மோடி, ஒரு உன்னதமான சீர்திருத்தவாதி


மோடி;  அமித் ஷா
x
மோடி; அமித் ஷா
தினத்தந்தி 4 Aug 2019 6:01 AM GMT (Updated: 4 Aug 2019 6:01 AM GMT)

வரலாற்றில் சில தினங்கள் நிலைத்து நின்றுவிடும். அந்த வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் நீண்டகால வரலாற்றில் இந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி நிலைத்துவிட்டது.

அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் மசோதா, மற்ற பல மசோதா போன்ற மசோதா அல்ல. ஒரு வரலாற்றுப் பிழையை திருத்திய மசோதா அது. இஸ்லாமிய பெண்களுக்கு கவுரவத்தையும், மரியாதையையும் மீட்டெடுத்த மசோதா அது. பாலின சமத்துவத்தை நிலைநாட்டிய மசோதா அது.

எதிர்க்கட்சிகளிடம் இருந்து தடைகள் வந்த போதிலும், சமூக சீர்திருத்தம் பற்றி அளித்த வாக்குறுதியை நோக்கி அர்ப்பணிப்புடன் மோடி அரசு தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் மசோதாவாக முத்தலாக் மசோதா அமைந்துள்ளது. முத்தலாக் என்ற பழக்க வழக்கத்தின் தாக்குதலுக்கு ஆளாகி ஊமையாகிப் போயிருந்த இஸ்லாமியப் பெண்களுக்கு தற்போது இந்த மசோதா, சட்ட ரீதியான பாதுகாப்பை அளித்துள்ளது.

அந்த மசோதா நிறைவேறும் போது மாநிலங்களவையிலும், நாடாளுமன்றத்தின் வெளியிலும் பலர் பல முக்கிய கருத்துகளைக் கூறினார்கள். அவை, இந்தியாவில் பெண்களுக்கு மதிப்பு, மரியாதை, கவுரவத்தை அளிக்க நரேந்திர மோடியின் அரசு எடுத்த இடைவிடா முயற்சியை எடுத்துக்காட்டின. அதோடு காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்திலான மற்றொரு தன்மை அப்பட்டமாக வெளியே வந்தது. சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டுமே அந்தக் கட்சி பயன்படுத்துவது நன்றாக புலப்பட்டது.

மற்ற கட்சியினரை தன் பக்கம் சேர்த்துக்கொள்ளும் காங்கிரசின் திறன் குறைந்துள்ளதும் காணப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சமூக நலனுக்காக ஒரு அரசு தன்னை அர்ப்பணித்து செயல்படுகிறது என்றால், அதை மற்ற கட்சிகள் ஆதரிக்கும் என்பது இயற்கையானது. இதுவே நரேந்திர மோடியின் அரசு. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளிடம் இருந்தும் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஒரு தேசம் என்ற வகையிலும், சமுதாயம் என்ற நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களில் அரசியல் மாச்சரியங்களை மறந்து, பாகுபாடற்ற ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.

முத்தலாக் மசோதாவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை, சமீபகால இந்திய அரசியல் முப்பட்டகக் கண்ணாடி மூலம் பார்த்து ஆராய வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்டிருந்த கட்சி காங்கிரஸ். இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான வரலாற்றுப் பிழையை திருத்துவதற்கு ஷா பானோ வழக்கு மூலமாக காங்கிரசுக்கு அப்போது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. 1985-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பெண் ஷா பானோவுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து, ஷரியத் சட்டப்படி ரூ.500-ஐ மாதந்தோறும் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவர் என்று தீர்ப்பளித்தது.

ஆனால் அப்போதிருந்த ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, முஸ்லீம் மதகுருவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த முடியாத வகையிலும், முஸ்லீம்களின் ஓட்டுக்களை கவர்ந்துகொள்ளும் வகையிலும் சட்டம் ஒன்றை இயற்றியது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஆதரித்த, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்த ஆரிப் முகமது கான், அரசின் இந்த முடிவை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதாக ஆரிப் முகமது கானை ராஜீவ்காந்தி நம்பச் செய்தார். பின்னர் அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது நரேந்திர மோடி அதை கையில் எடுத்த பிறகும், காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கம் கொண்ட இரட்டை நிலையில் மாற்றம் ஏற்படவில்லை.

அக்கட்சியின் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இரட்டை நிலை மற்றும் பிரித்தாளும் அரசியல், தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மசோதாவில் காங்கிரஸ் காட்டிய எதிர்ப்பு, ஓட்டு வங்கி அரசியலைத்தான் வெளிப்படுத்தியது. முத்தலாக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இந்த சட்டம், இதுபோன்ற அரசியலுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது.

முத்தலாக் முறையை பின்பற்றுவதை தடை செய்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் தீர்ப்பளித்திருந்தது. முத்தலாக்-க்கு எதிரான சட்டம் தேவையா என்று கேள்வி எழுப்புகிறவர்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகி இருந்த நூற்றுக் கணக்கான வழக்குகளை மறந்துவிட்டார்கள். நியாயம்-நீதியற்ற முறைகளை நீக்குவதற்கு கண்டிப்பான சட்டங்கள் அவசியம் தேவையாக உள்ளன. இது இஸ்லாத்துக்கு எதிரான சட்டம் இல்லை என்பதுதான் மிகப் பெரிய உண்மை. ஏனென்றால், பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 19 நாடுகள், வாய்மொழியாக விவாகரத்தைச் சொல்லி உடனடியாக பிரிந்து செல்லும் வழக்கத்தை ஏற்கனவே தடை செய்துள்ளன.

முத்தலாக்-க்கு எதிராக நீண்டகால போராட்டத்தில் இருந்த பெண்கள் யாருக்குமே அரசியல் நோக்கம் இல்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தங்களுக்கு நேர்ந்த அநீதியை எதிர்த்து போராடுவதற்கு தைரியத்தோடு நின்ற சாதாரணப் பெண்கள் அவர்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க தீர்க்கமான முடிவை எடுத்து, இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றியைப் பெற்றுள்ளனர். தற்போது அதில் சட்டத்தை இயற்றியதையடுத்து அவர்களின் போராட்டத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை எங்கள் அரசு கொடுத்துள்ளது. இதுபோன்ற போராட்டத்துக்கு சரியான திசையில் ஆதரவை வழங்குவது, அரசியல் கட்சிகளுக்கும், சட்டங்களை இயற்றுபவர்களுக்கும் கடமையாகும்.

முஸ்லீம் சமுதாயத்துக்கு மட்டும்தான் சட்டம் பொருந்தும் என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் விவாதமும் அடிப்படையற்றதாகும். சமுதாயத்தை சீரமைப்பதற்குத்தான் சுதந்திர இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவ திருமணச் சட்டம், குழந்தைகள் திருமண தடைச் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம் போன்றவை எல்லாம் சமுதாயத்தை சீர்படுத்தும் சட்டங்களுக்கான உதாரணங்களாகும்.

ஆனால் சந்தர்ப்பவாத அரசியலும், குறுகிய கண்ணோட்ட அரசியலும் இதை ஏற்க மறுக்கும். முத்தலாக் ஒரு கிரிமினல் குற்றமா? என்று கேள்வி கேட்பவர்கள், இந்து சமுதாயம் தொடர்பான சில நடைமுறைகளை மிகக் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுவதை, வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

முத்தலாக் முறையை தடை செய்து சட்டம் இயற்றிய நரேந்திர மோடியின் அரசு, புகழப்படுவதற்கு தகுதியான அரசு. பல்வேறு பெண்களின் முன்னேற்றத்துக்காக போராடிய ராஜாராம் மோகன்ராய், ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் ஆகியோர் வரிசையில் நரேந்திர மோடியும் சமுதாய சீர்திருத்தவாதியாக இடம் பிடிப்பார் என்பது உறுதி.

- அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி.

Next Story