வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் இழப்பு; நிப்டி 95 புள்ளிகள் இறங்கியது


வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் இழப்பு; நிப்டி 95 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 30 July 2019 8:18 AM GMT (Updated: 30 July 2019 8:18 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை அன்று பங்கு வியாபாரம் பின்னடைவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 196 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகள் இறங்கியது.

குறியீட்டு எண்கள்

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறை குறியீட்டு எண்களும் இறங்கின. அதில் மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.55 சதவீதம் சரிவடைந்தது. அடுத்து அடிப்படை பொருள்கள் துறை குறியீட்டு எண் 2.80 சதவீதம் இறங்கியது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 7 நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. 23 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இண்டஸ் இந்த் வங்கி, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், உள்ளிட்ட 7 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் டாட்டா மோட்டார், வேதாந்தா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, டாட்டா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், மகிந்திரா அண்டு மகிந்திரா, சன் பார்மா, பவர் கிரிட், எல் அண்டு டி, ஆக்சிஸ் வங்கி உள்பட 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 196.42 புள்ளிகள் சரிவடைந்து 37,686.37 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,043.22 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 37,519.16 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 803 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,662 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 132 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,104 கோடியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அது ரூ.2,169 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 95.10 புள்ளிகள் குறைந்து 11,189.20 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,310.95 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,152.40 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story