மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள்


மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 31 July 2019 5:55 AM GMT (Updated: 31 July 2019 5:55 AM GMT)

மத்தியில் 2-வது முறையாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அரசின் ஆட்சி தனது 50-வது நாளை கடந்த வாரம் பூர்த்தி செய்துள்ளது. எனவே எங்களது சாதனைகளை பட்டியலிடுவதுடன், எதிர்காலத்திற்கான செயல்திட்டங்களையும் வெளியிட இதுவே உரிய தருணமாகும்.

ஏற்கனவே நடைபெற்ற ஆட்சிதான் தற்போது தொடர்வதால், 50 நாள் சாதனைப் பட்டியல் தேவையில்லை என்று சிலர் வாதிடக்கூடும். மோடி அரசின் செயல்பாடுகளுக்கு மக்களவைத் தேர்தலில் மதிப்பிட்ட மக்கள், அந்த பிரம்மாண்ட ஜனநாயக தேர்வில் 100 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களை அளித்துள்ளனர்.

இது தான் மற்ற அரசுகளிலிருந்து மோடி அரசை வேறுபடுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, கடுமையான வேலை வழங்குபவராக திகழ்வதோடு, இந்த அரசு இந்திய குடிமக்களுக்கு பதிலளிக்கக்கூடிய பொறுப்புள்ள அரசாகத் திகழ வேண்டும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை உடையவராக உள்ளார். அத்துடன் இந்த அரசைப் பொறுத்தவரை, தனது முதல் 50 நாள் ஆட்சிக்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான அடித்தளமிடும் காலமாக கருதுகிறது. எனவே இந்த அரசு எதை நோக்கிச் செல்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.

2-வதாக பொறுப்பேற்ற மோடி அரசு “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற தனது லட்சியத்தில், “அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்” என்ற வாசகத்தையும் இணைத்துக்கொண்டு தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது. மோடி அரசின் இலக்குகளை கீழ்காண்பவை மூலம் மதிப்பிடலாம்.

சாலைகள், ரெயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற கட்டுமான திட்டங்களுக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீட்டிற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு வங்கி செயல்பாடுகளை சீரமைப்பது, பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் மீதான பிடியை நெருக்குவது, நொடித்துப் போதல் மற்றும் வங்கி நடைமுறைச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருதல், 50 கோடி தொழிலாளர் வர்க்கத்திற்கு பலனளிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது, நாடு எதிர்நோக்கி வரும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமடையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கும் வேளையில், புதிதாக ஜல்சக்தி அமைச்சகத்தை உருவாக்குதல் மற்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதை உறுதிசெய்வது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

முதல் 50 நாள் ஆட்சிக்காலத்தில், இந்த அரசு 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு தொழில் துறையினருக்கு பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகைகளை வழங்கி உள்ளது. அத்துடன் வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுவதோடு, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் உயர்த்தி உள்ளது. மோடி அரசின் 2-வது ஆட்சி 50 நாட்களை நிறைவு செய்த வேளையில், சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.

முக்கிய சீர்திருத்தங்கள் தொடர்பான முடிவை மேற்கொள்ளும்போது அனைத்து அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவது என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செயல்படும் விதத்திலிருந்து இதனை அறிந்துகொள்ளலாம். நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் மிக அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராஜதந்திர ரீதியாகவும், மோடி அரசு 50 நாள் ஆட்சிக்காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு சக்திகளும் முயற்சித்து வரும் வேளையில், ராஜ்ஜிய முக்கியத்துவம் வாய்ந்த இரு அண்டை நாடுகளான இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவை இந்தியாவுடன் மிகவும் நெருங்கி வருகின்றன. மக்கள் தீர்ப்பைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, தீவு நாடுகளான இந்த இரு நாடுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டது, நமது அண்டை நாடுகளுக்கு இந்த அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு மற்றும் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடுகளின்போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சீனாவுடனான உறவு வலுவடைந்துள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் விவகாரத்தில், பாகிஸ்தான் நாடு சர்வதேச சமுதாயத்தில் மேலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, உலகின் எந்தப் பகுதியிலும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாகும். பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றத்தால், இந்தியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு அரசு நிறைவேற்றக்கூடாது என சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, குல்பூஷண் ஜாதவின் உரிமைகளுக்காக நமது அரசு எந்த அளவுக்கு வலுவாக வாதிட்டுள்ளது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது.

அடுத்த ஆண்டு, அதாவது 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாட்டை எதிர்நோக்கி சில கடினமான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கு பெறவும், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளுக்கும் நமது அரசு உதவி செய்துள்ளது. கேலோ இந்தியா போட்டிகள் மூலம், திறமைமிக்க புதிய வீரர்களை அடையாளம் கண்டு அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறத் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறோம். அடிமட்டத்திலிருந்து, சிறந்த தடகள வீரர்களை உருவாக்கத் தேவையான விளையாட்டுச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விளையாட்டு மேம்பாட்டிற்காக, கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் தேசிய விளையாட்டு கல்வி வாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நமது முயற்சிகள் குறிப்பிட்ட சில விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் விளையாட்டு மற்றும் உடல் தகுதியை ஏற்படுத்த வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். மோடியின் 2.0, பங்கேற்புடன் கூடிய ஆளுகை என்ற மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, குடிமக்களும், அரசும் ஒருங்கிணைந்து பணியாற்றி கவுரவமான இந்தியர் என்ற நிலையில் உருவாக்கவும் பாடுபட்டு வருகிறது.

முன்மாதிரியாகத் திகழும் குடிமகன் எவ்வாறு சிந்திக்கிறார், எப்படி வாழ்கிறார் என்பதற்கு நமது பிரதமர் முன்னோடியாகத் திகழ்கிறார். மாறி வரும் இந்தியா நம் ஒவ்வொருவரிடமிருந்தும் துடிப்பான மற்றும் உறுதிப்பாட்டுடன் கூடிய பங்களிப்பை எதிர்பார்க்கிறது. அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவைப் படைப்போம்.

- மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

Next Story