கனவு நாயகி : பட்டுக்கோட்டை பிரபாகர்


கனவு நாயகி : பட்டுக்கோட்டை பிரபாகர்
x
தினத்தந்தி 21 July 2019 7:32 AM GMT (Updated: 21 July 2019 7:32 AM GMT)

பிரபல நடிகை அபிநயா தான் காதலித்த விக்டரிடம் 10 கோடி ரூபாய் வாங்கி படத்தயாரிப்பு வேலையில் ஈடுபடுகிறாள்.

முன்கதை சுருக்கம்:

பிரபல நடிகை அபிநயா தான் காதலித்த விக்டரிடம் 10 கோடி ரூபாய் வாங்கி படத்தயாரிப்பு வேலையில் ஈடுபடுகிறாள். அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாக, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இதற்கிடையே அமுதாவை திருமணம் செய்யவிருக்கும் கார்த்திகேயன், அவளது தந்தை சுந்தரமூர்த்தி சிறையில் இருப்பதை அறிந்து திருமணத்தை நிறுத்தி விடுகிறான்.

சுந்தரமூர்த்திக்கு ராஜி என்ற பெண்ணுடன் ரகசிய தொடர்பு ஏற்படுகிறது. அவளுடைய மகள்தான் அபிநயா என்பது தெரியவருகிறது. அபிநயாவின் தந்தை குடித்துவிட்டு வந்து ராஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தபோது அபிநயா அதை பிடுங்கி அவரை குத்தி கொலைசெய்து விடுகிறாள். பின்பு சுந்தரமூர்த்தியை சிக்கவைத்துவிடு கிறாள். அவர் கத்தியை மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அவரது மகன் ஆனந்தன் சென்று கத்தியை எடுக்கிறான். பிறகு அந்த கத்தியுடன் அபிநயாவை நேரில் சந்தித்து போலீசில் சரணடையுமாறு மிரட்டுகிறான். இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க அபிநயா நிருபர் ராஜராஜனை நாடுகிறாள். அவர் ஆனந்தனை சந்தித்து பேசுகிறார். அவர் அபிநயாவிடம் பணம் கேட்டு மிரட்டுமாறு கூறுகிறார்.

‘‘நான் சொன்ன தொகையை ஏற்பாடு செய்ய முடிஞ்சா பிரச்சினை சுலபமாத் தீரும். இல்லைன்னா சிக்கல்தான்!’’ என்றான் போனில் ஆனந்தன்.

எதிர்முனையில் அபிநயா செயினைக் கடித்தபடி பதில் சொல்ல யோசித்தாள்.

‘‘என்ன சொல்றே?’’

‘‘என்னமோ நீதி, நியாயம்னு கத்தினே.. கடைசில நீயும் பணத்துக்குதானே வந்து நிக்கிறே!’’

‘‘இது நியாயமா எனக்குச் சேரவேண்டிய பணம்தான் அபிநயா’’

‘‘என்ன உளர்றே?’’

‘‘நல்லா யோசிச்சுப் பாரு. எங்கப்பா நடந்த உண்மையை போலீஸ்ல சொல்லிட்டு உன் கைரேகை படிஞ்ச கத்தியை ஒப்படைச்சிருந்தா உள்ளேப் போயிருக்க வேண்டியவ நீ! அப்படி நடந்திருந்தா இப்படி பெரிய நடிகையாகியிருப்பியா, இல்லை இவ்வளவு பணம்தான் சம்பாரிச்சிருப்பியா? இப்ப சொல்லு.. தர்மரீதியா உன்சொத்துல எனக்கும் பங்கு இருக்கா இல்லையா?’’

‘‘இது நீ பேசலை. யாரோ உன்னைப் பேச வைக்கிறாங்க. இருபத்தஞ்சி கோடி பெரிய தொகை ஆனந்தன்’’

‘‘நீ செஞ்சதும் பெரிய குற்றம் அபிநயா’’

‘‘நான் மறுத்தா?’’

‘‘ஏற்கனவே சொன்னதுதான். நான் கோர்ட்டுக்குப் போவேன். அந்தக் கொலை வழக்கை மறுபடி விசாரிக்கணும்னு மனு போடுவேன். ஆதாரத்தை ஒப்படைப்பேன். அப்பறம் சட்டம் தன்னோடகடமையைச் செய்யும்’’

நெற்றியில் துளிர்த்த வியர்வையை கர்ச்சீப்பால் ஒற்றிக்கொண்டாள் அபிநயா.

‘‘சரி.. பத்து கோடி! அதான் நியாயம். அதுக்கு மேல கேக்காத. என்ன சொல்றே?’’

‘‘பொருள் என்னது அபிநயா. அதுக்கு விலையும் நான்தான் வைக்கணும். இருபத்தஞ்சி உனக்கு ஒண்ணும் பெரிய தொகை இல்லை.’’

‘‘வீடு பூரா ரெடியா கட்டுக்கட்டா அடுக்கி வெச்சிருப்பேன்னு நினைக்கிறீயா?’’

‘‘உங்கிட்ட உள்ள பணம் பணமாவே இருக்காது. வீடா இருக்கலாம். நிலமா இருக்கலாம். தங்கமா இருக்கலாம். வைரமா இருக்கலாம். ஷேர்ஸா இருக்கலாம். எப்படி இருந்தாலும் பணமா மாத்த முடியுமே. உனக்கு ஒரு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ளே ரெடி பண்ணிடு. இல்லைன்னா நான் சொன்னதுதான் நடக்கும். நீ கைதாகி ஜெயிலுக்குப் போறதை ஒளிபரப்ப அத்தனை மீடியா கேமிராவும் கழுகு மாதிரி காத்திருக்கும். அதை மறந்துடாத. ஒருவாரம் கழிச்சிப் பேசறேன்’’ என்று போனை அணைத்தான் ஆனந்தன்.

‘‘கை கொடுங்க பிரதர். பிறவி பிளாக் மெயிலர் மாதிரி பிச்சி உதறிட்டீங்க!’’

‘‘அவ பணம் கொடுப்பான்னு நம்பறீங்களா சார்?’’

‘‘அவளுக்கு வேற வழி என்ன இருக்குன்னு சொல்லுங்க. சமீபத்துல இந்தில நடிச்ச படம் சூப்பர் ஹிட். அடுத்து வரிசையா மூணு இந்தி படம் ஒப்பந்தம் போடப் போறா. அதுக்கு வாங்கற அட்வான்ஸ் பணத்தை வெச்சே செட்டில் செஞ்சிட முடியும்.’’

பில்லுக்கு பணம் கொடுக்க முன்வந்த ஆனந்தனைத் தடுத்து ராஜராஜனே பணம் கொடுத்தார்.

இருவரும் வெளியே நடந்தார்கள்.

***

ராஜராஜன் தன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர் மனைவி நர்மதா தொலைக்காட்சியில் தொடர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘இதுல பாருங்க.. நேத்து வரைக்கும் கடன்காரியா இருந்தவ இப்போ ஊர்லயே பெரிய பணக்காரியாகிட்டான்னு காட்றாங்க. நம்பற மாதிரியா இருக்கு’’

‘‘நர்மதா.. சில சமயம் நம்ப முடியாததெல்லாம் நடக்கும். வாழ்க்கை ஒரு புதிர். இன்னிக்கு வரைக்கும் நாம் வாடகை வீட்ல இருக்கோம். கூடிய சீக்கிரம் சொந்த வீடு வாங்கப் போறோம். கார் வாங்கப் போறோம். இதை நம்புவியா?’’

‘‘நீங்க கனவு கண்டதைச் சொல்றீங்களா?’’

‘‘போடி அசடு. வாழ்க்கையில நேர்மையைத் தூக்கி ஓரமா வெச்சாத்தான் முன்னேற முடியும்னு எனக்குப் பாடம் கத்துக் குடுத்துட்டா அந்த அபிநயா. டி.வி.யை அணைச்சிட்டு வா.. விவரமா சொல்றேன்’’

ராஜராஜன் நாற்காலியில் அமர.. நர்மதா டி.வி.யை அணைத்துவிட்டு அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.

‘‘நான் என்னடி பெருசா தப்பு செஞ்சேன்? அபிநயா ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமா வாழ்ந்துட்டிருந்த விக்டரை தன் வலையில விழ வெச்சா. அவனோட கூத்தடிச்சா. அதெல்லாம் தப்பில்லை. அந்த போட்டோவை நான் அவ போன்லேர்ந்து சுட்டதுதான் பெரிய தப்பா? அதுக்கு என் வயசையும் பார்க்காம.. அவ முன்னேற்றத்துக்கு நான் எத்தனை உதவியா இருந்தேன்றதையும் நினைச்சிப் பார்க்காம ஆள் வெச்சி அடிச்சா. படாத இடத்துல அடிபட்டு நான் செத்துப் போயிருந்தா? இப்ப அவளுக்கு நான் உதவி செய்யணுமாம்..’’

‘‘என்ன உதவிங்க?’’

ராஜராஜன் அபிநயா தன்னை அழைத்துப் பேசியதையும், தான் ஆனந்தனைச் சந்தித்துப் பேசியதையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க.. நர்மதா ஆச்சரியப்பட்டுப் போனாள்.

‘‘உங்க முதல் மனைவி விபத்துல இறந்த வழக்கை எல்லாம் விசாரிச்சி வெச்சிக்கிட்டுப் பேசறாளே! எவ்ளோ பெரிய சதிகாரி பாருங்க’’

‘‘அவளுக்கு இவ்வளவு தூரம் சதி பண்ணத் தெரியும்னா எனக்கு அதுக்கு மேல சதி பண்ணத் தெரியும் நர்மதா. அதனாலதான் ஆனந்தனை பணம் கேக்கச் சொல்லித் தூண்டிவிட்டேன்’’

‘‘எனக்கு ஒண்ணு புரியலை. ஆனந்தனோ அபிநயா ஜெயிலுக்குப் போகணும்னு பிடிவாதமா இருக்கான். அதே சமயம் உங்க பேச்சைக் கேட்டு பணம் வாங்கிக்க சம்மதிச்சி மிரட்டிருக்கான். அதெப்படி ரெண்டும் சாத்தியம்?’’

‘‘அதுக்குதான் இன்னொரு யோசனை சொல்லிருக்கேன்’’ என்ற ராஜராஜன் அந்த யோசனையை விவரித்ததும், ‘‘உங்களுக்கு கிரிமினல் மூளைங்க’’ என்று சிரித்தாள் நர்மதா.

‘‘அபிநயா ஒரு ஜெகஜ்ஜால கிரிமினல். அவகிட்ட கிரிமினல் மூளையோடத்தானே அப்ரோச் செய்யணும்?’’

‘‘இதுல உங்களுக்கு என்ன லாபம்?’’

‘‘அபிநயா எவ்வளவு கொடுத்தாலும் அதுல பத்து பர்சண்ட் பேசிருக்கேன். அது தவிர இன்னொரு குறுக்குப் பிளானும் வெச்சிருக்கேன். அதை அப்பறம் சொல்றேன்’’ என்று ராஜராஜன் சொன்னபோது போன் ஒலித்தது.

அபிநயாவின் பெயரைப் பார்த்ததும், ‘‘அவதான். ஸ்பீக்கர்போன்ல போடறேன். குறுக்கப் பேசாம கவனி’’ என்றவர் போனில், ‘‘அபி.. சொல்லும்மா’’ என்று குழைந்தார்.

‘‘என்ன காரியம் செஞ்சிருக்கீங்க ராஜராஜன் சார்?’’ என்று எடுத்ததுமே வெடித்தாள் அபிநயா.

‘‘என்னாச்சி?’’

‘‘அந்த ஆனந்தன் போன் செஞ்சி, ஆதாரத்தை ஒப்படைக்கிறேன், இருபத்தஞ்சி கோடி குடுன்னு கேக்கறான். இது நீங்க சொன்ன யோசனைதானே?’’

‘‘ஆமாம்’’

‘‘நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்? அவன்ட்ட நைசாக பேசி அந்த ஆதாரம் எங்க இருக்குன்னு தெரிஞ்சி அதைத் திருடிக் குடுங்கன்னுதானே சொன்னேன்? நீங்க என்னடான்னா ஆதாரத்துக்கு விலை பேசச் சொல்லிருக்கீங்களே..’’

‘‘அபி.. ஆத்திரப்படாம நிதானமா நான் சொல்றதைக் கேளு. அவன் கோர்ட்டுக்குப் போறதுல தீர்மானமா இருக்கான். அந்தக் கத்தியை அவன் எங்க பத்திரப்படுத்திருக்கான்னு எடுத்த எடுப்புலயே கேட்டுட முடியுமா? விலை பேசுன்னு நான்தான் யோசனை சொன்னேன். உனக்கு என் மேல நம்பிக்கை இருக்குல்ல?’’

‘‘இல்லாமயா அத்தனை பெரிய ரகசியத்தைச் சொல்வேன்?’’

‘‘என் வாழ்க்கைல நடந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்டுதானே சொன்னே? அதை விடு. நம்மைப் பொருத்தவரைக்கும் அந்தக் கத்தி வேணும். இந்த டீலீங்கை நான் இல்லாம அவன் முடிக்க மாட்டான். நீ பணத்தை ரெடி பண்ணு. ஆனா.. பணத்தைக் கொடுக்கற மாதிரி கொடுத்து கத்தியை வாங்கிட்டு பணத்தைக் கொடுக்கப் போறதில்லை. இதான் என் திட்டம்’’

‘‘புரியல’’

‘‘நான் நாளைக்கு நேர்ல வர்றேன். விவரமா சொல்றேன். அப்ப புரியும்’’ போனை வைத்த ராஜராஜன் நர்மதாவைப் பார்த்து சிரித்தார்.

‘‘எனக்கும் புரியலைங்க. நீங்க ஆனந்தனோட ஆளா? இல்லை அபிநயாவோட ஆளா?’’

‘‘ரெண்டும் இல்லை. நான் உன் ஆளு! இவனுக்கும் பெப்பே, அவளுக்கும் பெப்பேன்னு காரியம் சாதிக்கப் போறவன். இது கொஞ்சம் விபரீதமான விளையாட்டுதான். ஆனா இதை சரியா விளையாடினா மொத்தப் பணமும் என் கைக்கு வரும். நான் விளையாடறதுன்னு தீர்மானிச்சுட்டேன்’’ என்றார் ராஜராஜன்.

-தொடரும்

Next Story