுறுத்திக்கொண்டிருந்த பயங்களை விரட்ட யோகாவும், தியானமும் உதவியது. முதலில் நான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன். அப்போது ஒரு சில நிமிடங்கள்கூட மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய முடியாத அளவுக்கு எனக்கு மனச் சிதறல் ஏற்பட்டிருந்தது. இப்போது பல மணி நேரம் தொடர்ச்சியாக என்னால் தியானம் செய்யமுடியும்” என்று கூறும் நதாஷா, இத்தகைய பயிற்சிகளில் இறங்கிய பின்பு ‘ஜங்க் புட்’ சாப்பிடுவதை தான் நிறுத்திவிட்டதாகவும், வீட்டில் சமைத்த உணவையும் அளவோடு மட்டுமே சாப்பிடுவதாகவும் சொல்கிறார்.

“பொதுவாக நான் இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி சாப்பிடுவேன். நன்றாக பசித்தால் ஐந்து சாப்பிடுவேன். முன்பு நான் வித்தியாசமான உணவு முறை ஒன்றை கடைப்பிடித்துவந்தேன். வாரத்தில் ஆறு நாட்கள் ‘டயட்டில்’ இருந்துவிட்டு ஏழாவது நாள் கண்டபடி ஜங்க்புட் சாப்பிடும் வழக்கம் இருந்தது. அது நமது உடலுக்கு நாமே செய்யும் கெடுதல் என்பதை உணர்ந்த பின்பு அந்த பழக்கத்தை கைவிட்டுவிட்டேன்.

நாம் உண்ணும் உணவு நாம் பிறந்த ஊரை சார்ந்துதான் அமைகிறது. நான் கேரளாவில் பிறந்தேன். அதனால் சாதம், மீன், காய்கறி, கப்பைக்கிழங்கு, இறைச்சி போன்றவைகளை சாப்பிடுவேன். எனக்கு சிறுவயதில் டிஸ்லெக்சியா என்ற கல்வியில் கவனம் செலுத்த முடியாத பாதிப்பு இருந்தது. ஆனால் அதை நான் ஒரு குறைபாடாக கருதவில்லை. பி.ஏ. ஆங்கிலம் படித்தேன். யோகா, தியானத்தில் நான் எவ்வளவோ தூரம் சென்றுவிட்டேன். அதை எல்லாம் நான் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கிறேன்.

போட்டோ எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் சற்று தடு மாறினாலும் இப்போது சின்னச்சின்ன சலனங்களையும் படம்பிடித்துவிட என்னால் முடியும். எனக்கு இருக்கும் சமூக அக்கறையை வெளிப் படுத்தும் விதத்தில் உடலைவைத்து கேலி செய்வது, பாலியல் வன்முறை செய்வது போன்றவைகளுக்கு எதிரான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறேன். அதற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் உருவாகின்றன. சிலர் பாராட்டுவார்கள். சிலர் குறைசொல்லி விமர்சிப்பார்கள். அவர்களுக்கு இதில் அனுபவம் இல்லை. அவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கவும் இல்லை. ஆனால் நான் பாதிக்கப்பட்டவள். அந்த வலியை பாதிக்கப்பட்ட என்னை போன்றவர்களால்தான் உணரமுடியும்.

‘சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களுக்கு பாலியல் வன்முறை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று சிலர் சொல்கிறார்கள். இப்போதே சொல்லிக்கொடுத்தால்தான் அவர்களால் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். சிறுமிகளாக இருக்கும்போது உருவாகும் பாலியல் வன்முறை காயங்கள் ஆறாத வடுக்களை உருவாக்கிவிடும். தூக்கமில்லாத ராத்திரிகளையும், நிறுத்த முடியாத அளவுக்கு கண்ணீரையும் அது உருவாக்கிவிடும். தன்மீதே தனக்கு நம்பிக்கை இல்லாமல், உலகத்தையே அவர்கள் பயத்தோடுதான் பார்ப்பார்கள். இறக்கும் வரை அந்த பயம் அவர்களைவிட்டு மாறாத நிலை உருவாகிவிடும்.

சில நேரங்களில் நான் மார்பகங்களை பற்றி பேசுவதை பெண்களே ரசிப்பதில்லை. ஆனால் அந்தரங்க சுத்தம் பற்றி நான் பேசும்போது அதை கூர்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள். அதை பற்றி விளக்கமாக என்னிடம் கேட்கவும் செய்கிறார்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் இப்போது மனந்திறந்து பாலியல் விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுகிறார்கள்.

என் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த அனுபவங்கள் நான் வளருவதற்கு உதவியதாக நினைத்துக்கொள்கிறேன். நமது உடலையும், மனதையும் நாம் நேசிக்க கற்றுக்கொள்ளவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து கண்ணாடி முன்பு நின்று கொண்டு நமது உடலை பார்த்து, ‘ஐ லவ் யூ’ சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. மோசமான சம்பவம் ஒன்று நடந்துவிட்டால் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு நம்மை பார்த்து, ‘நீ நலமாக இருக்கிறாய். வாழ்க்கை உன் கையைவிட்டு போகாது’ என்று சொல்லும் பக்குவத்தையாவது பெற்றிருக்கவேண்டும்’ என்கிறார்.