அங்கோர்வாட் கோவில்: கல்லிலே கலைவண்ணம் - பிரமிக்க வைக்கும் பிரமாண்ட ஏரிகள்


டோன்லே சாப் ஏரியில் மிதக்கும் வீடுகள்; ‘மேற்கு பேரே’ ஏரியின் தோற்றம்
x
டோன்லே சாப் ஏரியில் மிதக்கும் வீடுகள்; ‘மேற்கு பேரே’ ஏரியின் தோற்றம்
தினத்தந்தி 4 Aug 2019 8:54 AM GMT (Updated: 4 Aug 2019 8:54 AM GMT)

கம்போடியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கலை அழகு மிக்க கோவில்களைப் பார்ப்பதற்கும் மேலாக, கம்போடியாவில் அனைவரும் பார்த்து வியக்க வேண்டிய அம்சம், அந்தக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட மிக ஆச்சரியமான நீர்ப்பாசன திட்டங்கள் தான் என்கிறார், எலிசபெத் மூர்.

எலிசபெத் மூர், லண்டன் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராக இருப்பவர்.

இவர், 1997-ம் ஆண்டு கம்போடியாவுக்குச் சென்று, அங்கோர் நாகரிகத்தின் நீர் மேலாண்மை குறித்து ரேடார் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கம்போடிய நாட்டின் நீர்ப்பாசன நிபுணர்கள் அங்கே வியக்கத்தக்க அளவில் திட்டங்களை வகுத்து அதனை நேர்த்தியாகச் செயல்படுத்தி இருந்ததைப் பார்த்து வியந்தார்.

எனவே தான், ‘கம்போடிய கோவில்களைவிட அங்கு இருந்த நீர்ப்பாசன திட்டங்களே வியக்கத்தக்கவை’ என்று அவர் கருத்து தெரிவித்தார்.

9 மற்றும் 10-வது நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை 30 ஆயிரம் மட்டுமே. ஆனால் அதே காலகட்டத்தில் அங்கோர் நகரில் 10 லட்சம் பேர் வசித்தார்கள் என்ற ஆய்வாளர் களின் புள்ளி விவர தகவல், அங்கோர் நாகரிகம் எந்த அளவுக்கு செல்வச்செழிப்புடன் முன்னேறி இருந்தது என்பதற்குச் சாட்சி ஆகும்.

அப்போது இருந்த 10 லட்சம் மக்களுக்கும் தேவையான தண்ணீர், அந்த மக்களுக்கான உணவு உற்பத்தி செய்ய விவசாயத்துக்கு பயன்படும் தண்ணீர் ஆகியவை கடுமையான கோடை காலத்திலும் கூட எந்த சிக்கலும் இல்லாமல் சீராக வினியோகிக்கப்பட்டு இருந்தது என்பது இப்போதைய பொறியாளர்களையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், அந்தக் காலத்தில் கம்போடியர்கள் நீர்ப்பாசன திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது எப்படி என்ற ஆய்வுகளை தொடர்ந்து நடத்துகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் குறிப்பாக தமிழ்நாட்டுடன் ஏற்பட்ட தொடர்பால் கம்போடிய மன்னர்கள் கற்றுக்கொண்ட முக்கியமான அம்சங்களில் சிற்பக் கலையும், நீர்ப்பாசன திட்டங்களும் அடங்கும்.

நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவது பற்றிய அறிவை, தமிழர்களிடம் இருந்தே கம்போடியர்கள் கற்றுக்கொண்டனர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏராளம் கிடைத்து இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பல்லவர்கள் ஆட்சியின்போது நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்து வினியோகம் செய்ய பல இடங்களிலும் பெரிய ஏரி, குளங்கள் அமைக்கப்பட்டன.

அவ்வாறு கட்டப்பட்ட ஏரிகள், ‘தடாகம்’ என்று அழைக்கப்பட்டன. மன்னர்கள் கட்டிய தடாகங்கள், அவர்களது பெயராலேயே அடையாளப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ள ராணி சாருதேவி செப்பேடு, அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஏரி, ‘ராஜ தடாகம்’ என அழைக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவ மன்னரான முதலாம் மகேந்திரவர்மன் (600-635) கட்டியது ‘மகேந்திர தடாகம்’ என்றும், முதலாம் பரமேஸ்வரவர்மன் (691-728) கட்டியது ‘பரமேஸ்வர தடாகம்’ என்றும் அழைக்கப்பட்டது.

பல்லவ மன்னர்களுடன் தொடர்பு வைத்து இருந்த கம்போடிய மன்னர்கள், தமிழகத்தில் இருந்தது போன்ற ஏரிகளைக் கம்போடியாவிலும் கட்ட தீர்மானித்ததோடு, அவ்வாறு கட்டப்படும் ஏரிகளுக்கு தமிழகத்தில் உள்ளது போன்ற பெயரையே வைக்கவும் முடிவு செய்து இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

கம்போடியாவின் தலைநகராக இருந்த அங்கோர் நகரில் மொத்தம் 4 பெரிய ஏரிகள் கட்டப்பட்டன. அவற்றின் பெயர்களைப் பார்த்தாலே, பல்லவ மன்னர்களின் தாக்கம் கம்போடியாவில் எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அங்கு கட்டப்பட்ட ஏரிகளின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ‘தடாகம்’, ‘பேரேரி’ என்ற தமிழ்ச்சொற்கள், தமிழக மன்னர்களின் தாக்கத்திற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.

கம்போடியாவில் உள்ள ஒரு ஏரியின் பெயர் ‘இந்திர தடாகா’ (‘தடாகம்’ என்பது தான் கம்போடியர்களால் ‘தடாகா’ என்று குறிப்பிடப்பட்டது).

8-வது நூற்றாண்டில் கம்போடியாவின் மன்னராக இருந்த இந்திரவர்மன் (877-889), கட்டிய முதல் ஏரி இது தான். அந்த ஏரி அவரது பெயரால் ‘இந்திர தடாகம்’ என அழைக்கப்பட்டது.

(இந்த மன்னரின் காலத்தில் தான் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிற்பிகளைக் கொண்டு கம்போடியாவில் கோவில்கள் கட்டும் வழக்கம் அதிக அளவில் கடைப்பிடிக்கப்பட்டது).

அந்த நாட்டில் உள்ள மற்றொரு ஏரியின் பெயர் ‘யசோதர தடாகா’. கி.பி.900-ம் ஆண்டில் மன்னர் யசோவர்மன் இந்த பிரமாண்ட ஏரியைக் கட்டினார்.

அங்கோர் நகரின் கிழக்குப் பகுதியில் இருப்பதால் இந்த ஏரி இப்போது ‘கிழக்கு பேரே’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஏரிகள் ‘பேரேரி’ என்று அழைக்கப்பட்டன. கண்டராதித்தப் பேரேரி, சுந்தரசோழப் பேரேரி, வீரநாராயணப் பேரேரி என்று பல ஏரிகள் கட்டப்பட்டன.

இதனைப் பின்பற்றியே கம்போடியாவில் கட்டப்பட்ட ஏரிகள் ‘பேரேரி’ என்ற பெயரைப் பெற்று இப்போது ‘பேரே’ என்று விளிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

அங்கோர் நகரின் மேற்குப் பகுதியில், முதலாம் சூர்யவர்மனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஏரி, ‘மேற்கு பேரே’ என்ற பெயரைப் பெற்று இருக்கிறது.

கம்போடியாவின் வடக்குப் பகுதியில் கட்டப்பட்டு ‘வடக்கு பேரே’ என்று அழைக்கப்படும் மற்றொரு ஏரிக்கு ‘ஜெய தடாகா’ என்ற பெயரும் உண்டு.

இந்திர தடாகா, மேற்கு பேரே, யசோதர தடாகா, ஜெய தடாகா ஆகிய நான்கு பெரிய ஏரிகளைத் தவிர மேலும் ஏராளமான சிறிய குளங்களும் கம்போடியாவில் கட்டப்பட்டு நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டன.

கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நீர் ஆதாரமாகக் கருதப்படுவது ‘டோன்லே சாப்’ எனப்படும் ஏரி ஆகும். இந்த ஏரி கடல் போலக் காட்சி அளிக்கிறது.

சியம் ரீப் நகருக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஏரி, ஆசியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி என்ற சிறப்பைப் பெற்றது. 16 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து பரந்து கிடக்கும் இந்த ஏரியின் அதிக பட்ச நீளம் 250 கிலோ மீட்டர். அகலம் 100 கிலோ மீட்டர். ஏரியின் அதிக பட்ச ஆழம் 33 அடி.

மிகப்பிரமாண்டமான இந்த ஏரியில், ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மிதக்கும் வீடுகளைக் கட்டிக்கொண்டு அங்கேயே நிரந்தரமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். அங்குள்ள மிதக்கும் வீடுகளின் தொகுப்புகள், சிறு, சிறு கிராமங்கள் போலக்காட்சி அளிக்கின்றன.

அந்த ஏரியில், மிதக்கும் தேவாலயம் ஒன்றும், கூடைப்பந்து மைதானம் ஒன்றும் இருக்கின்றன என்பது கூடுதல் அதிசய செய்தி.

நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள், அந்த மிதக்கும் கிராமங்களுக்கு படகுகள் மூலம் சென்று, அங்குள்ள உணவு விடுதிகளில் சாப்பிடுவதும், கடைகளில் பொருட்களை வாங்குவதும் வித்தியாசமான காட்சிகளாகக் காணப்படும்.

ஆனால் இந்த ஏரி, அங்கோர் நகரில் இருந்து தரைமட்டத்திற்கு கீழே இருப்பதாலும், அங்கு இருந்து தண்ணீரை மேல் மட்டத்திற்குக் கொண்டு வரும் தொழில் நுட்பத்தை அப்போதைய கம்போடியர்கள் அறிந்திராத காரணத்தாலும் அந்த ஏரியில் இருந்து அங்கோர் நகருக்குத் தண்ணீர் கொண்டு வரப்படவில்லை.

அங்கோர் நகரில் கட்டப்பட்ட ஏரிகள் பெரும்பாலும் மழைத்தண்ணீரை நம்பி இருந்தன. மழைக் காலங்களில் கிடைக்கும் மழைத்தண்ணீர், அந்த ஏரிகளில் சேகரித்து வைக்கப்பட்டு, வறட்சி காலங்களில் வயல்களுக்கு வினியோகிக்கப்பட்டன. டோன்லே சாப் ஆற்றுத்தண்ணீரும் இந்த ஏரிகளில் சேமித்து வைத்து வழங்கப்பட்டன.

கம்போடிய மக்களின் முக்கியமான உணவு, அரிசியும் மீனும் ஆகும். அவர்களுக்குத் தேவையான மீன்கள் டோன்லே சாப் ஏரி மூலம் அபரிமிதமாகக் கிடைத்தன.

அரிசிக்காக அவர்கள் அதிக அளவு வயல்களில் நெல் விவசாயம் செய்தனர்.

அனைத்து வயல்களிலும் முப்போகம் விளையும் வகையில், தண்ணீர் முறைப்படி வினியோகம் செய்யப்பட்டது தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கம்போடியர்களின் வியத்தகு சாதனையாக இப்போது போற்றப்படுகிறது.

விவசாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக கம்போடிய மன்னர்கள், தமிழக மன்னர்களைப் பின்பற்றி கட்டிய சில ஏரிகள், மிகப்பிரமாண்டமாகக் காட்சி அளிக்கின்றன.

‘யசோதர தடாகா’ எனப்படும் கிழக்கு பேரேரி 7.5 கிலோ மீட்டர் நீளமும் 1.8 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. சியம் ரீப் ஆறு மூலம் இதற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. 5 கோடி கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரி, இப்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது கிடையாது.

‘மேற்கு பேரேரி’ என்பது தான் கம்போடியாவில் உள்ள ஏரிகளிலேயே மிகப்பெரியது. இந்த ஏரியின் நீளம் 8 கிலோ மீட்டர். அகலம் 2.2 கிலோ மீட்டர். 1,760 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த ஏரியில் 5½ கோடி கன மீட்டர் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இப்போதும் இந்த ஏரி செயல்பாட்டில் உள்ளது.

‘சீ பிளேன்’ எனப்படும் விமானங்கள், தண்ணீர் பரப்பில் இருந்து புறப்பட்டுச் செல்லும். தண்ணீர் பரப்பிலேயே வந்து இறங்கும். அத்தகைய விமானங்கள் இந்த ஏரியின் தண்ணீர் பரப்பில் இருந்து புறப்பட்டுச் செல்வதையும், அந்த தண்ணீரில் வந்து இறங்குவதையும் அதிசயமாகப் பார்க்கலாம்.

இத்தகைய பிரமாண்ட ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அந்தக்காலத்து மன்னர்கள் எவ்வாறு வயல்களுக்கு முறை வைத்து வினியோகம் செய்தார்கள் என்ற தொழில்நுட்பம் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை.

ஏரிகளில் இருந்து கால்வாய்கள் மூலமாக தண்ணீர் அனுப்பப்பட்டு இருக்க வேண்டும். அந்தக்கால்வாய்கள் எங்கே அமைந்து இருந்தன? அவற்றின் மூலம் தண்ணீரைக் கட்டுப்படுத்தி அனுப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பவற்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

1992-ம் ஆண்டு கிறிஸ்டோப் போட்டீர் என்பவர் கம்போடியாவில் கோவில்கள் பற்றிய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர், கம்போடியர்களின் நீர் மேலாண்மையில் மனதைப் பறிகொடுத்து, அது பற்றிய ஆய்வில் ஈடுபடுவதற்காக அங்கோர் நகர் முழுவதும் மோட்டார் சைக்கிளிலும் நடந்து சென்றும் பார்வையிட்டார்.

அப்போது அவர், பல கால்வாய்கள் அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டறிந்து அறிக்கையாக வெளியிட்டார்.

2000-ம் ஆண்டில் பிளெட்சர், டேமியன் இவான்ஸ் ஆகியோர் ‘நாசா’வின் ரேடார் உதவியுடன் ஆய்வு நடத்தி, மண்ணுக்குள் மறைந்து கிடந்த கால்வாய்கள் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டனர்.

கம்போடியர்களின் நீர் மேலாண்மை குறித்து உலக அளவில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கம்போடிய மன்னர்கள் நீர்ப்பாசன முறைக்கு பயன்படுத்திய தொழில் நுட்பம் என்ன என்பது இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படலாம்.

ஆனால், அந்தத் தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது பழங்காலத் தமிழர்களின் செயல்பாடுகள் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

விவசாயத்திற்குத் தேவையான ஏரிகளை அமைக்கும் முறையை தமிழர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது போலவே, சிற்பக்கலை, இந்தியாவில் பிரபலமாக இருந்த சமஸ்கிருத மொழி, லிங்க வழிபாட்டுடன் கூடிய ஆன்மிகம் ஆகியவற்றையும் ஏற்றுக்கொண்ட கம்போடிய மன்னர்கள், அவற்றை அப்படியே பயன்படுத்தாமல், அவற்றில் தங்களது முத்திரையையும் பதித்து சாதனை படைத்தார்கள் என்பதை, கம்போடியாவில் உள்ள கோவில்களில் காணமுடிகிறது.

அங்கோர்வாட் கோவில் தனியாருக்கு விற்பனையா?

அங்கோர்வாட் உள்பட அங்கோர் நகரில் உள்ள அனைத்து கோவில்களையும் பார்க்க வெளிநாட்டினரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் சோக் கோங் என்பவரின் ‘சோகிமெக்ஸ்’ என்ற நிறுவனம் இதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கோரில் உள்ள கோவில்கள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகையாக கொடுக்கப்பட்டு விட்டது என்று கம்போடியாவில் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

நாட்டின் தேசியக்கொடியில் இடம் பெற்ற அங்கோர் வாட் கோவிலை எப்படி தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கலாம் என்று கம்போடிய மக்கள் போர்க்குரல் எழுப்பினார்கள்.

அப்போது, அங்கோர்வாட் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசு அமைப்பான ‘அப்சரா’ என்ற நிறுவனம் ஒரு விளக்கம் அளித்தது.

‘அங்கோர்வாட் கோவில் யாருக்கும் விற்கப்படவில்லை. வாடகைக்கும் விடப்படவில்லை. கோவில் களைப் பார்ப்பதற்கான டிக்கெட் விற்கும் பொறுப்பு மட்டும் சோகிமெக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயில் 60 சதவீதம் அரசுக்கு வழங்கப்படுகிறது’ என்று அப்சரா நிறுவனம் அறிவித்த பிறகே இந்தப் பிரச்சினை ஓய்ந்தது.

அங்கோரில் உள்ள கோவில்களைப் பார்ப்பதற்கான டிக்கெட் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 450 கோடி வசூலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது பற்றிய தகவலை அடுத்துப் பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)

Next Story