சிந்தையை வலுப்படுத்தினால் வாழ்க்கை வசமாகும்


சிந்தையை வலுப்படுத்தினால் வாழ்க்கை வசமாகும்
x
தினத்தந்தி 30 July 2019 7:16 AM GMT (Updated: 30 July 2019 7:16 AM GMT)

பாரத்தை எங்கேயாவது இறக்கி வைத்துவிட்டால் நன்றாயிருக்குமே என்றுதான் எல்லா உள்ளங்களும் ஏங்குகின்றன. வழிபாட்டுத் திருக்கூடங்களுக்கும், புண்ணியத் தலங்களுக்கும் மனிதர்கள் ஓடி ஓடித் திரிவதெல்லாம் அதற்காகத்தான்.

பாறைகள் போல் பலவித பாரங்கள் அவர்களின் மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டு அழுத்துகின்றன. ஒன்றை உருட்டிக் கீழே தள்ளிவிட்டால் இன்னொன்று மேலே ஏறி வருகிறது.

மகளுக்கு வரன் பார்ப்பதைப் பற்றிச் சிந்திக்கிற போது, மகனுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை மனதைப் பிசைகிறது. பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்துவிட்டபின், நகைக்கும், தொகைக்கும் எங்கெல்லாம் அலைய வேண்டுமோ என்னும் அச்சம் சிலருக்கு வந்துவிடுகிறது.

எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் பலருக்குத் தெளிவு கிடையாது. பக்கத்து வீட்டுக்காரன் செய்யும் தொழில் அவனுக்கு லாபகரமாக அமைந்திருக்கலாம். அவனைப் பார்த்து அதே தொழிலைத் தொடங்கிவிட்டு, தொழிலும் புரியாமல் கணக்கு வழக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது. பாரங்களை நாம்தானே நமக்குள் ஏற்படுத்திக்கொள்கின்றோம். ஒரு கிலோ பூவின் கனமும் ஒரு கிலோ இரும்பின் கனமும் ஒன்றுதான். ஒரு மனதில் கணக்கற்ற ஆசைகள் பாரமாகின்றன. மற்றொரு மனதில் தேவையற்ற கவலைகள் பாரமாகின்றன. அவர்கள் தங்கள் பாரங்களைக் குறித்துப் புலம்புவார்களே தவிர, அவற்றை நீக்குவதற்கான வழியை சிந்திப்பதில்லை. அவர்களின் புலம்புதலைக் கேட்பதற்கு ஒரு கும்பல் இருக்கும். அந்தக் கும்பல் அவர்களின் தலையில் மேலும் மேலும் பாரங்களை ஏற்றி வைக்குமே ஒழிய, ஒருபோதும் இறக்கி வைக்காது.

அப்படிப்பட்டவர்களிடம் போய் மனதின் பாரங்களை சொல்லிக் கொண்டிருந்தால் தீங்குதான் அதிகரிக்கும். வேறு எந்த பயனும் விளையாது. அதனால்தான், நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே என்று சொன்னார்கள்.

ஒருநாள் கிணற்றருகே கோபிகை ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். தண்ணீர்க் குடத்தை தன் தலை மீது ஏற்றி வைக்க யாராவது வருவார்களா என்று நெடுநேரம் எதிர்பார்த்துக் காத்து நின்றாள். அப்போது அவ்வழியில் சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்த கோபிகை, தண்ணீர்க் குடத்தை தன் தலைமேல் தூக்கிவைப்பதற்காக அவனைக் கூப்பிட்டாள். ஆனால் கூப்பிட்ட குரல் கேட்காததுபோல் கிருஷ்ணன் போய்க்கொண்டிருந்தான். கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கோபிகைக்குத் தொண்டை வறண்டுவிட்டது. கிருஷ்ணன் திரும்பிக் கூட பார்க்காமல் போய்விட்டான்.

ஒருவழியாக கோபிகை தண்ணீர்க் குடத்தை தலையில் ஏற்றிச் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீட்டை அடைந்தவள் அதிர்ச்சி அடைந்தாள். அங்கே அவளின் வீட்டு வாசலில் ஸ்ரீகிருஷ்ணன் அவளுக்காகக் காத்திருந்தான். கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து தண்ணீர்க் குடத்தை அவள் தலையிலிருந்து கீழே இறக்கிவைத்தான்.

கோபிகை அவனைப் பார்த்து, ‘கிருஷ்ணா, எனக்குப் புரியவில்லை. குடத்தைத் தூக்கித் தலைமேல் ஏற்றி வைப்பதற்கு நான் உன்னை அழைத்தபோது, நீ திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டாய். ஆனால் இப்போது கூப்பிடாமல் வந்து குடத்தை இறக்கி உதவி செய்தாயே, ஏன்?’ என்று கேட்டாள்.

அதற்கு கிருஷ்ணன், ‘நான் பாரத்தை இறக்கி வைப்பவன்; ஏற்றுபவன் அல்ல’ என்று புன்னகையுடன் சொன்னான். அப்படி ஒருவர் பாரத்தை இறக்கிவைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். நம் பாரங்களை இறக்கி வைக்கக்கூடியவர்கள் யாரென்று தெரிந்து நாம் சொல்ல வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் ஓடி ஓடிப்போய் உங்கள் மன பாரங்களைச் சொல்கிறீர்களே. அவர்கள் உங்கள் பாரங்களை இறக்கி வைப்பவர்களாக இருக்கிறார்களா அல்லது உங்களை மேலும் மேலும் குழப்பி உங்கள் தலைமேல் பாரத்தை சுமத்துகிறவர்களாக இருக்கிறார்களா. உங்கள் கஷ்ட நஷ்டங்களும் கண்ணீரும் சிலருக்குப் பொழுதுபோக்குக் கதைகள். அவர்கள் உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நல்லவர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ளலாம் தவறில்லை. ஆனால் முக்கியமான விஷயம், மனதை அழுத்துகின்ற பாரங்கள் ஏற்படுகிறபோது, அவற்றை நீங்களாகவே அப்புறப்படுத்தும் வகையில் உங்கள் சிந்தையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் மீது உங்களைவிட வேறு யாருக்கும் அக்கறை இருந்துவிடப்போவதில்லை. எனவே திடன்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு, வளம், நலம், வெற்றி, மகிழ்ச்சி எல்லாம் உங்கள் கைகளில்தான் இருக்கின்றன.

எதையுமே எளிதாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால் மனதிற்குள் பாரம் ஏற்படுவதில்லை. ஏமாற்றங்கள், தோல்விகள், பிரச்சினைகள் எல்லார் வாழ்விலும் வரத்தான் செய்யும். ஆனால் அவற்றை சவால்களாக எடுத்துக்கொள்ளும்போது மனதில் புது தைரியம் பிறக்கிறது அல்லது அவற்றை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டு, அடுத்தடுத்த காரியங்களில் கவனம் செலுத்தும்போது வாழ்க்கை சுலபமாகிவிடுகிறது.

வருமானம் ஏராளமாய் வருவதனால் மனநிறைவு வந்துவிடாது. புகழ் இருப்பதனால் அமைதியும் ஆனந்தமும் கிடைத்துவிடாது. நல்ல மனம் இருக்க வேண்டும். அந்த மனதில் பாரம் இருக்காது. பரமானந்தம் குடிகொண்டிருக்கும்.

உலகையே நடுங்க வைத்த ஹிட்லர், தன் சாவைக் கண்டு நடு நடுங்கி அடங்கிப்போனாரே. அவரோடு கூட்டுச் சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்தபோது ரஷிய தலை நகரில் முசோலினியின் சடலத்தை தலைகீழாகத் தொங்கவிட்டு, ஒருவாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அல்லவா அந்தப் பிணத்தை அடித்து தங்களின் மனக்குமுறலைத் தீர்த்துக்கொண்டார்கள்.

தீங்கு செய்கின்றவர்கள் வாழும்போது நிம்மதி இல்லாமல் அலைகிறார்கள்; இறந்த பின்னரும் சிறுமைதான் அடைகிறார்கள்.

வாழ்வின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அற்ப ஆசைகளை விட்டுவிட்டு, அற்புதமான ஆசைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெரிய பெரிய காரியங்களைச் செய்ய ஆசைப்பட வேண்டும். மனதில் வீணான கவலைகளும், பாரங்களும் ஏன் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் நிதானமாகச் சிந்தித்தால் உங்களுக்கு உண்மை விளங்கி விடும். சரியான பார்வையைப் பெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். மன பாரம் என்பதே மன பலவீனம்தான். எனவே உங்கள் மனதை திடப்படுத்துங்கள். அதை விட்டு, ஆறுதலைத் தேடி மற்றவர்களிடம் போய் சரணடைந்தால், அவர்கள் உங்கள் வாழ்க்கையை அழித்துவிடக்கூடும். பாரம் மனதை அழுத்துகின்றபோது, அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. பிரச்சினைகளுக்கு மரணம்தான் தீர்வு என்று முடிவுகட்டிவிடக்கூடாது. தவறான இடம்தேடி தவறானவர்களைச் சேர்த்துவிடாதீர்கள். முதலில் உங்களை நம்புங்கள். எந்தச் சூழ்நிலையிலும் துணிந்து நில்லுங்கள். எத்தனை பெரிய பாரம் என்றாலும், அது பனித்துளிபோல் கரைந்துபோய்விடும். மனதைத் திறந்து வையுங்கள். நம்பிக்கை என்னும் காற்று உள்ளே வரட்டும். வாழ்க்கை வளம் பெறட்டும்.

- கவிஞர் தியாரூ, (தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்)

Next Story