சிறப்புக் கட்டுரைகள்

தற்கொலையை தவிர்ப்போம் + "||" + Let’s avoid suicide

தற்கொலையை தவிர்ப்போம்

தற்கொலையை தவிர்ப்போம்
தற்கொலை என்பது குற்றமா? அல்லது தனிப்பட்டவர்களின் உரிமையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா? பிரச்சினைகளின் தொடக்கமா? அதைத் தவிர்க்க முடியுமா? தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக எல்லா வயது தரப்பினரிடையே நடந்தாலும் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக டீன்ஏஜ் மாணவர்களிடம் நடப்பது தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல நாட்டுக்கும் நன்மை பயப்பதல்ல. இன்று உலக நாடுகளில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பது, எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இன்றைய சூழலில் இளைஞர்களை மிகவும் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளை பட்டியலிட்டால் அவை போதைப் பொருள்கள், விபத்துகள், தற்கொலைகள், சமூக ஊடக சீர்கேடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில் விபத்துகளும், தற்கொலைகளும் உடன் கொல்லிகள்; போதைப் பொருள்களும், சமூக ஊடகங்களும் மெதுவாகக் கொல்லும் காரணிகள்.

இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ற வேலை இல்லை என்ற குறை இருந்து வருகிறது. அதற்கான முக்கியமான காரணம் இளைஞர்களின் படிப்பிற்கும், வேலை அமர்த்தப்படுவதற்குத் தேவையான திறமைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.

வேலை கொடுப்பவர்கள்; எதிர்பார்க்கும் திறமைகள் இன்று வேலை தேடுபவர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்றால் அது குறைவு.

தற்கொலையைத் தேடி செல்வோர் பலவகைவாழ்வை வாழ்வாய் வாழ்ந்தவர்கள் கூடக் கடைசிக் காலத்தில் நோய் நொடியால் அவதிப்படும் போது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். இளம் வயது பாலின ஈர்ப்பால் இணைந்தவர்கள் உறவின் விரிசலின் போது, உறவை ஒட்ட வைக்க உற்றார் உறவினர் இன்றி ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கனவால் வரைந்த வாழ்வு கானல் நீராய் காணாமல் செல்லும் போது கடைசி ஆசையாய் தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு.

கல்லூரி மாணவர்களின் சிகை அலங்காரம், உடை பற்றி சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கின்றன. அது தனிமனித உரிமை, அவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடாத வரைக்கும் அதைபற்றிய கவலைத் தேவையில்லை, மேலும் உடை மற்றும் சிகைப்பற்றிய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மாணவர்களுடைய கல்வி திறமையை எந்த அளவுக்கு மேம்படுத்தும் என்பது விவாதத்திற்கு உரியது. அதே நேரம் ஒழுக்கம் என்ற பெயரில் அடக்கு முறையும், மனித உரிமை மீறல்களும் ஏற்படும்போது சில மாணவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தற்கொலை இளைஞர்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக இளம் சிறார்கள் அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் மத்தியில் நடப்பது சமூகத்தில் அக்கறைக் கொண்ட அனைவருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு?

வேலைக் கிடைக்காமல் விரக்தியால் தற்கொலை செய்து கொள்பவர்கள் முதலில் தங்களை வேலைச்சந்தைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்கிறோமா என்று நினைத்து பார்த்து அதனை நிவர்த்தி செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும் அல்லது தான் அதே வேலைக்காக ஒரு நபரைத் தேடுவதாக இருந்தால் இந்த தகுதிகள் மற்றும் திறமைகள் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுப்போமா என்ற கோணத்தில் பார்த்தால் தம்முடையத் தகுதியை மேம்படுத்த என்ன செய்யலாம் என்ற ஒரு தெளிவு வரும். அதேபோல கல்லூரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிக்கும் போதே நேரம் கிடைக்கும்போது படிப்போடு தொடர்புடைய அல்லது எந்த வேலைக்கு திட்டமிடுகிறீர்களோ அது தொடர்பானப் பயிற்சியில் சேர்வதோ அல்லது மேலை நாடுகளில் இருப்பது போல படிக்கும் போதே பகுதி நேர வேலைக்குச் செல்வதோ படித்தவுடன் வேலைக்கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

பெரும்பாலான இளைஞர்கள் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பது சில நேரங்களில் ஏமாற்றத்தைத் தரலாம். அதுபோன்ற நேரங்களில் பெரு நகரங்களுக்கு வேலை தேடி செல்வது தவிர்க்க முடியாததாகும். நான் பி.எஸ்சி(விவசாயம்) முடித்தவுடன் 2500 ரூபாய் சம்பளத்திற்குதான் 1996-ல் வேலைக்குச் சேர்ந்தேன். பின்புத் தேர்வு எழுதி உதவித்தொகை மூலம் எம்.எஸ்சி (விவசாயம்)படிப்பதற்குச் சென்றேன். படித்து முடித்த பின் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒருவருடைய வேலைக்குச் செல்லும் திறனை பெருமளவில் பாதிக்கும்.

தற்கொலை உணர்வுகள் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுடன் நேரம் செலவிடுதல் என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. ஆனால் ஒரு குழுவாக செய்தால் எளிதாக இருக்கும். எப்படி குழு ஒருவரை ஒரு கெட்ட பழக்கத்திற்கு கொண்டு செல்வதற்கு அழுத்தம் கொடுக்கிறதோ அதே போல் அவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கும் உதவி செய்ய முடியும். குறிப்பாக கல்லூரிகளில் இதை முயற்சிக்கலாம்.

தற்கொலை என்பது தனிப்பட்ட மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதைத் தடுப்பதற்கான தார்மீகப் பொறுப்புள்ளது. ஏனெனில் ஒவ்வொருத் தற்கொலைக்கு பின்னும் ஒரு கண்ணீர் கதை இருக்கிறது. அந்தக் கதையில் நிரம்ப கதாபாத்திரங்கள் சமூகக் குற்றவாளிகளாக வலம் வருகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்குப் பின்னால் ஒரு காதலனின் நடிப்போ அல்லது பெற்றோர்களின் பாசமற்ற நடவடிக்கையோ கண்டிப்பாக இருக்கிறது. இந்தக் கதாபாத்திரங்கள் தங்கள் தவறுகளைத் திருத்தி கொண்டு தற்கொலை எண்ணம் கொண்டவர்களை பாதுகாக்க வேண்டும்.

குறைந்து வரும் கூட்டுக் குடும்பப் பாரம்பரியத்தால் நாம் இழந்த அன்பு மற்றும் ஆதரவைக் கொடுப்பது நண்பர்கள், சக ஊழியர்கள், வகுப்புத் தோழர்கள், தோழிகள், ஆசிரியர்கள் என அனைவரின் கடமையாகும்.

சமூகவலைத்தள காதல் தோல்விகள் இன்று ஒரு பூதாகாரமானப் பிரச்சினையாக உருவாகி ஆண்களும் பெண்களும் தங்களை மாய்த்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. ஒருசிலக் கல்லூரிகள் உடனடியாக அலை பேசித் தடைச் சட்டத்தை அமல்படுத்திகிறார்கள். முழுமையாகத் தடை செய்வதை விட முதிச்சியான உபயோகத்தை பலப்படுத்துவது முக்கியம். இளைஞர்களே!தவமாய்ப் பெற்ற வாழ்வு உன்னுடையது. வேண்டுமென்றால் உன் தாயைக் கேட்டுப்பார்.. தற்கொலை செய்து கொள்ளும் ஒருசிலருக்கு நடுவே வாழ்க்கையை வென்றுக் காட்டி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அந்த ஏராளமானோர்களில் ஒருவராகிய நாம் ஏன் தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்ளக் கூடாது. “தத்தெடுப்போம்; தற்கொலையைத் தடுப்போம்”.

- வே.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்., காவல்துறை துணைத் தலைவர், திருச்சி சரகம்