‘ஏற்கனவே பார்த்தேன்’ என்ற எண்ணத்திற்கு விஞ்ஞான விளக்கம்


‘ஏற்கனவே பார்த்தேன்’ என்ற எண்ணத்திற்கு விஞ்ஞான விளக்கம்
x
தினத்தந்தி 22 July 2019 10:24 AM GMT (Updated: 22 July 2019 10:24 AM GMT)

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ‘தேஜா வூ’ என்பது நம் மூளையின் நினைவகத்தில் பதிவாகி இருக்கும் நிகழ்வுகள் ஆகும்.

சிலரை பார்க்கும் போது இவரை இதற்கு முன்பு நாம் எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என்று தோன்றும். அது போல சில இடங்களை, பொருட்களை பார்க்கும் போதும் இதே உணர்வு தோன்றுவதுண்டு. மேலும் சில உரையாடல்களை ஏற்கனவே கேட்டது போலவோ அல்லது வேறு ஒருவருடன் பேசியது போலவோ ஒரு உணர்வு நம்முள் தோன்றும்.

இந்த உணர்வு, எண்ணம் நம்மில் பலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். நமக்கே தெரியாத வகையில் ஒரு கடந்த கால அனுபவத்தை மீண்டும் பெறுவது போல தெரியும்.

இந்த திடீர் உணர்வு ஆங்கிலத்தில் ‘தேஜா வூ’ (Deja Vu) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பிரெஞ்சு வார்த்தை. “ஏற்கனவே பார்த்தேன்” என்பது இதன் பொருளாகும்.

மனிதர்களுக்கு எப்போதாவது தான் இந்த உணர்வு தோன்றும் என்றாலும், இது ஒரு அசாதாரண நிகழ்வு அல்ல. மனிதர்களில் 60 முதல் 70 விழுக்காடு வரை இந்த உணர்வை நிச்சயம் தமது வாழ்வின் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் அனுபவித்திருப்பர். குறிப்பாக 15 முதல் 25 வயதில் இந்த நிகழ்வு ஒரு பொதுவான நிகழ்வாகும்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ‘தேஜா வூ’ என்பது நம் மூளையின் நினைவகத்தில் பதிவாகி இருக்கும் நிகழ்வுகள் ஆகும்.  ஆரோக்கியமானவர்களிடமும், தெளிவான மனநிலையும் கொண்டவர்களிடமும் இதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே இதை ஒரு நோய் அறிகுறி என்று கருதமுடியாது.

‘தேஜா வூ’ என்பது நிஜமல்ல நிழல். இந்த உணர்வு ஏன் வருகிறது என்றால், இம்மாதிரி நிகழ்வோ, உரையாடலோ ஏற்கனவே நடந்திருந்து அதை நாம் மறந்திருக்கலாம். ஆனால் நமது மூளை அந்த நிகழ்வை மறக்காமல் பதிவு செய்து வைத்திருக்கும்.

அதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்கும்போது, மூளையில் பதிவாகி உள்ள அந்த எண்ணம் மீண்டும் தோன்றுகிறது. இதை நினைவுகூர்வதால் நடப்பதில்லை. மூளையில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பகுதி அந்தச் சமயத்தில் செயல்படுகிறது. அந்நேரம் மூளையில் மற்ற பகுதிகள் தூண்டப்படுவதில்லை. இதனால் தான் ஒருவருக்கு ‘தேஜா வூ’ நிகழ்வு நடக்கும்போது அவருக்கு அந்த நிகழ்வு முழுமையாக நினைவுக்கு வருவதில்லை.

‘தேஜா வூ’ என்பது ஒரு தெளிவற்ற நினைவு ஆகும். இன்னொரு வகை சாத்தியக்கூறு என்னவென்றால் மூளையில் உள்ள சில பகுதிகளில் அந்நேரத்தில் சிறிய வலிப்புத்தாக்கம் நடைபெறலாம். அந்தப் பகுதிகள் மூளையின் நினைவு உருவாதல் மற்றும் மீட்பு நடவடிக்கை எடுக்கும் பகுதிகளாக இருக்கலாம்.

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் பாட்டியைப் பார்க்கும்போது ஒரு தன்னிச்சையான செயல்பாடு அப்பகுதிகளில் ஏற்பட்டு ஒரு உடனடி உணர்வைத் தருகிறது. ‘தேஜா வூ’ நடக்கும் சமயத்தில் ஒரு நியூரான்கள் சுருக்கமான இடையேயான மின்னியல் பரிமாற்றத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதுதான் அந்த நிகழ்வை முன்பே நடந்த ஒரு மாயையாக நமக்குத் தருகிறது.

இதனால்தான் தற்காலிக மண்டலத்தால் வலிப்பு கொண்டவர்களின் அனுபவங்களில் அந்த வலிப்பு வரும் முன்னர் அவ்வகை நிகழ்வு நடந்ததாக எண்ணுவர். இவ்வகை அசாதாரணமான மின் வெளியேற்றல் மற்றவர்களிடமும் நடக்கலாம்.

குறிப்பாக சிலருக்கு பதின்ம வயது மற்றும் இருபது வயது காலகட்டத்தில் இது நடக்கும். இன்னொரு வகையான கூற்றில், மூளையிலுள்ள அதிக நீளமான மற்றும் மிகக் குறைவான நீளம் உள்ள சுற்றுக்களின் இடையே கோளாறு நிகழ்வதால் இது நடக்கிறது. அதாவது, ஒரு புதிய தகவல், குறைவான சுற்றுப்பாதையில் நேரடியாக சென்று நீண்ட கால நினைவுகளை தூண்டுவதால் இது நிகழ்த்தப்படலாம். இந்நிகழ்வால் சேகரிக்கப்படும் செய்திகள் சாதாரணமாக நடக்கும் செயல்பாட்டில் இருந்து விலகி வேறு வகையில் செயல்படுகிறது. இதனால்தான் நம்மிடையே நாம் கடந்த கால நிகழ்வாக அந்த தற்கால நிகழ்வை உணர்கிறோம்.

மற்றுமொரு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் இடையே ‘தேஜா வூ’ உணர்வைத் தூண்ட ஒருவரின் ஆழ் மனதில் தவறான நினைவை பதிய வைத்தனர். இந்த நிகழ்வை எம்.ஆர்.ஐ. (MRI) ஸ்கேனில் பார்த்தபோது அந்த நினைவுகள் அவரது நினைவகத்தில் ஒரு பகுதியாக இல்லாமல் இருப்பது தெரிந்தது.

ஆனால் ‘தேஜா வூ’ நிலை ஏற்படும்போது மூளையில் முடிவை எடுக்கும் பகுதிகள் ஒளியூட்டம் தந்தன. எனவே ‘தேஜா வூ’ நடைபெறும் போது நாம் நம் நினைவுகளை சல்லடை போட்டு ஏதாவது தவறு உள்ளதா என்று பார்க்கிறோம்.

என்னதான் காரணமாக இருந்தாலும் ‘தேஜா வூ’ என்பது ஒரு சாதாரண நிகழ்வே. அடிக்கடி நிகழ்ந்தாலும், எப்போதாவது நிகழ்ந்தாலும் இதற்காக பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம். எதிர்காலத்தை உணரும் சக்தி நமக்கு வந்துவிட்டது என்றோ, பிசாசு பிடித்து விட்டது என்றோ குழப்ப வேண்டாம். மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இதுவும் கடந்துபோகும்.

முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.

Next Story