வட்டி குறைப்பு ஊக்கம் அளிக்கவில்லை : சென்செக்ஸ் 286 புள்ளிகள் இழப்பு ; நிப்டி 93 புள்ளிகள் இறங்கியது


வட்டி குறைப்பு ஊக்கம் அளிக்கவில்லை : சென்செக்ஸ் 286 புள்ளிகள் இழப்பு ; நிப்டி 93 புள்ளிகள் இறங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2019 10:07 AM GMT (Updated: 8 Aug 2019 10:28 AM GMT)

புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 93 புள்ளிகள் இறங்கியது.

மும்பை

ரெப்போ ரேட்

வங்கிக்களுக்கான கடன் வட்டி விகிதங்களை பாரத ரிசர்வ் வங்கி 0.35 சதவீதம் குறைத்துள்ளது. எனவே ரெப்போ ரேட் 5.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.15 சதவீதமாகவும் குறைந்துள்ளது. எனவே வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. எனினும் இது பங்குச்சந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இல்லை.

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் மற்றும் சர்வதேச நிகழ்வுகளால் பங்கு வர்த்தகம் படுத்தது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து இருப்பது போன்றவற்றால் பங்குகளில் இருந்து அதிக அளவு முதலீடு வெளியேறியது.

அந்த நிலையில், மும்பை சந்தையில் பல்வேறு துறை குறியீட்டு எண்களும் சரிவடைந்தன. அதில் உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 2.67 சதவீதம் குறைந்தது. அடுத்து மோட்டார் வாகன துறை குறியீட்டு எண் 2.10 சதவீதம் இறங்கியது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் இந்துஸ்தான் யூனிலீவர், யெஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, இண்டஸ் இந்த் வங்கி, டெக் மகிந்திரா உள்ளிட்ட 8 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் மகிந்திரா அண்டு மகிந்திரா, டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, வேதாந்தா, ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி, மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல் உள்பட 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 286.35 புள்ளிகள் சரிவடைந்து 36,690.50 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 37,104.79 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 36,610.57 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,109 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,372 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 160 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,343 கோடியாக உயர்ந்தது. கடந்த செவ்வாய்க் கிழமை அன்று அது ரூ.2,161 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 92.75 புள்ளிகள் குறைந்து 10,855.50 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 10,975.65 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 10,835.90 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story