இந்திய நூலக அறிவியலின் தந்தை


இந்திய நூலக அறிவியலின் தந்தை
x
தினத்தந்தி 12 Aug 2019 6:29 AM GMT (Updated: 12 Aug 2019 6:29 AM GMT)

இன்று (ஆகஸ்டு 12-ந் தேதி) இந்திய நூலக அறிவியலின் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்தநாள்.

இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர். இந்தியாவில் நூலகத்துறையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். தனது சொத்துகளையும் தானம் செய்தவர். எனவே தான் அவர் இந்திய நூலக அறிவியல் ஆவணக்காப்பக மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். ரங்கநாதன் 1892-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் ராமாமிர்தம், சீதாலட்சுமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

1924-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகராக பணியில் சேர்ந்தார். இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழக நூலகம் சமூக வாசிப்பு நடுவங்களாக செயல்படுவதை கண்டு அகம் மகிழ்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகவியல் பள்ளியில் நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார். அப்போது பல நூல்களை பார்வையிட்டு அங்கு நூலகங்கள் செயல்படும் முறைகளை கற்றுக்கொண்டார். நாடு திரும்பியபின் சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகத்தை தனிமனிதனாக முன்னின்று சீர்படுத்திய ரங்கநாதன் தான் உருவாக்கிய கோலன் நூற்பகுப்பு முறையை அதில் வெற்றிகரமாக பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை பல்வேறு துறைகள் வாரியாக பிரித்து எளிதில் அடையாளம் கண்டு எடுக்கும் வகையில் அவற்றை அலமாரிகளில் அடுக்கி அவற்றுக்கு வகையமைப்பு பட்டியலையும் தயாரித்தார்.

நூலகம் அனைத்து மக்களுக்கும் அறிவை வளர்க்கும் இடம் என்பதை உணர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் ரங்கநாதன். குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர், கல்வியாளர்கள் என பல பிரிவினரும் எளிதில் பயன்படுத்தும் விதமாக நூலகத்தை அமைப்பது எப்படி என்பது குறித்து அங்கு அவர் புரிந்து கொண்டார். நூலக அறிவியலில் அவர் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தன்னுடைய உலகப் புகழ் பெற்ற புத்தகமான “நூலக அறிவியலின் ஐந்து விதிகள்” என்ற புத்தக தொகுதியை 1931-ம் ஆண்டு வெளியிட்டார். இதுவே அவரது முதல் புத்தகம் ஆகும். நூலக அறிவியலின் ஐந்து விதிகள் பின்வருமாறு:-

1. புத்தகங்கள் பயன்படுத்துவதற்கு, 2. ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகம், 3. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசகர், 4. வாசகரின் நேரத்தை பாதுகாத்தல், 5. நூலகம் ஒரு வளரும் அமைப்பு.

புத்தகங்கள் மக்களைச் சென்று சேர்ந்தால் தான் அதிக அளவில் கல்வி வளர்ச்சி உருவாகும் என்கிற அரிய சிந்தனையின் வடிவமாக முதன் முதலாக 1931-ம் ஆண்டில் மன்னார்குடி மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை பிள்ளை என்பவரால் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியினால் ஆன நடமாடும் நூலகத்தினை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தொடங்கிவைத்தார். இதுதான் இந்தியாவில் மாட்டு வண்டியால் ஆன முதல் நடமாடும் நூலகம் ஆகும். அந்த காலகட்டத்தில் வாகன வசதி இல்லாத நிலையில் மாட்டு வண்டியில் நூல்களை அடுக்கிக்கொண்டு மன்னார்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள 98 கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் கும்பகோணம் நகரில் சைக்கிள் சக்கரத்துடன் கூடிய கை வண்டியிலும் நடமாடும் நூலகம் இயங்கியிருக்கிறது. நடமாடும் மாட்டு வண்டி நூலகம் தற்போதும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மேதைகள் தங்கள் வாழ்நாளில் அங்கீகாரத்தை பெற்றதில்லை. அவர்களது சிந்தனைகளையும், செயல்களையும், உலகம் மிகத் தாமதமாக புரிந்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தனது வாழ்நாளிலேயே அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றார். நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பை தொடங்கி அதன் இயக்குனராக பணியாற்றினார். தன் சேமிப்பு பணத்தையும் அதில் செலவிட்டார். ஓய்வுபெற்ற பிறகு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலக அமைப்பை மேம்படுத்தும் வகையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 2 ஆண்டுகள் தனி ஆளாக அங்கிருந்து லட்சம் நூல்களை வகைப்படுத்தினார்.

1935-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னை மாகாணத்தின் நூலக மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய அரும் பணிகளுக்காக “ராவ் சாகிப்” என்கிற பட்டத்தை வழங்கி கவுரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து பத்தாவது ஆண்டான 1957-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் பல்துறை மேதைகளைக் கவுரவிக்கும் வகையில் சில கவுரவ பட்டங்களை ஏற்படுத்தியது. அப்போது முதல் கவுரவ பட்டம் பெறுபவர்களில் ஒருவராக டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் தெரிவு செய்யப்பட்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. 27.9.1972 அன்று எஸ்.ஆர்.ரங்கநாதன் மரணம் அடைந்தார்.

இன்று 127-வது பிறந்தநாள் விழாகாணும் இந்நாளில் “ராவ் சாகிப்” பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகத்துறையில் ஆற்றிய செயற்கரிய செயல்களை இவ்வுலகம் உள்ளவரை மக்களால் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை.

முனைவர் இரா.கோதண்டராமன்,
அரசு கல்லூரி நூலகர், சென்னை.

Next Story